ஆளுநர் மாளிகை முதல் முதல்வர் வீடு வரை வெடிகுண்டு மிரட்டல்.. 34 வழக்குகளில் தொடர்புடைய தமிழக இளைஞர்.. கேரள போலீஸ் அதிரடி கைது!
Kerala Police Arrested Tamil Nadu Man : கேரள மாநிலத்தில் ஆளுநர் மாளிகை, முதல்வர் வீடு உள்ளிட்டவற்றுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த வழக்குகளில் தொடர்புடைய தமிழகத்தை சேர்ந்த மென் பொறியாளர் ஒருவரை அந்த மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் தமிழகத்தை சேர்ந்த இளைஞரை கேரள மாநில போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் சரத் சுப்பிரமணியன். மென் பொறியாளரான இவர், அமெரிக்காவில் கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், டார்க் வெப் என்ற தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி கடந்த சில ஆண்டுகளாக தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் விமான நிலையங்கள், தலைமைச் செயலகம், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்தார்.
வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை
இது தொடர்பாக, அந்தந்த மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், மின்னஞ்சல் மூலமாக வந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவத்தில் தொடர்புடைய மின்னஞ்சல் தொடர்பாக இணையவழி குற்ற தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், மின்னஞ்சல் வாயிலாக பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சரத் சுப்பிரமணியன் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.
மேலும் படிக்க: காவல் நிலையத்தில் பெண் எஸ்.ஐ. கண்ணத்தில் பளார்… தவெக நிர்வாகி உள்பட இருவர் அதிரடி கைது.. திருவண்ணாமலையில் பரபர சம்பவம்!




சென்னை விமான நிலையத்தில் மென் பொறியாளர் கைது
அதன் அடிப்படையில், கடந்த ஜூலை மாதம் சென்னை விமான நிலையத்தில் வைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மென் பொறியாளர் சரத் சுப்பிரமணியத்தை தமிழக காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்ததாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், கேரள மாநிலத்தில் தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகை, கேரள மாநில முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிப் ஹவுஸ் மற்றும் பல்வேறு நீதிமன்றங்கள் ஆகிய அரசு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக சரத் சுப்பிரமணியன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார்.
மென்பொறியாளரை கைது செய்த கேரள போலீசார்
இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சரத் சுப்பிரமணியத்துக்கு 34 வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அந்த வழக்குகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரத் சுப்பிரமணியத்தை கேரள மாநில போலீசார் கைது செய்து அந்த மாநிலத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: ரூ.100 கோடி மெத்தபெட்டமைன் கடத்தல் கும்பலுடன் தொடர்பு.. இரு காவலர்கள் பணியிட மாற்றம்.. நாகை காவல்துறையில் பரபரப்பு!