சர்வதேச மகளிர் தினம் 2026: பெண்களின் உரிமை மற்றும் சமத்துவத்துக்கான உலக அழைப்பு
International Women’s Day 2026: மார்ச் 8 சர்வதேச மகளிர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பெண்களின் உரிமை, சமத்துவம் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக இது பார்க்கப்படுகிறது. பெண்களின் முன்னேற்றம் இருந்தாலும் முழுமையான சமத்துவத்திற்கான பயணம் தொடர்கிறது.
மார்ச் 8ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. 2026ஆம் ஆண்டுக்கான கருப்பொருளை ஐநா “Rights. Justice. Action. For ALL Women and Girls” என அறிவித்துள்ளது. உலகளவில் பெண்களுக்கு கிடைக்கும் சட்ட உரிமைகள் ஆண்களின் உரிமைகளில் 64% மட்டுமே என தகவல்கள் தெரிவிக்கின்றன. 1908ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் பெண்கள் உரிமைக்காக பெரிய போராட்டம் நடத்தினர். 1975ஆம் ஆண்டு ஐநா அதிகாரப்பூர்வமாக மகளிர் தினத்தை அங்கீகரித்தது. இந்தியாவில் அரசு மற்றும் சமூக அமைப்புகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.
உலகம் முழுவதும் மகளிர் தினக் கொண்டாட்டம்
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களின் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார சாதனைகளை கொண்டாடுவதற்கும், பாலின சமத்துவத்தை வலியுறுத்துவதற்குமான முக்கிய நாளாக இந்த நாள் கருதப்படுகிறது. இந்தியாவிலும் உலக நாடுகளிலும் இந்த தினம் பெண்களின் முன்னேற்றத்தை பாராட்டுவதோடு, அவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது. பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வரும் நிலையில், அவர்களுக்கு சமமான வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த நாளில் வலியுறுத்தப்படுகிறது.
2026ஆம் ஆண்டுக்கான ஐநா கருப்பொருள்
2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தின் அதிகாரப்பூர்வ கருப்பொருளை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. “Rights. Justice. Action. For ALL Women and Girls” என்ற கருப்பொருளின் மூலம் உலகம் முழுவதும் பெண்களுக்கு சம உரிமை, நீதி மற்றும் நடைமுறை நடவடிக்கை தேவை என்பதை வலியுறுத்துகிறது. தற்போது உலகளவில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட உரிமைகள் ஆண்களுக்கு கிடைக்கும் உரிமைகளில் சுமார் 64 சதவீதம் மட்டுமே உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால் சட்டத்தில் உள்ள உரிமைகள் நடைமுறையிலும் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பதையே இந்த ஆண்டின் விழிப்புணர்வு பிரச்சாரம் முக்கியமாக எடுத்துரைக்கிறது.
Also Read: பெண் குழந்தைகளை கொண்டாடுவோம்.. இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்..
மார்ச் 8 தேதியின் வரலாற்றுப் பின்னணி
சர்வதேச மகளிர் தினம் வெறும் கொண்டாட்ட நாளாக மட்டுமல்லாமல், போராட்டங்களின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. 1908ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சுமார் 15,000 பெண்கள் குறைந்த வேலை நேரம், சிறந்த ஊதியம் மற்றும் வாக்குரிமை கோரி பேரணி நடத்தினர். அதன் பின்னர் 1910ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் கிளாரா செட்கின் என்ற சமூக செயற்பாட்டாளர் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார். 1917ஆம் ஆண்டு முதல் உலகப் போரின்போது ரஷ்யாவில் பெண்கள் “ரொட்டி மற்றும் அமைதி” கோரி வேலைநிறுத்தம் நடத்தினர். இந்த போராட்டம் மார்ச் 8ஆம் தேதி தொடங்கி பின்னர் அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுத்தது.
ஐநா அங்கீகாரம் மற்றும் உலகளாவிய முக்கியத்துவம்
1975ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச மகளிர் தினத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. அதன் பின்னர் பல நாடுகளில் இந்த நாள் பொதுவிடுமுறை நாளாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்களின் கல்வி, வேலை வாய்ப்பு, சமூக பாதுகாப்பு மற்றும் அரசியல் பங்குபற்றுதல் போன்ற பல்வேறு துறைகளில் முன்னேற்றத்தை உருவாக்க இந்த நாள் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் மகளிர் தின நிகழ்வுகள்
இந்தியாவில் சர்வதேச மகளிர் தினம் அரசு மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து பல்வேறு நிகழ்வுகளின் மூலம் கொண்டாடப்படுகிறது. பெண்களின் உடல்நலத்தை ஊக்குவிக்கும் நோக்கில் டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் ‘பிங்காத்தான்’ போன்ற பெரிய அளவிலான ஓட்டப்பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. மேலும் ‘பெட்டி பச்சாவோ பெட்டி படாவோ’ போன்ற அரசு திட்டங்கள் மற்றும் பெண்களுக்கான சுகாதார சேவைகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் வாய்ப்பும் உள்ளது.
மும்பை நிறுவன அலுவலகங்கள் முதல் கிராமப்புற பஞ்சாயத்துகள் வரை பல இடங்களில் பெண்களின் முன்னேற்றம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பெண்களின் சாதனைகள் பெரிதும் பேசப்பட்டாலும், முழுமையான சமத்துவத்தை அடையும் பயணம் இன்னும் தொடர்கிறது என்பது இந்த நாள் நினைவூட்டும் முக்கிய செய்தியாக உள்ளது.