வீட்டைத் துடைச்சும் படியுற தூசிக்கு முற்றுப்புள்ளி வைக்கணுமா? இதோ எளிய வழிகள்!
House Dust Control: வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் இடுக்குகள் வழியாக வெளிப்புறத் தூசிகள் தொடர்ந்து உள்ளே நுழைவதால், சிலிகான் பேஸ்ட் கொண்டு அவற்றை அடைப்பது அவசியமாகும். ஏசி ஃபில்டர்கள் மற்றும் சீலிங் ஃபேன்களை முறையான கால இடைவெளியில் சுத்தம் செய்யாமல் இருந்தால், அவை காற்றில் தூசியை மீண்டும் மீண்டும் பரப்பிக் கொண்டே இருக்கும்.
வீடுகளை எவ்வளவுதான் கஷ்டப்பட்டு துடைத்துச் சுத்தப்படுத்தினாலும், அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் தூசிகள் படிவது பல இல்லத்தரசிகளுக்குப் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. பொதுவாக கதவு, ஜன்னல்களை மூடி வைத்தால் மட்டுமே தூசியைத் தடுத்துவிடலாம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், வீட்டுத் தூசிகளில் வெளிப்புற மண் மட்டுமன்றி, மனிதர்களின் இறந்த தோல் செல்கள், துணி இழைகள் மற்றும் காற்றில் உள்ள நுண்ணுயிரிகளும் கலந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. நாம் அன்றாடம் கவனிக்கத் தவறும் சில முக்கியக் காரணங்களால் வீடுகளில் தூசி வேகமாகப் படிகிறது. அவற்றைத் தடுத்து, வீட்டைப் பொலிவுடன் பராமரிப்பதற்கான எளிய வழிமுறைகள் இங்கே விவரிக்கப்படுகின்றன.
கதவு மற்றும் ஜன்னல் இடுக்குகள்
வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் முழுமையாக மூடப்பட்டிருந்தாலும், சுவர்களில் உள்ள மிகச்சிறிய விரிசல்கள், கதவுகளின் கீழ் உள்ள இடைவெளிகள் மற்றும் சுவிட்ச் போர்டுகளின் ஓரங்களில் இருக்கும் நுண்துளைகள் வழியாக வெளிப்புறத் தூசிகள் தொடர்ந்து உள்ளே நுழைந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, சாலைகளின் அருகிலோ அல்லது கட்டுமானப் பணிகள் நடக்கும் பகுதிகளிலோ வீடு அமைந்திருந்தால் இந்த பாதிப்பு இன்னமும் அதிகமாக இருக்கும். இதனைத் தவிர்க்க, ஜன்னல் ஓரங்களில் உள்ள இடுக்குகளை சிலிகான் பேஸ்ட் அல்லது வெதர் ஸ்டிரிப்பிங் (Weather stripping) கொண்டு முழுமையாக அடைக்க வேண்டும். மேலும், காற்றில் தூசியின் அளவு அதிகமாக இருக்கும் நேரங்களில் ஜன்னல்களைத் திறப்பதைத் தவிர்க்க வேண்டும்.
ஏசி ஃபில்டர்களின் பராமரிப்பின்மை
கோடைக் காலங்களில் வீட்டை குளிர்ச்சியாகவும் தூசியின்றியும் வைத்திருக்க ஏர் கண்டிஷனர்கள் பெரிதும் உதவுகின்றன. இருப்பினும், அதன் ஃபில்டர்களை நீண்ட நாட்களாகச் சுத்தம் செய்யாமல் அப்படியே பயன்படுத்தும் போது, அதில் தேங்கியுள்ள தூசிகளையே ஏசி மீண்டும் அறைக்குள் பரப்பத் தொடங்கும். இதன் காரணமாக அறையிலுள்ள பொருட்களின் மீது தூசிகள் வேகமாகப் படியும். இதற்குத் தீர்வாக, மாதத்திற்கு ஒருமுறையாவது ஏசி ஃபில்டரைக் கழற்றி, தண்ணீரில் நன்றாகக் கழுவி உலர வைத்து மீண்டும் பொருத்த வேண்டும். மேலும், வருடத்திற்கு ஒருமுறை தொழில்முறை வல்லுநர்களைக் கொண்டு ஏசியைச் சர்வீஸ் செய்வதும் அவசியமாகும்.
அலங்காரப் பொருட்கள் மற்றும் மெத்தைகள்
வீட்டின் அழகிற்காகப் பயன்படுத்தப்படும் தடிமனான திரைச்சீலைகள் (Curtains), கார்பெட்டுகள் மற்றும் சோபா குஷன்கள் ஆகியவை தூசியை அதிகளவில் ஈர்க்கக்கூடியவை. சோபாவில் அமரும் போதோ அல்லது கார்பெட்டின் மீது நடக்கும் போதோ, அவற்றின் இழைகளில் மறைந்திருக்கும் மிக நுண்ணிய தூசித் துகள்கள் காற்றில் கலந்து வீடு முழுவதும் பரவத் தொடங்கும். எனவே, இவற்றை வெறும் கைகளால் உதறாமல், ஈரத்துணி அல்லது வேக்யூம் கிளீனர் (Vacuum cleaner) கொண்டு தூசியை உறிஞ்ச வேண்டும். படுக்கை விரிப்புகள் மற்றும் தலைகாணி உறைகளை வாரம் ஒருமுறை வெந்நீரில் ஊறவைத்துத் துவைப்பது தூசியின் அளவைக் கணிசமாகக் குறைக்கும்.
போதிய காற்றோட்ட வசதி இல்லாமை
வீட்டிற்குள் வெளிக்காற்று வந்து செல்வதற்கான போதிய வழித்தடங்கள் இல்லை என்றால், உட்புறத்தில் உருவாகும் தூசிகள் வெளியேற முடியாமல் காற்றில் மிதந்து கொண்டே இருக்கும். இந்தத் தூசிகள் காலப்போக்கில் தரை, தொலைக்காட்சி, மேஜை போன்ற பரப்புகளில் தேங்கிவிடுகின்றன. உட்புறக் காற்றுத் தரம் மோசமடைவதைத் தடுக்க, காலை மற்றும் மாலை வேளைகளில் வெளிப்புறக் காற்று சுத்தமாக இருக்கும் போது ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டும். சமையலறை மற்றும் குளியலறைகளில் எக்ஸாஸ்ட் ஃபேன்களை (Exhaust fan) பயன்படுத்துவதன் மூலம் காற்றில் மிதக்கும் மாசுகளை உடனடியாக வெளியேற்ற முடியும்.