சென்னை விமான நிலையத்தில் வேலை… ரூ.23 லட்சத்தை சுருட்டிய விமான நிலைய முன்னாள் அதிகாரி.. போலீசார் எடுத்த நடவடிக்கை!
Chennai Airport Job Scam : சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ. 23 லட்சம் மோசடி செய்ததாக இந்திய விமான நிலைய ஆணையத்தின் முன்னாள் பெண் சீனியர் கண்காணிப்பாளரை விமான நிலைய போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மலைப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் குமாரி கலா. இவர், சென்னை விமான நிலையத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் முதுநிலை கண்காணிப்பாளர் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2025- ஆம் ஆண்டு குமாரி கலா விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் தாம்பரம் சானடோரியத்தில் செயல்பட்டு வரும் மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில் இருந்து சரக்கு பெட்டகங்களை சென்னை விமான நிலைய கார்கோவுக்கு ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்களை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு இயக்கம் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்துக்கு வரும் வாகன ஓட்டுநர்களிடம் தான் சென்னை விமான நிலையத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வருவதாக கூறியதுடன், விமான நிலையத்தில் வேலை வாங்கிக் கொடுப்பதாகவும் பொய்யான வாக்குறுதி அளித்துள்ளார்.
விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக வாக்குறுதி
இதை நம்பிய வாகன ஓட்டுனர்கள் தங்களது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு விமான நிலையத்தில் வேலை வாங்கித் தரக் கோரி ரூ. 2 லட்சம் வரை கொடுத்துள்ளனர். இதனை பெற்றுக் கொண்ட குமாரி கலா வேலை வாங்கி கொடுக்காமலும், வேலைக்கான பணி நியமன ஆணைகளை பெற்று தராமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக பணம் கொடுத்தவர்கள் குமாரி கலாவிடம் வலியுறுத்தியுள்ளனர். அதன்படி, குமாரி கலா, விமான நிலையத்தில் பணிபுரிவதற்கான போலி விண்ணப்ப படிவங்களை அவர்களிடம் கொடுத்து அதனை நிரப்பி பெற்றுள்ளார்.
மேலும் படிக்க: கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த ஆட்டோ.. அடுத்தடுத்து பிரிந்த இரு சிறுமிகள் உயிர்.. திருவள்ளூரில் சோகம்!




தலைமறைவான விமான ஆணைய முன்னாள் அதிகாரி
ஆனால், பணம் கொடுத்து சுமார் 6 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில், பணம் கொடுத்தவர்களுக்கு விமான நிலைய பணிகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அவர்கள் இது தொடர்பாக குமாரி கலாவிடம் கேட்டதற்கு தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதன் காரணமாக மேலும் சந்தேகம் அடைந்த அவர்கள் இது தொடர்பாக விசாரித்த போது, குமாரி கலா பொய்யான வாக்குறுதிகளை அளித்து பணத்தை பெற்று மோசடி செய்தது தெரிய வந்தது. இதை அறிந்த குமாரி கலா திடீரென தலைமறைவாகி விட்டார்.
ரூ. 23 லட்சம் மோசடி- முன்னாள் சீனியர் கண்காணிப்பாளர் கைது
இது தொடர்பாக சென்னை விமான நிலைய போலீசாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்த நிலையில், அதில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த குமாரி கலாவை போலீசார் கைது செய்தனர். இதில், அவர் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் ரூ. 23 லட்சம் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. அத்துடன், அவர் பணியில் இருந்த போதும் இதே போல மோசடி செய்ததும் ஒரு தெரிய வந்தது. இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சிவகங்கையில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டி கொலை.. 24 மணி நேரத்தில் 3 பேர் கைது.. 8 பேருக்கு தனிப்படை வலைவீச்சி!