வாய்ப்புகள் கதவைத் தட்டும்போது… நாம் ஏன் ஏமாந்து நிற்கிறோம்?
Opportunities: வாழ்வில் தினமும் வரும் நல்வாய்ப்புகளைச் சரியான நேரத்தில் அடையாளம் கண்டு பயன்படுத்துவது நம் கடமையாகும், ஆனால் நம்மில் பலர் ஆரம்பத்திலேயே அவற்றைச் சரியாகப் பயன்படுத்தாமல் தவறவிட்டுப் பின்னர் வருந்துகிறோம். நம் மனதில் நாமே போட்டுக்கொண்ட 'வாய்ப்பில்லை' என்ற பூட்டை உடைத்துத் தேடிச் சென்றால், வாழ்வில் கொட்டிக்கிடக்கும் நல்வாய்ப்புகளைக் கொண்டு நிச்சயம் வெற்றி பெறலாம்.
நமது அன்றாட வாழ்க்கைப் பயணத்தில் ஏதோ ஒரு வகையில் புதிய வாய்ப்புகள் நம்மைத் தினசரி கடந்து சென்று கொண்டுதான் இருக்கின்றன. அவ்வாறு வரும் வாய்ப்புகளைச் சரியான நேரத்தில் அடையாளம் கண்டு, அவற்றை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் முதன்மையான பொறுப்பாகும். ஏனெனில், சில தருணங்களில் மிகச்சிறந்த வாய்ப்புகள் நம் வாழ்வுக் கதவை ஒருமுறைக்கு மேல் தட்டுவதே இல்லை. அவ்வாறு அரிதாக வரும் நல்வாய்ப்புகளைத் தவறவிட்டுவிட்டு, பின்னர் அதற்காக வருந்திப் புலம்புபவர்களையே நாம் சமூகத்தில் பரவலாகப் பார்க்க முடிகிறது. இருப்பினும், காலம் ஒரு சில வேளைகளில் நமக்கு இரண்டாவது வாய்ப்பையும் வழங்கத் தவறுவதில்லை. அந்தத் தருணத்திலாவது விழித்துக் கொண்டு, அந்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வாழ்வில் முன்னேற நாம் பழக வேண்டும்.
மாயாஜாலக் கலைஞரின் அசாத்தியத் திறமை
வாய்ப்புகளின் முக்கியத்துவத்தை விளக்கும் விதமாக ஒரு சுவாரசியமான கதை ஒன்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. ஒரு ஊரில் வாழ்ந்து வந்த உலகப் புகழ்பெற்ற மாயாஜாலக் கலைஞர் ஒருவருக்குத் தெரியாத வித்தைகளே இல்லை எனலாம். எந்தவொரு கடினமான பூட்டப்பட்ட இடத்திற்குள் அவரை அடைத்து வைத்தாலும், வெறும் ஒரு மணி நேரத்திற்குள் அதிலிருந்து தப்பித்து வெளியே வந்துவிடுவது அவரின் தனிச்சிறப்பாக இருந்தது. ஒருமுறை, கைகால்கள் விலங்கிடப்பட்டுத் தண்ணீருக்குள் மூழ்கடிக்கப்பட்ட போதும், சில நிமிடங்களிலேயே அவர் அதிலிருந்து லாவகமாக விடுபட்டு வெளியேறினார். மற்றொரு முறை, ஒரு மூடிய அறைக்குள் வைக்கப்பட்ட போதும், அவர் கூறியபடியே துரிதமாகக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார்.
யாரும் தப்பிக்க முடியாத சிறைச்சாலையின் சவால்
அவர் வசித்து வந்த அதே பகுதியில், உலகிலேயே மிகவும் பலத்த பாதுகாப்பு கொண்ட, யாராலும் தப்பிக்கவே முடியாத ஒரு புகழ்பெற்ற சிறைச்சாலை அமைந்திருந்தது. இதுவரை அந்தச் சிறையிலிருந்து ஒரு கைதி கூட தப்பியதே இல்லை என்ற பெருமையும் அதற்கு இருந்தது. இதைப் பற்றிக் கேள்விப்பட்ட அந்த மாயாஜாலக் கலைஞர், அந்தச் சிறைச்சாலைக்கு ஒரு திறந்த சவால் விடுத்தார். தன்னை அந்தச் சிறையின் ஒரு அறையில் அடைத்து வைக்குமாறும், வழக்கம் போல் ஒரே மணி நேரத்தில் தான் அதிலிருந்து வெளியே வந்து தன் திறமையை நிரூபிப்பதாகவும் கூறினார். அதற்கு அந்நாட்டு அரசாங்கமும் சம்மதம் தெரிவித்து, அவரைச் சிறையின் ஒரு பிரத்யேக அறையில் அடைத்துக் கதவை மூடியது.
கம்பியுடன் போராடிய மூன்று மணி நேரப் போராட்டம்
சிறைக்குள் சென்ற அந்த மாயாஜாலக் கலைஞர், முதலில் தனது இடுப்புப் பட்டையில் ரகசியமாக மறைத்து வைத்திருந்த ஒரு சிறிய இரும்புக் கம்பியை வெளியே எடுத்தார். பின்னர், கதவின் வெளிப்புறம் இருந்த பூட்டை நோக்கி அந்தக் கம்பியைச் செலுத்தி, அதனைத் திறக்க தீவிரமாக முயன்றார். அரைக மணி நேரம் கடந்தது, அவரால் பூட்டைத் திறக்க முடியவில்லை. ஒரு மணி நேரம் ஆகியும் பலனில்லை. இவ்வாறாகத் தொடர்ந்து சுமார் மூன்று மணி நேரம் கடுமையாகப் போராடியும், அவரால் அந்தப் பூட்டைத் திறக்கவே முடியவில்லை. இதனால் மிகுந்த சோர்வும், ஏமாற்றமும் அடைந்த அவர், இனி நம்மால் முடியாது என்ற விரக்தியில் அந்தச் சிறைக் கதவின் மீது பலவீனமாகச் சாய்ந்தார்.
Also Read: இறைவன் சுவைத்த தெய்வீக மாங்கனி… காரைக்காலை சிலிர்க்க வைக்கும் திருவிளையாடல்!
பூட்டப்படாத கதவும் மனித மனதின் மாயையும்
அவர் கதவின் மீது சாய்ந்த அடுத்த நொடி, ஒரு விசித்திரம் நிகழ்ந்தது; அந்தக் கதவு மிக எளிதாகத் தானாகவே திறந்து கொண்டது. இங்கு வேடிக்கை என்னவென்றால், அந்தச் சிறைக் கதவு ஆரம்பத்திலிருந்தே பூட்டப்படவே இல்லை என்பதுதான். ஆனால், அந்த மாயாஜாலக் கலைஞரின் மனதில், ‘இது உலகிலேயே மிகக் கடுமையான சிறை, எனவே கண்டிப்பாகக் கதவைப் பூட்டியிருப்பார்கள்’ என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்திருந்தது. இந்தத் தவறான சிந்தனையின் காரணமாகவே, பூட்டப்படாத ஒரு கதவைப் பூட்டியிருப்பதாக நினைத்து, அதைத் திறக்க அவர் மூன்று மணி நேரம் வீணாகப் போராடியுள்ளார்.
மனப் பூட்டுகளை உடைத்து வாய்ப்புகளைத் தேடுங்கள்
இந்தக் கதையின் மூலம் நாம் உணரும் உண்மை என்னவென்றால், நம்மில் பலரும் நம்முடைய சொந்த எண்ணங்களினாலேயே, ‘இந்த உலகில் நமக்கான வாய்ப்புகளே இல்லை’ என்று மனதிற்குள் ஒரு பூட்டைப் போட்டுக் கொண்டு, அடுத்தகட்ட நடவடிக்கை தெரியாமல் திகைத்து நின்று கொண்டிருக்கிறோம். உண்மையில் நமக்கான நல்வாய்ப்புகள் இந்த உலகில் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. சிந்தனையைத் தெளிவுபடுத்திக் கொண்டு, அந்த வாய்ப்புகளை நோக்கி நாம் தேடிச் சென்றால், நமக்கான வெற்றிக் கோட்டையும், சமூகத்தில் தகுதியான இடத்தையும் நாம் நிச்சயம் அடைய முடியும் என்பதே இந்த நிகழ்வு உணர்த்தும் பாடமாகும்.