Aadi Thapasu: 2025 ஆடித்தபசு எப்போது?.. அதன் வரலாறு தெரிஞ்சுகோங்க!
ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் அரிய பண்டிகை ஆடித் தபசாகும். சிவனும் விஷ்ணுவும் ஒன்று என்பதை உணர்த்தும் இந்தப் பண்டிகை, சைவ வைணவ இணக்கத்தின் அடையாளமாக விளங்குகிறது. பார்வதி தேவியின் தவத்தின் பயனாக சங்கரநாராயணராக இறைவன் காட்சி கொடுத்த நாள் இதுவாகும். அதனைப் பற்றி அரிந்து கொள்ளலாம்.

பொதுவாக ஆன்மீக மாதமான ஆடியில் பல்வேறு விதமான பண்டிகைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். ஆடி மாதத்தில் மிகவும் முக்கியமான அதே சமயம் அதிக அளவில் அறியப்படாத ஒரு பண்டிகையாக ஆடித்தபசு இருந்து வருகிறது. இந்தப் பண்டிகை தென்மாவட்டத்தில் வெகுமரிசையாக கொண்டாடப்படும். அதாவது அரியும் (பெருமாள்), சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் இந்த பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. சைவ மற்றும் வைணவ நல்லிணக்கத்தை பேணும் வகையில் இறைவன் சங்கரநாராயணராக தோன்றிய நாள் தான் ஆடித்தபசாக அறியப்படுகிறது. இந்நாள் ஆடி மாதத்தில் பௌர்ணமி நாளில் உத்திராட நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு ஆடித்தபசு ஆகஸ்ட் 7ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதன் வரலாறு பற்றி அறிந்து கொள்வோம்.
ஆடித்தபசு வரலாறு
முன்பொரு காலத்தில் சங்கன் மற்றும் பதுமன் என்ற இரண்டு நாக அரசர்கள் தனித்தனியே சிவன் மற்றும் விஷ்ணுவை மட்டுமே உண்மை தெய்வங்கள் என வழிபட்டு வந்தனர். இதனால் அவர்களுக்குள் சிவன் பெரியதா, பெருமாள் பெரியதா என்ற கருத்து வேறூபாடு ஏற்பட்டது. இது குறித்து பார்வதி தேவியிடம் முறையிட்டனர். அவர்களுக்கு உண்மையை உணர்த்த விரும்பிய பார்வதி தேவி பூலோகத்தில் உள்ள புன்னைவனத்திற்கு வருகை தந்தாள்.
Also Read: திருத்தணி முருகன் கோயில் வழிபாடு.. எவ்வளவு பலன்கள் தெரியுமா?
அங்கு ஊசி முனையில் ஒற்றை காலில் நின்று கடும் தவம் செய்து விஷ்ணுவும் சிவனும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி தர வேண்டும் என வேண்டிக் கொண்டார். பார்வதி தேவியின் தவக்கோலத்தை காண தேவர்களெல்லாம் பசுக்களின் வடிவில் வந்து அந்த புன்னைவனத்தில் தங்கினர். அம்பாள் பூமிக்கு வந்ததால் அவளது முகம் நிலா போல பிரகாசித்தது அமாவாசை எப்போது என அறிய கூட இயலாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக அவளுக்கு கோமதி என்ற பெயரும் தேவர்களால் சூட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இறைவன் பார்வதி தேவியின் வேண்டுகோளை ஏற்று சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார். சங்கரநாராயணரின் வலது பக்கத்தில் சிவனுக்குரிய தலையில் கங்கை, பிறை நிலா, அக்னி ஜடாமுடியுடன் கையில் மழு, மார்பில் ருத்ராட்ச மாலை, இடுப்பில் புலித்தோல் ஆகியவை இடம்பெற்று இருந்தது.
Also Read: Aadi Tuesday: பலன்களை அள்ளித்தரும் ஆடி செவ்வாய்.. விரதம் இருப்பது எப்படி?
அதே போல் இடது பக்கத்தில் மகாவிஷ்ணுவுடைய நவமணி கிரீடம், மார்பில் துளசி மாலை, கையில் சங்கு ஆகியவை இருந்தது. சிவனுக்கு சங்கனும், விஷ்ணுவுக்கு பதுமனும் நாகவ வடிவில் குடை பிடிப்பதாக இருந்தது. இவ்வாறு அம்பாளுக்கு சிவபெருமான் சங்கரநாராயணராக திருக்காட்சி கொடுத்த மாதம் ஆடி மாதம் என புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதைத்தான் ஆடித் தபசு என கொண்டாடுகிறார்கள்.
(ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)