ஆடிச்சுற்று வழிபாடு – இதனை செய்வதால் எவ்வளவு பலன்கள் தெரியுமா?
சங்கரன்கோயிலில் ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் ஆடித்தபசு திருவிழா, சிவனும் விஷ்ணுவும் ஒன்று என்பதை விளக்கும் 10 நாள் விழாவாகும். பார்வதி தேவியின் தவத்தின் பயனாக சங்கரநாராயணர் அவதரித்த தலம் இது. முக்கிய நிகழ்வான ஆடிச்சுற்று நடைபெறுகிறது. அதனைப் பற்றி விரிவாக காணலாம்.

ஆடி மாதம் பிறந்து விட்டாலே நம் அனைவர் மனதிலும் இயற்கையாகவே இறை சிந்தனைகள் மேலோங்க தொடங்கி விடும். பெண் தெய்வங்களின் சக்தி அதிகமாக இருக்கும் என சொல்லப்படும் இந்த மாதத்தில் ஏகப்பட்ட ஆன்மிக விசேஷ தினங்கள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் ஆடித்தபசு பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். சிவனும் விஷ்ணுவும் ஒன்று என்பதை பார்வதி தேவி வேண்டுதலுக்கு இணங்க இறைவன் சங்கர நாராயணராக அவதரித்து காட்சிக் கொடுத்தார். அப்படியான தலம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோயிலில் அமைந்துள்ளது. இந்த பண்டிகை பெரும்பாலான மக்களுக்கு தெரியாது. மிக முக்கியமான ஆன்மிக நிகழ்வை பார்க்க நாம் சங்கரன்கோயில் மட்டுமே செல்ல வேண்டும். அதேசமயம் தென்மாவட்டங்களில் சில கோயில்களில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஹரியும் சிவன்மும் ஒன்று
சங்கரன்கோயிலில் ஈசனாக சங்கர நாராயணரும், அம்பாளாக கோமதியம்மனும் காட்சிக் கொடுக்கிறார்கள். அப்படியான நிலையில் அங்கு 10 நாட்கள் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவார்கள். இறைவன் சங்கர நாராயணராக காட்சி கொடுக்க வேண்டும் என பார்வதி தேவி ஒற்றைக்காலில் ஊசி முனையில் தவமிருந்ததாக சொல்லப்படுகிறது.
Also Read: ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு.. இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
அதனை மெய்ப்பிக்கும் வகையில் சங்கரன்கோயில் ஆடித்தபசு திருவிழாவில் ஆடிச்சுற்று வழிபாடு அனைவராலும் கடைபிடிக்கப்படுகிறது. அதாவது சங்கரன்கோயில் ஆடித்தபசு திருவிழாவின் கொடியேற்றம் தொடங்கி சிகர நிகழ்ச்சியான சங்கரநாராயணராக இறைவன் காட்சி கொடுக்கும் நாளுக்குள் இந்த ஆடிச் சுற்றை நாம் முடித்து விட வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. இதனால் நாம் வேண்டுதல் நிறைவேறுவதுடன் வாழ்க்கையில் சகல வளங்களும் இன்பங்களும் பெற்று வாழ்வோம் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
ஆடிச்சுற்று
ஆடி சுற்று என்பது சங்கரநாராயணர் கோயிலை சுற்றி இருக்கும் வெளிப்பிரகாரத்தை பக்தர்கள் 108 முறை சுற்றுவது தான். இதனை தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப 501, 1001 என்ற எண்ணிக்கையில் சுற்றி வருவார்கள். ஒற்றைக்காலில் கோமதி அம்பாள் கால் வலிக்க தவம் இருந்து எப்படி தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டாளோ, அதேபோல் பக்தர்களும் தங்கள் கால் வலிக்க நடந்து வேண்டும் வேண்டுதல்களை ஈசன் கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்பது ஐதீகமாக உள்ளது.
Also Read: Aadi Sunday: ஆடி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு கூழ் காய்ச்சினால் இவ்வளவு பலனா?
கோமதி அம்மனை மனதார வேண்டி சிறுவர் சிறுமியர் தொடங்கி வயதான ஆண் பெண் வரை அனைத்து வயதினரும் ஆடிச்சுற்று சுற்றி வருவது வழக்கம். இந்த ஆடித்தபசு காண மதுரை தொடங்கி கன்னியாகுமரி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் சங்கரன்கோயிலுக்கு ரயில் சேவையும் உள்ளது. சிவனும், விஷ்ணுவும் இணைந்த கோலத்தில் ஈசனை காண கண்கோடி வேண்டும். அந்த வாய்ப்பை வாழ்க்கையில் மிஸ் பண்ணாதீர்கள் என பல ஆன்மிக அன்பர்களும் தெரிவிக்கின்றனர்.
(ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)