AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அசல் உடன்குடி கருப்பட்டியைக் கண்டறிவது எப்படி? போலி பித்தலாட்டம் அம்பலம்!

Identifying Fake vs Original: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் பதநீருடன் 60-70% சர்க்கரை கலந்து போலி கருப்பட்டி தயாரித்து விற்பனை செய்த 5 வியாபாரிகளுக்கு ரூ.38 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2023-இல் புவிசார் குறியீடு பெற்ற உடன்குடி கருப்பட்டியின் பெயரில் நடைபெற்ற இந்த ஜி.எஸ்.டி வரி ஏய்ப்புச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசல் உடன்குடி கருப்பட்டியைக் கண்டறிவது எப்படி? போலி பித்தலாட்டம் அம்பலம்!
உடன்குடி கருப்பட்டிImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 31 Jul 2026 15:29 PM IST

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் பதநீருடன் 60 முதல் 70 சதவீதம் வரை வெள்ளைச் சர்க்கரையைக் கலந்து போலி கருப்பட்டி தயாரித்து, அதனை அசல் எனக் கூறி சந்தையில் விற்பனை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அசல் பனங்கருப்பட்டிக்கு குறைந்தபட்ச வரி மற்றும் சலுகைகள் அளிக்கப்படும் நிலையில், சர்க்கரை கலக்கப்பட்ட கருப்பட்டிக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரி செலுத்தப்பட வேண்டும். ஆனால், போலியான முறையில் தயாரித்து அசல் எனக் கூறி சுமார் ரூ. 6 கோடி வரை வணிகம் செய்து வரி ஏய்ப்பில் ஈடுபட்ட 5 வியாபாரிகளுக்கு, வணிக வரி மற்றும் ஜி.எஸ்.டித் துறை அதிகாரிகள் ரூ. 38 கோடி அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பதநீரில் ஒரு சதவீதம் சர்க்கரை கலக்கப்பட்டாலும் அது கலப்படமாகவே கருதப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

உடன்குடி கருப்பட்டியின் சிறப்பும் புவிசார் குறியீடும்

பனை வளம் நிறைந்த உடன்குடி பகுதியில் பாரம்பரிய முறையில் உற்பத்தி செய்யப்படும் பனங்கருப்பட்டிக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் புவிசார் குறியீடு (GI Tag) வழங்கி கௌரவிக்கப்பட்டது. அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பனைத் தொழிலை முதன்மையாகக் கொண்டு கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கருப்பட்டி காய்ச்சும் முறை முதல் அதை பொட்டலமிடும் பெட்டிகள் வரை அனைத்துமே பனை சார்ந்த இயற்கை பொருட்களையே கொண்டு உருவாக்கப்படுவதால், உடன்குடி கருப்பட்டிக்கு உலகளாவிய சந்தையில் தனித்துவமான மதிப்பும் வரவேற்பும் நிலவுகிறது.

சுவை மற்றும் இனிப்புத் தன்மையில் உள்ள வேறுபாடு

சந்தையில் போலி கருப்பட்டிகள் அதிகரித்துள்ள நிலையில், சில எளிய வழிகள் மூலம் அசலான கருப்பட்டியைக் கண்டறியலாம். அசல் கருப்பட்டியைச் சுவைத்துப் பார்க்கும்போது, இனிப்புடன் சேர்ந்து லேசான உவர்ப்பு அல்லது கரிப்புத் தன்மை வெளிப்படும். ஆனால், சர்க்கரை கலந்து செய்யப்படும் போலி கருப்பட்டியில் சாதாரண சீனியின் திகட்டும் இனிப்பு மட்டுமே இருக்கும். அதேபோல, காபி அல்லது தேநீரில் அசல் கருப்பட்டியைப் பயன்படுத்தும்போது தேவையான இனிப்புச் சுவையைப் பெற சற்று கூடுதல் அளவு தேவைப்படும்; ஆனால் போலி கருப்பட்டி குறைந்த அளவிலேயே அதிக இனிப்பைக் கொடுத்துவிடும்.

நிறம், பளபளப்பு மற்றும் உடையும் வடிவம்

கருப்பட்டியை உடைத்துப் பார்ப்பதன் மூலமும் அதன் தரத்தை உறுதி செய்ய முடியும். அசல் கருப்பட்டியை உடைத்தால் அதன் உட்பகுதி அடர் பழுப்பு மற்றும் கருப்பு நிறம் கலந்த மங்கலான (Matte) தோற்றத்தைக் கொண்டிருக்கும். மாறாக, சர்க்கரை பாகு சேர்க்கப்பட்ட போலி கருப்பட்டியின் உட்புறம் பளபளப்பாகவும் பிசுபிசுப்பாகவும் காணப்படும். மேலும், அசல் கருப்பட்டியை உடைக்கும்போது அது ஒரே சீரான வடிவத்தில் உடையாமல், வெளிப்புறம் கடினமாகவும் உட்புறம் மிருதுவாகவும் இருக்கும்.

Also Read: ஐஸ்கிரீம் சாப்பிட்ட உடனே இதை கண்டிப்பா செய்யுங்க… இல்லன்னா ஆபத்து!

உறுதித் தன்மை மற்றும் தட்டும்போது வரும் சத்தம்

கருப்பட்டியின் ஆயுட்காலம் மற்றும் அது எழுப்பும் சத்தத்தைக் கொண்டும் போலியை அடையாளம் காணலாம். அசல் கருப்பட்டி எவ்வளவு நாட்கள் ஆனாலும் கல் போன்ற உறுதித் தன்மையுடன் கெட்டியாகவே இருக்கும். ஆனால், சீனி கலக்கப்பட்ட போலி கருப்பட்டி சில வாரங்களிலேயே ஈரப்பதத்தை உறிஞ்சி இளகி உருகத் தொடங்கிவிடும். அதுமட்டுமின்றி, கருப்பட்டியின் அடிப்பகுதியைத் தரையில் தட்டிப் பார்க்கும்போது மிதமான சத்தம் வந்தால் அது அசல் மாறாக உரத்த அல்லது அதிகப்படியான சத்தம் கேட்டால் அது சர்க்கரை கலக்கப்பட்ட போலி கருப்பட்டி என்பதை அறிந்துகொள்ளலாம்.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

Follow Us