AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வீட்டில் எறும்புகளின் நடமாட்டம்: அதிர்ஷ்டமா அல்லது ஆபத்தா?

Ants At Home: வீடுகளுக்குள் எறும்புகள் வருவது அதிர்ஷ்டம் அல்லது ஆபத்து என்பதைக் காட்டிலும் உணவு, தண்ணீர் மற்றும் பாதுகாப்பான உறைவிடத்தைத் தேடியே நிகழ்கிறது. சிவப்பு எறும்புகள் கடிக்கக்கூடியவை என்பதால் எச்சரிக்கை தேவைப்படுவதுடன், கருப்பு எறும்புகள் செல்வம் பெருகும் என்ற பாரம்பரிய நம்பிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.

வீட்டில் எறும்புகளின் நடமாட்டம்: அதிர்ஷ்டமா அல்லது ஆபத்தா?
வீட்டில் எறும்புImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 21 Oct 2026 06:00 AM IST

நம்முடைய வீடுகளில் திடீரென எறும்புகள் (Ants At Home) வரிசையாக ஊர்ந்து செல்வதைப் பார்ப்பது வழக்கமான ஒன்றுதான். அப்படி எறும்புகள் கூட்டமாக வருவது நம்முடைய வீட்டிற்கான அதிர்ஷ்டத்தின் அறிகுறியா அல்லது ஏதேனும் ஆபத்துக்கான முன்னெச்சரிக்கையா என்ற சந்தேகம் பலரிடமும் எழுவதுண்டு. ஆன்மீக ரீதியாகவும் பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையிலும் எறும்புகளின் வருகை குறித்துப் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும், இதற்குப் பின்னால் சில ததார்த்தமான அறிவியல் காரணங்களும் மறைந்துள்ளன. சுருக்கமாகக் கூறின், எறும்புகளின் வருகை என்பது அதிர்ஷ்டத்தையோ துரதிர்ஷ்டத்தையோ குறிக்கவில்லை மாறாக உணவு மற்றும் வாழ்வாதாரத் தேடலேயாகும்.

Also Read: பொருட்களுக்கு கொடுக்கும் முக்கியத்தை மனித உறவுகளுக்கு கொடுக்கிறோமா?

அறிவியல் ரீதியான காரணங்களும் சுற்றுச்சூழல் மாற்றங்களும்

எறும்புகள் எதற்காக வீடுகளுக்குள் நுழைகின்றன என்பதற்கு அறிவியல்பூர்வமாக பல காரணங்கள் கூறப்படுகின்றன. பொதுவாக உணவு, குடிநீர் மற்றும் பாதுகாப்பான உறைவிடம் ஆகியவற்றைத் தேடியே எறும்புகள் மனிதர்களின் வசிப்பிடங்களை நாடுகின்றன. குறிப்பாக மழைக்காலங்களில் எறும்புகளின் வசிப்பிடங்கள் தண்ணீரில் மூழ்கும்போது, அவை பாதுகாப்பான இடங்களை நோக்கிப் பெயரத் தொடங்குகின்றன. அதேபோல கடும் வெப்பக் காலங்களிலும் ஈரப்பதம் மற்றும் உணவுத் தேவையால் வீடுகளுக்குள் நுழைகின்றன. எனவே எறும்புகளின் வருகை என்பது அந்தந்தக் காலநிலைகளில் எற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்களுடன் நேரடித் தொடர்பு உடையது.

சிவப்பு மற்றும் கருப்பு எறும்புகளின் தாக்கமும் வேறுபாடுகளும்

வீடுகளுக்குள் அதிகம் வரக்கூடிய சிவப்பு எறும்புகள் சிறிய பூச்சிகள், இறந்த உயிரினங்கள் மற்றும் சில குறிப்பிட்ட உணவுப் பொருட்களைத் தேடி வரக்கூடும். இவற்றில் சில வகைகள் கடிக்கக்கூடிய தன்மைக் கொண்டவை என்பதால் சிறு குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகள் வசிக்கும் வீடுகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். மறுபுறம், சர்க்கரை மற்றும் பிற இனிப்புப் பண்டங்களால் ஈர்க்கப்படும் கருப்பு எறும்புகள் சமையலறையில் உள்ள அரிசி, மாவு போன்ற உணவுப் பொருட்கள் இருக்கும் இடங்களில் பெருமளவில் காணப்படுகின்றன.

பாரம்பரிய நம்பிக்கைகளும் வாஸ்து சாஸ்திரமும்

கருப்பு எறும்புகள் வீட்டிற்குள் நுழைந்தால் செல்வம் மற்றும் மகிழ்ச்சி பெருகும் என்று சில பழைய நம்பிக்கைகள் கூறுகின்றன. குறிப்பாக அரிசிப் பாத்திரத்தில் எறும்புகள் தோன்றினால் பண வரவு அதிகரிக்கும் என்றும், தங்க நகைகளின் அருகில் எறும்புகள் காணப்பட்டால் செல்வம் பெருகும் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் தங்க நகைகளில் இருக்கும் வியர்வை அல்லது உணவுத் துகள்களே எறும்புகளை ஈர்க்கின்றனவே தவிர, தங்கம் இருப்பதனால் மட்டுமே அவை வருவதில்லை. மேலும் வீட்டின் வடக்கு அல்லது தெற்கு திசைகளில் இருந்து எறும்புகள் வந்தால் மகிழ்ச்சி கூடும் என்றும், கிழக்கு திசையிலிருந்து வந்தால் எதிர்மறையான செய்திகள் வரும் என்றும் வாஸ்து சாஸ்திர நம்பிக்கைகள் கூறுகின்றன. இருப்பினும் இவை எவையும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

Also Read: பொருட்களுக்கு கொடுக்கும் முக்கியத்தை மனித உறவுகளுக்கு கொடுக்கிறோமா?

தடுப்பு முறைகளும் சுகாதாரப் பராமரிப்பும்

வீட்டில் எறும்புகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த எளிய மற்றும் முறையான துப்புரவுப் பணிகளை மேற்கொள்வது மிகச் சிறந்த தீர்வாகும். அனைத்து உணவுப் பொருட்களையும் காற்றுப்புகாத மூடிய பாத்திரங்களில் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். தரையில் எழும் சர்க்கரைத் துகள்கள், உணவுத் துணுக்குகள் மற்றும் எண்ணெய் பிசுக்குகளை உடனடியாகத் துடைத்துச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுவர்களில் உள்ள விரிசல்களை மூடுவதுடன் ஈரப்பதம் நிறைந்த பகுதிகளைச் சீரமைப்பதன் மூலமும் எறும்புகளின் வருகையைக் கணிசமாகக் குறைக்க முடியும்.

Follow Us