AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அலுவலகம் சென்றாலும் தீராத தனிமை: கார்ப்பரேட் உலகை அதிர வைத்த புதிய ஆய்வு!

Workplace Loneliness: நிறுவனங்கள் பிணைப்பை உருவாக்க ஊழியர்களை அலுவலகம் வர கட்டாயப்படுத்தினாலும், அது உற்பத்தித் திறனை அதிகரிக்காமல் சோர்வையே தருகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. வீட்டில் இருந்து வேலை செய்பவர்களை விட, தினமும் அலுவலகம் சென்று பணிபுரிபவர்களில் 35% பேர் தங்களுக்குள் அதிக தனிமை உணர்வு இருப்பதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளனர்.

அலுவலகம் சென்றாலும் தீராத தனிமை: கார்ப்பரேட் உலகை அதிர வைத்த புதிய ஆய்வு!
அலுவலகம்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 30 Jun 2026 11:20 AM IST

கொரோனா பெருந்தொற்றுப் பாதிப்புகளுக்குப் பிறகு, ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வரவழைப்பதில் அமேசான், ஜேபிமார்கன் போன்ற சர்வதேச முன்னணி நிறுவனங்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. கடந்த ஆண்டுகளில் நிறுவனங்களின் அலுவலக வருகைக் கட்டாயம் கணிசமாக அதிகரித்துள்ளது. ஊழியர்கள் அனைவரும் ஒரே கூரையின் கீழ் பணிபுரிந்தால் அவர்களிடையே நல்லிணக்கமும் வேலைக்கான ஈடுபாடும் அதிகரிக்கும் என்று நிறுவனங்களின் தலைவர்கள் நம்புகின்றனர். ஆனால், எதார்த்த நிலை இதற்கு நேர்மாறாக உள்ளது என்று தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. எம்.ஐ.டி ஸ்லோன் மேனேஜ்மென்ட் ரிவியூ (MIT Sloan Management Review) நடத்திய ஆய்வின்படி, இத்தகைய கட்டாய உத்தரவுகள் ஊழியர்களின் பணித்திறனைக் குறைப்பதோடு, நிறுவனத்தை விட்டு அவர்கள் வெளியேறவும் வழிவகுக்கிறது. குறிப்பாக, பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் திறமையான பணியாளர்களை இந்த அலுவலக வருகை விதிகளினால் இழந்துள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளன.

வீட்டில் இருப்பவர்களை விட அலுவலகத்தில் அதிகரிக்கும் தனிமை

ஸ்கைடீம் (SkyeTeam) அமைப்பின் “அலை மைண்ட்செட் புரோஃபைல்” (Ally Mindset Profile) மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் ஒரு வியப்பூட்டும் உண்மை வெளிவந்துள்ளது. அலுவலகத்திற்கு நேரில் வந்து பணிபுரியும் ஊழியர்களில் சுமார் 35 சதவீதத்தினர் தாங்கள் சக ஊழியர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கின்றனர். ஆனால், முழு நேரமும் வீட்டிலிருந்தே பணிபுரியும் (Remote workers) ஊழியர்களில் வெறும் 21 சதவீதத்தினர் மட்டுமே இந்தத் தனிமை உணர்வை எதிர்கொள்கின்றனர். தினமும் நீண்ட தூரம் பயணித்து அலுவலகத்திற்குச் செல்லும் ஊழியர்கள், அங்கு தங்களுக்கு ஒரு அர்த்தமுள்ள சமூகச் சூழல் காத்திருக்கும் என்று நம்புகின்றனர். ஆனால், அங்கு சென்றவுடன் சக ஊழியர்கள் கணினித் திரைகளிலும், தங்களின் காதுகளில் ஹெட்போன்களை மாட்டிக்கொண்டும் வேலையில் மூழ்கியிருப்பதை மட்டுமே பார்க்க முடிகிறது. இந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாக மாறும்போது, அது வீட்டிலிருப்பதை விட அதிக தனிமை உணர்வைத் தருகிறது.

வெறும் வெளிவேடமாகும் பணியிட உறவுகள்

பல நிறுவனங்கள் ஊழியர்களிடையே உண்மையான மனித உறவுகளை வளர்ப்பதற்குப் பதிலாக, வெறும் வெளிவேடங்களையே (Connection theater) கட்டமைக்கின்றன. வார இறுதியில் பீட்சா பார்ட்டி வைப்பது, திறந்தவெளி அலுவலக அமைப்புகளை (Open floor plans) உருவாக்குவது போன்றவை உறவு சார்ந்த சிக்கல்களுக்கு வெறும் தற்காலிகத் தீர்வுகளாகவே அமைகின்றன. ஊழியர்கள் ஒரே அறையில் அமர்ந்திருந்தாலும், அவர்களுக்குள் ஆழமான உரையாடல்கள் நிகழ்வதில்லை. ஒருவருக்கொருவர் தற்காலிகமாக நலம் விசாரிப்பதோடு இவர்களின் தொடர்பு முடிந்துவிடுகிறது. தங்களின் சக பணியாளரின் பணிச் சவால்கள் என்ன அல்லது அவர்களுக்கு என்ன உதவி தேவை என்பது போன்ற நம்பிக்கையை வளர்க்கும் உரையாடல்கள் அங்கு எழுப்பப்படுவதில்லை. உறவுகளை வலுப்படுத்த அலுவலகக் கட்டடம் முக்கியமல்ல, மாறாக ஒருவருடன் தொடர்புகொள்ள வேண்டும் என்ற உண்மையான எண்ணமும் முயற்சியுமே அவசியமாகிறது.

Also Read: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது ஏன்?

நிறுவனங்கள் செய்ய வேண்டிய கட்டாய மாற்றங்கள்

நிறுவனங்கள் இனி ஊழியர்களின் வருகைப் பதிவேட்டை (Attendance) வைத்து அவர்களின் ஈடுபாட்டை அளவிடுவதைக் கைவிட வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) சமூக இணைப்புக்கான ஆணையம் கூறுவது போல, நெருக்கமாக அமர்ந்திருப்பது முக்கியமல்ல; அவர்களின் உறவுகளின் தரமே முக்கியம். உடற்பயிற்சிக் கூடத்தில் உறுப்பினர் சேர்க்கை பெற்றுவிட்டால் மட்டும் ஒருவருக்கு உடல் தகுதி வந்துவிடாது. அதுபோல, அலுவலகத்திற்கு வருவதால் மட்டுமே குழுவினர் ஒன்றிணைந்துவிட மாட்டார்கள். எனவே, மேலாளர்கள் ஊழியர்களிடம் அலுவலக வருகை நாட்களைக் கேட்பதற்குப் பதிலாக, அவர்களின் மனநலம் மற்றும் கூட்டு உழைப்பு குறித்த ஆழமான கேள்விகளைக் கேட்க வேண்டும். பணியிடங்களில் நேரில் இருப்பதை விட, ஒருவருக்கொருவர் உணர்வுப்பூர்வமாக இணைந்திருப்பதே உண்மையான உற்பத்தித் திறனைத் தரும் என்பதைத் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

Follow Us