3 ஆண்டுகளில் போதைப்பொருள் நெட்வொர்க்கை முற்றிலுமாக ஒழிப்போம்… அமித் ஷா உறுதி!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் நடைபெற்ற நார்கோ ஒருங்கிணைப்பு மையத்தின் காட்டத்தில், இந்தியாவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான 2026–2029 போதைப்பொருள் கட்டுப்பாட்டு தொலைநோக்கு ஆவணம் வெளியிடப்பட்டது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் நடைபெற்ற நார்கோ ஒருங்கிணைப்பு மையத்தின் காட்டத்தில், இந்தியாவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான 2026–2029 போதைப்பொருள் கட்டுப்பாட்டு தொலைநோக்கு ஆவணம் வெளியிடப்பட்டது. அதே நிகழ்வில் ஆன்லைன் போதைப்பொருள் விழிப்புணர்வு இயக்கத்தையும் அமித் ஷா தொடங்கி வைத்தார். இந்த இயக்கத்தின் கீழ், 2,09,500 கிலோ எடையுள்ள, ரூ.6,000 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை அழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் பேசிய அமித் ஷா, அடுத்த 3 ஆண்டுகள் இந்தியாவின் போதைப்பொருள் ஒழிப்பு போராட்டத்தில் மிகவும் முக்கியமான காலகட்டம் என்று குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், இந்த 3 ஆண்டுகளில் போதை நம்மை வெல்லுமா, அல்லது நாம் போதையை வெல்லப்போகிறோமா என்பது தீர்மானிக்கப்படும். நாட்டின் அடுத்த 100 ஆண்டுகால எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றி பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
போதை இல்லா இந்தியா
பிரதமர் நரேந்திர மோடி 2047ஆம் ஆண்டுக்க்குள் வளர்ந்த இந்தியா உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன், ‘போதை இல்லா இந்தியா’ என்ற நோக்கத்தையும் முன்வைத்துள்ளதாக அமித் ஷா தெரிவித்தார். அந்த இலக்கை அடைவதற்காக 2026 முதல் 2029 வரை செயல்படுத்தப்படும் புதிய செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
4 முக்கிய தூண்கள்
புதிய திட்டம் நான்கு முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் என அமித் ஷா தெரிவித்தார்.
- அதன்படி சட்டம், உளவுத்துறை மற்றும் சிறப்பு நடவடிக்கைகள்
- போதைப்பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் கட்டுப்பாடு
- போதைப்பழக்கத்தை குறைத்து மறுவாழ்வு அளித்தல்
- திறன் மேம்பாடு மற்றும் கண்காணிப்பு
ஆகிய 4 அம்சங்களின் மூலமாக போதைப்பொருள் நெட்வொர்க்கை முற்றிலுமாக அழிப்பதே அரசின் நோக்கம் என அவர் கூறினார். இதற்காக உளவுத்துறை, தொழில்நுட்ப உளவுத்துறை, சமூக காவல், எல்லை கண்காணிப்பு, துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் கிராமப்புற கண்காணிப்பு உள்ளிட்ட அனைத்து வழிகளையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்றார்.
மேலும் பேசிய அவர், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் கும்பல்களுக்கு எதிராக இரக்கமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போதைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு மட்டும் கருணையுடனும் மறுவாழ்வு அணுகுமுறையுடனும் செயல்பட வேண்டும் என்றார். மேலும், வெளிநாடுகளில் பதுங்கியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்ய சிபிஐ மூலம் விரைவான நடவடிக்கை எடுக்க மாநில அரசுகள் தனி அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பெரிய அளவிலான போதைப்பொருள் வழக்குகளில், குற்றவாளிகளின் சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் சட்டவிரோத வருமானங்களை முடக்குவதற்கான நிதி விசாரணையை கட்டாயமாக்க வேண்டும் என்றும், அமலாக்க இயக்குநரகம் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். போதைப்பழக்கத்தை குறைக்கும் நோக்கில், நாடு முழுவதும் போதைப் பொருள் இல்லாத இடம் அமைக்கப்படும் என்றும், பள்ளிகள், கல்லூரிகள், பெற்றோர், ஆசிரியர்கள், இளைஞர் அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைச்சகங்களுடன் இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
போதைப்பொருள் வழக்குகளில் விரைவாக தீர்ப்பு வழங்குவதற்காக, போதைப்பொருள் தடுப்பு சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மாநில அரசுகளும் உயர் நீதிமன்ற அளவிலேயே தனி நீதிமன்றங்களை அமைக்க முன்வர வேண்டும் என்றும் அமித் ஷா கேட்டுக்கொண்டார்.