மூதாட்டியை கொன்று நகை கொள்ளை… போலீஸுடன் இணைந்து குற்றவாளியை தேடிய கொலையாளி.. திருவாரூரில் நிகழ்ந்த சம்பவம்!
Tiruvarur Elderly Woman Murder : திருவாரூர் மாவட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட கடனை அடைக்க தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலக ஊழியர் மூதாட்டியை கொன்று நகை திருடிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே பாபநாசம் உத்தானி பிரதான சாலை பகுதியில் வசித்து வந்தவர் கலைச்செல்வி ( 60 வயது). இவர், கடந்த அக்டோபர் 17- ஆம் தேதி ( சனிக்கிழமை) இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர் ஒருவர் அவரது தலையில் கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளை அடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வலங்கைமான் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூதாட்டி கலைச்செல்வியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகார் அடிப்படையில் வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
போலீசாருடன் இணைந்து குற்றவாளியை தேடிய கொலையாளி
முன்னதாக திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் போலீஸ் மோப்பநாய், தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதுடன், தடயங்களை சேகரித்தனர். அப்போது, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வரும் அறிவு மணி ( 28 வயது) என்பவர் போலீசாருடன் இணைந்து குற்றவாளியே தேடுவது போலவும், போலீசாருக்கு உதவுவது போலவும் நடித்துள்ளார். அத்துடன் போலீசாரிடம் அறிவு மணி முன்னுக்குப் பின் முரணாக முந்திக்கொண்டு பேச்சு கொடுத்துள்ளார்.
மேலும் படிக்க: சிவகங்கையில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டி கொலை.. 24 மணி நேரத்தில் 3 பேர் கைது.. 8 பேருக்கு தனிப்படை வலைவீச்சி!




மூதாட்டியை கொன்றதை ஒத்துக்கொண்ட ஊழியர்
இதில், அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அத்துடன் அவரது நடவடிக்கையிலும் போலீசார் சந்தேகித்தனர். அதன்படி, தற்காலிக ஊழியர் அறிவுமணியை போலீசார் தனியாக அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், கலைச்செல்வியை கொலை செய்ததை அறிவு மணி ஒத்துக்கொண்டார். இதை தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இதில், அறிவுமணிக்கு ஆன்லைன் ரம்மி விளையாடுவது வழக்கமாக கொண்டிருந்தார்.
போலீஸ் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
இதில், லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடன் சுமைக்கு அறிவுமணி ஆளாகியுள்ளார். இதனால், கடனை அடைக்க முடியாமல் திகைத்து வந்த அறிவுமணி தனியாக வசித்து வந்த மூதாட்டி கலைச்செல்வியை கொலை செய்து, அவரது நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டு இத்தகைய செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: நடத்தையில் சந்தேகம்.. மனைவியின் தலையை கொடுவாளால் பதம் பார்த்த கணவன்.. ஓசூரில் பரபர சம்பவம்!