விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை.. சென்னையில் போக்குவரத்து பாதிப்பு; அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 12 செ.மீ. மழை பதிவு!!
Heavy Rains Lash Chennai: சென்னையில் விடிய விடியப் பெய்த கனமழையால் மீனம்பாக்கத்தில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தொடர் மழையின் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கல்லூரிகள் பற்றிய எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.
சென்னை, அக்.21: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மணி நேரங்களாக இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகச் சென்னையில் விடிய விடிய பலத்த மழை பெய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக வடகடலோர மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு முக்கிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுளது. வானிலை நிலவரம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புப் பணிகள் குறித்த விரிவான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க: தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம்? தூத்துக்குடி- திருநெல்வேலி மக்களுக்கு எச்சரிக்கை…!
சென்னையில் பதிவான கனமழை அளவு:
சென்னையில் நேற்று இரவு தொடங்கிய கனமழை விடிய விடிய நீடித்தது. அதிகாலை 5:30 மணி வரையிலான நிலவரப்படி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 12 சென்டிமீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் 11 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தரமணியில் 9 செ.மீ., நந்தனம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் தலா 8 செ.மீ., வில்லிவாக்கத்தில் 7 செ.மீ. மற்றும் பள்ளிக்கரணையில் 6 செ.மீ. அளவில் பரவலாக மழை பெய்துள்ளது. தொடர்ந்து காலை 8:30 மணி வரை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை அமலில் இருப்பதால், தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ராட்சத மோட்டார்களைப் பயன்படுத்தித் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி:
வங்கக்கடலில் உருவாகியுள்ள வானிலை மாற்றங்கள் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று வங்கக்கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து வரும் 23-ஆம் தேதியன்று மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர்ச்சியான காற்றழுத்த தாழ்வுப் பகுதிகளின் தீவிரத்தன்மை மற்றும் அவை புயல் சின்னமாக மாறுவதற்கான வாய்ப்புகள் குறித்து வானிலை மைய அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இதன் காரணமாக அடுத்தடுத்த நாட்களில் கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சைபர் புல்லியிங் குற்றச்சாட்டு: பிரபல இன்ஸ்டாகிராம் நிதி ஆலோசகர் ஹரிஷ் தற்கொலை – யூடியூபர் மீது தந்தை புகார்!
5 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு:
தொடர் மழையின் காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் நலனை முன்னெடுத்துச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 5 வடகடலோர மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கியுள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பழுதாகி நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்தவும் காவல்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.