சைபர் புல்லியிங் குற்றச்சாட்டு: பிரபல இன்ஸ்டாகிராம் நிதி ஆலோசகர் ஹரிஷ் தற்கொலை – யூடியூபர் மீது தந்தை புகார்!
Insta Influencer Harish Suicide: புதுச்சேரியைச் சேர்ந்த ஹரிஷ், கடந்த நான்கு ஆண்டுகளாக நிதி ஆலோசனை மற்றும் மேலாண்மைத் துறையில் செயல்பட்டு வந்தார். ‘Finance with Harish’ என்ற பெயரில் பிரபலமான அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அக்டோபர் 20, 2026: சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டதாகக் கூறப்படும் அவதூறு குற்றச்சாட்டுகள் மற்றும் சைபர் புல்லியிங் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால், பிரபல இன்ஸ்டாகிராம் நிதி ஆலோசகர் ஹரிஷ் (27) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, அவரது தந்தை விநாயகம் சென்னை கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் பிரபலம் ஹரிஷ் தற்கொலை – நடந்தது என்ன?
புதுச்சேரியைச் சேர்ந்த ஹரிஷ், கடந்த நான்கு ஆண்டுகளாக நிதி ஆலோசனை மற்றும் மேலாண்மைத் துறையில் செயல்பட்டு வந்தார். ‘Finance with Harish’ என்ற பெயரில் பிரபலமான அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி ‘The Jason Samuel’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் செயல்படும் யூடியூபர் ஜேசன் சாமுவேல், ஹரிஷ் மீது மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோக்களை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் ஹரிஷுக்கு எதிராகத் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு, அவர் இணையவழித் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அவரது தந்தை புகாரில் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஹரிஷின் இன்ஸ்டாகிராம் கணக்கும் முடக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: ஆளுநர் மாளிகை முதல் முதல்வர் வீடு வரை வெடிகுண்டு மிரட்டல்.. 34 வழக்குகளில் தொடர்புடைய தமிழக இளைஞர்.. கேரள போலீஸ் அதிரடி கைது!
இந்நிலையில், முட்டுக்காடு பகுதியில் உள்ள தனது வீட்டில் ஹரிஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பதற்கு முன்பு அவர் வெளியிட்ட வீடியோவில், தனது தற்கொலைக்கு ஜேசன் சாமுவேல்தான் காரணம் எனக் குற்றம்சாட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், தன்னிடம் ரூ.3 கோடி கேட்டு மிரட்டியதாகவும், பணம் தராவிட்டால் தனது சமூக வலைதளக் கணக்குகளை முடக்கிவிடுவதாக மிரட்டியதாகவும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
சைபர் புல்லியிங் – யூடியூபர் மீது புகார்:
மேலும், புதுச்சேரி எம்.எல்.ஏ. மற்றும் முதலமைச்சரைத் தெரியும் எனக் கூறி, தனது பெற்றோரையும் மிரட்டியதாக ஹரிஷின் தந்தை புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஜேசன் சாமுவேல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சமூக வலைதளப் பதிவுகள், வீடியோக்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களைப் பாதுகாத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க: வாடிக்கையாளர் போல நடித்து கைவரிசை.. கடையில் 4 செல்போன்கள்- பணம் திருட்டு… கோவையில் துணிகரம்!
இந்தப் புகாரின் அடிப்படையில் கானத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறையின் விசாரணை முடிவுகளுக்குப் பிறகே முழு விவரங்கள் தெரியவரும்.