புதுமண தம்பதிகளுக்கு இதெல்லாம் கிஃப்ட் கொடுக்காதீங்க!

திருமணங்களில் பரிசளிப்பது வழக்கம் என்றாலும், சில பரிசுகள் தவிர்க்கப்பட வேண்டியவை என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட பொருட்கள், எதிர்மறை ஆற்றலைக் கொண்ட பொருட்களை வாங்கக்கூடாது. அதேபோல் தம்பதியின் விருப்பத்துடன் பொருந்தாத வீட்டு அலங்காரப் பொருட்களையும் பரிசு வழங்கப்பட கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுமண தம்பதிகளுக்கு இதெல்லாம் கிஃப்ட் கொடுக்காதீங்க!

பரிசுகள்

Updated On: 

20 Aug 2025 13:49 PM

பொதுவாக வீட்டின் விசேஷ நிகழ்வுகளில் பரிசுப்பொருட்கள் கொடுப்பதும், பெறுவதும் என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. சொல்லப்போனால் என்ன கொடுக்கப் போகிறார்கள் என காத்திருக்கும் பழக்கமும் வந்து விட்டது. அந்த வகையில் திருமணம் போன்ற சிறப்பு சந்தர்ப்பங்களில், உறவினர்கள் மணமக்களை ஆசீர்வதிப்பார்கள். அத்தகைய தருணங்களில் வெறுங்கையுடன் செல்வதை யாரும் விரும்புவதில்லை. எல்லோரும் திருமணமான அல்லது திருமணமாகும் தம்பதிகளுக்கு ஏதாவது ஒன்றை பரிசளிக்க விரும்புகிறார்கள். அவர்களின் அன்பு இந்த பரிசுகளில் இருப்பதாக நம்பப்படுகிறது. அப்படியான திருமண பரிசாக நீங்கள் என்ன கொடுக்கக்கூடாது என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம்.

இதையெல்லாம் தயவு செய்து கொடுக்காதீங்க

பழைய பரிசுகள்

பொதுவாக நம் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு வரும் உறவினர்கள், நண்பர்கள் நமக்கு பரிசுப்பொருட்கள் கொடுப்பது வழக்கம். அப்படியாக நம்முடைய வீடுகளில் பயன்படுத்தப்படாத பரிசுகள் நிறைய இருக்கலாம். பலர் இந்த பரிசுகளை வேறொருவருக்கு பரிசாகக் கொடுப்பதற்காக சில நேரங்களில் தயார் செய்வார்கள். ஆனால் சுப காரியங்களில் இதுபோன்ற பழைய பரிசுகளை வழங்குவது சிறந்தது கிடையாது.  பரிசு புதியதா அல்லது பழையதா என்பதை  எளிதாகக் கண்டுபிடிக்கலாம். இது புதுமணத் தம்பதிகள் மீது உங்களுக்கு எந்த அன்பும் இல்லை என்றும், உங்கள் மீதான மரியாதையையும் குறைக்கும். அதேசமயம் பிற நேரங்களில் நாம் உபயோகிக்காத பொருட்களை வழங்கலாம்.

Also Read: வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க வாஸ்து டிப்ஸ் இதோ!

எதிர்மறையை உண்டாகும் பொருட்கள்

சில பொருட்கள் எதிர்மறை ஆற்றலைக் கொண்டுவருகின்றன. இது பலருக்கும் தெரியாது. இந்த காரணத்திற்காக தெரிந்தோ தெரியாமலோ திருமணத்தில் எதிர்மறையைப் பரப்பும் பரிசுகளை வழங்குகிறார்கள். உதாரணமாக, கத்தி போன்ற கூர்மையான பொருட்கள் உடைந்த உறவுகளுடன் தொடர்புடையவையாகும். அதேபோல் கடிகாரம் பரிசாக வராமல் எந்த நிகழ்ச்சியும் இருக்காது. ஆனால் அது பிரியாவிடை அல்லது எதிர்மறையின் சின்னமாகும். மேலும் கைக்குட்டை போன்றவையும் கொடுக்ககூடாது.  எனவே, ஒரு பரிசை  கொடுப்பதற்கு முன் அதன் அர்த்தத்தை தெரிந்துக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தப்பட்ட பொருட்கள் 

திருமணப் பரிசாக நம் வீட்டில் முன்னோர்கள் அணிந்த நகைகள் அல்லது பட்டுப்புடவைகளை வழங்குவது நல்ல விஷயம் தான். இவற்றுடன் குடும்ப உணர்வுகள் இணைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், நீங்கள் மணமகனுக்கும் மணமகளுக்கும் நம் வீட்டில் இருப்பவர்கள் பாரம்பரியமாக பயன்படுத்திய பழைய பாத்திரங்கள், ஆடைகளை சென்டிமென்ட் என்ற பெயரில் கொடுக்கவே கூடாது.

Also Read: புது வீடு வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய வாஸ்து விஷயங்கள்!

அழிந்துபோகக்கூடிய பொருட்கள்

சிலர் திருமணப் பரிசாக பூக்கள், பழங்கள், செடிகள் போன்ற அழுகிப் போகும் பொருட்களை வழங்குகிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் உங்கள் பரிசு தம்பதியினருக்கு தங்களது பிசியான கல்யாண நேரத்தில் பயனுள்ளதாக இருக்காது. மேலும் மணமகனும், மணமகளும் உங்கள் பரிசைப் பாதுகாக்கவோ அல்லது பயன்படுத்தவோ முடியாமல் வருத்தப்படுவார்கள். அத்தகைய பரிசுகளான உணவுப் பொருட்கள், செடிகள், விரைவில் காலாவதியாகும் பொருட்களை தவிர்ப்பது நல்லது. மற்றொரு நாளில் அதை உடனே பயன்படுத்த வழங்கலாம்.

வீட்டு அலங்காரப் பொருட்கள் 

திருமணத்திற்குப் பிறகு, தம்பதியினர் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். அவர்களின் வீட்டிற்கும் ஒரு புதிய தோற்றம் அளிக்கப்படுகிறது. இதை மனதில் கொண்டு, பலர் அவர்களுக்கு வீட்டு அலங்காரப் பொருட்களைப் பரிசளிப்பது வழக்கம். ஆனால் தம்பதியினர் எந்த கருப்பொருளில் வீட்டை அலங்கரிக்கப் போகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாததால் இதைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் பரிசு அவர்களின் வீட்டு அலங்காரத்துடன் பொருந்தவில்லை என்றால், அது ஒரு ஓரமாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மையாகும். எனவே வீட்டுக்கு தேவையானவற்றை கேட்டு வழங்குவது தவறில்லை.

(சாஸ்திர மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரை தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)