Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெண் குழந்தைகளை கொண்டாடுவோம்.. இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்..

National girl child day 2026: கருவில் இருக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருக்குமோ என்று பயப்படும் சூழல் தற்போதைய இளம் தலைமுறையினரிடம் இல்லை. மாறாக, பெண் குழந்தைகள் பிறந்தவுடன் கொண்டாடும் சமூகமாக மாறத் தொடங்கியுள்ளோம். ஆணுக்கு பெண் சளைத்தவள் கிடையாது என்ற கூக்குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி விட்டது.

பெண் குழந்தைகளை கொண்டாடுவோம்.. இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்..
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 24 Jan 2026 08:44 AM IST

சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம உரிமை, சம வாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு, 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி முதல் ‘தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக பெண் குழந்தைகளின் உரிமைகள், கல்வி, பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் சமத்துவம் குறித்து சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நாள் முக்கியமாகக் கடைபிடிக்கப்படுகிறது. பெண் குழந்தை ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சி மட்டுமல்ல; சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் அடித்தளம். ஆனால், பல பகுதிகளில் இன்னும் பெண் குழந்தைகள் கல்வி வாய்ப்புகளிலிருந்து விலக்கப்படுகின்றனர். சிறு வயதிலேயே திருமணம் செய்து வைப்பது, ஊட்டச்சத்து குறைபாடு, பாதுகாப்பற்ற சூழல் போன்றவை அவர்களின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளன. இதனை மாற்றவே தேசிய பெண் குழந்தைகள் தினம் நமக்கு நினைவூட்டுகிறது.

பெண் குழந்தையும் சமம்:

இந்த நாளின் முக்கிய நோக்கமே, “பெண் குழந்தையும் சமம்” என்ற எண்ணத்தை சமூகத்தில் வலுப்படுத்துவதாகும். பெண் குழந்தைகளுக்கு சம கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுயமரியாதை வழங்கப்பட வேண்டும். பெண் குழந்தைகள் கல்வியுடன் வளரும்போது, அவர்கள் குடும்பத்தையும் சமூகத்தையும் முன்னேற்றுகிறார்கள். அறிவியல், மருத்துவம், விளையாட்டு, அரசியல், தொழில் என அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வருவது இதற்குச் சிறந்த சான்று. எனவே, பெண் குழந்தைகளைப் பாதுகாப்பது என்பது ஒரு குடும்பத்தின் கடமை மட்டுமல்ல; அது ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பாகும்.

பெண் குழந்தைகளை கொண்டாடுவோம்:

வளர்ந்து வரும் இந்த நாகரீக காலத்தில் கூட, பெண்கள் பல்வேறு தடைகளைத் தாண்டியே சமநிலை பெற வேண்டியுள்ளது. ஆண்களை போல், அவர்களுக்கு எளிதாக வாய்ப்புகள் கிடைத்துவிடுவதில்லை. சமூகத்தில் தற்போது வரையும் அனைத்து துறைகளிலும் அவர்கள் புறக்கணிப்பையே சந்திக்கும் சூழல் உள்ளது. இந்த தடைகளை உடைத்தெறிய ஒவ்வொரு வீட்டிலும் இருந்து மாற்றம் நிகழ வேண்டும். அந்தவகையில், கருவில் இருக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருக்குமோ என்று பயப்படும் சூழல் தற்போதைய இளம் தலைமுறையினரிடம் இல்லை. மாறாக, பெண் குழந்தைகள் பிறந்தவுடன் கொண்டாடும் சமூகமாக மாறத் தொடங்கியுள்ளோம். ஆணுக்கு பெண் சளைத்தவள் கிடையாது என்ற கூக்குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி விட்டது.

போற்றுதலை நிறுத்துவோம்:

அதேபோல், பெண் பிள்ளை பிறந்தால் வீட்டுக்கு லக்ஷ்மி வந்ததாக அர்த்தம், பெண் குழந்தைகளே அனைத்து விதமான செல்வங்களையும் கொண்டு வரும் தேவதைகள் என்று அவர்களை போற்றிப் பாடும் துதியை முதலில் நிறுத்துவோம். பெண் குழந்தைகள் முதன்முதலில் சந்திக்கும் ஏற்றத்தாழ்வு அவர்கள் வீடுகளில் இருந்து தான் தொடங்குகிறது. ஆண் பிள்ளையை ஒரு விதமாகவும் பெண் பிள்ளையை ஒரு விதமாகவும் நடத்துவதில், பெண் குழந்தைகள் மீது முதல் வன்முறையை அவர்களது பெற்றோர்களே செய்கின்றனர்.

குடும்பத்தில் இருந்தே மாற்றம்:

ஆணோ, பெண்ணோ எந்தக் குழந்தையாக இருப்பினும் சமமாக நடத்துவதில் தான் நம் தேசத்தின் சமநிலை இருக்கிறது. அனைவரும் முதலில் குடும்பத்தில் தங்கள் பெண் குழந்தைகளை மதிப்பான முறையில் நடத்த ஆரம்பிக்க வேண்டும். இதுவே, சமூகத்திலும் மாற்றத்தை உண்டாக்கும். அதையே பெண் குழந்தைகள் தினமும் நமக்கு எடுத்துரைக்கிறது. அதோடு, இந்நாள் பெண் குழந்தைகளின் மதிப்பை உணர்ந்து அவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் உறுதியாக மாற வேண்டும். பெண் குழந்தைகள் மதிக்கப்படும் சமூகம் தான் உண்மையில் முன்னேற்றம் அடையும் சமூகமாக இருக்கும்.