தமிழகத்தில் அடுத்தடுத்து சிக்கும் போதைப்பொருள்கள்.. திருநெல்வேலியில் 600 மாத்திரைகள் பறிமுதல்.. 4 பேரை மடக்கி பிடித்த போலீஸ்!
Tirunelveli Narcotic Pills Seizure 4 Arrested : திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் பள்ளி அருகே நின்று கொண்டிருந்த கும்பலிடம் இருந்து 600 மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில், ஒரு சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர்கள் சென்னையை சேர்ந்த ரிஷிகேஷ் ( 19 வயது), விஜய் ஆதித்தன் ( 22 வயது), ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை சேர்ந்த ஜானகிராமன் ( 21 வயது) மற்றும் சென்னையை சேர்ந்த ஒரு இளஞ்சிறார் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த உடைமைகளை போலீசார் சோதனை செய்ததில், மருத்துவ பயன்பாட்டிற்காகவும், உரிய மருத்துவ பரிந்துரையின் அடிப்படையிலும் மட்டுமே பயன்படுத்தக்கூடிய டேபென்டடால் மற்றும் நைட்ராசெபாம் மாத்திரைகளை வைத்திருந்தது தெரிய வந்தது.
போதைக்கு பயன்படுத்தும் 600 மாத்திரைகள் பறிமுதல்
அத்துடன், அவற்றின் மருத்துவ பயன்பாட்டிற்கு மாறாக போதையை ஏற்படுத்துவதற்கான நோக்கில் தவறாக பயன்படுத்துவதற்காக சட்ட விரோதமாக வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர்களிடம் இருந்த 60 ஸ்லிப்புகளில் இருந்த 600 மாத்திரைகளை திருநெல்வேலி மாவட்ட போலீசார் பறிமுதல் செய்தனர். அத்துடன், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவர்கள் மீது திருநெல்வேலி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மேலும் படிக்க: ரூ.100 கோடி மெத்தபெட்டமைன் கடத்தல் கும்பலுடன் தொடர்பு.. இரு காவலர்கள் பணியிட மாற்றம்.. நாகை காவல்துறையில் பரபரப்பு!




பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு
தொடர்ந்து, 3 பேர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 18 வயதுக்கு உள்பட்ட ஒரு இளஞ்சிறார் பாதுகாப்பு காவலில் எடுத்து இளஞ்சிறார் நீதி சட்டத்தின்படி உரிய சட்ட நடவடிக்கை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் போதை பொருட்கள் மற்றும் போதையை ஏற்படுத்தும் நோக்கில் தவறாக பயன்படுத்தப்படும் மாத்திரைகள் சட்ட விரோத புழக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட போலீசார் கண்காணிப்பை தீவிரப் படுத்தி உள்ளனர். ஏற்கனவே, நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ. 100 கோடி மதிப்பிலான உயர் ரக போதைப் பொருளான கிரிஸ்டல் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்தடுத்து சிக்கும் போதைபொருள்கள்
இந்தச் சம்பவமும், அதில், தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி பூபாலன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல, சென்னை மாவட்டம், கீழ்பாக்கத்தில் 50 கிராம் மெத்தபெட்டமைன் வைத்திருந்த கல்லூரி மாணவி உள்பட 3 பேர் கைதான சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் போதை ஏற்படுத்தும் நோக்கில் பயன்படுத்தப்படும் 600 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தை உலுக்கும் மெத்தபெட்டமைன் விவகாரம்.. சென்னையில் சிக்கிய 3 பேர்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்!