தெருநாய்கள் விவகாரம்: நவ.7ல் கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் பிறப்பிக்கும் உச்சநீதிமன்றம்!!
Stray dogs case: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய ஏற்பட்ட கால தாமதத்திற்கு உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டனர். முன்னதாக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தெலங்கானா, மேற்கு வங்கம், டெல்லி நிர்வாகம் மட்டுமே பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Supreme Court
டெல்லி, நவம்பர் 03: தெருநாய்கள் விவகாரம் தொடர்பான வழக்கில் நவம்பர் 7ஆம் தேதி கூடுதலாக வழிகாட்டு நெறிமுறைகள் பிறப்பிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களையும் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அந்தவகையில், இவ்வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உச்சநீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். இந்த விவகாரத்தை அலட்சியமாக கையாண்டால் மீண்டும் நேரில் ஆஜராக வேண்டியது வரும் என தலைமைச் செயலாளர்களை உச்சநீதிமன்றம் கடிந்துக்கொண்டது.
இதையும் படிங்க : உயிர் காக்க உதவும் ஆம்புலன்ஸே, இரு உயிர்களை பறித்த சோகம்!
தெருநாய்கள் தொல்லை தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், நாய்களின் அச்சுறுத்தலை சமாளிக்க, தலைநகரம் மற்றும் அதன் புறநகர்களில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்க கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, இந்த விவகாரம் மூன்று நீதிபகள் கொண்ட அமர்வுக்கு சென்றது.
தொடர்ந்து, டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு கடந்த ஆக.22ம் தேதி 3 நீதிபதிகள் அமர்வு தடை விதித்தது. அதற்கு பதிலாக, தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியது. இந்த உத்தரவுக்கு நாய் பிரியர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
நேரில் ஆஜராக உத்தரவு:
அதோடு, பல்வேறு மாநிலங்களில் நிலுவையில் உள்ள இதே போன்ற வழக்குகளை விசாரித்து, தெரு நாய்கள் குறித்து தேசிய கொள்கையை உருவாக்குவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதற்காக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் வழக்கில் ஒரு தரப்பாக சேர்த்து, பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, கடந்த அக்.27ம் தேதி நடந்த இந்த வழக்கு விசாரணையில், பெரும்பாலான மாநிலங்கள் பதிலளிக்கவில்லை. எனவே, அனைத்து மாநி்ல தலைமை செயலாளர்களும் நவ.3ல் நேரில் ஆஜராக உச்சநீதமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிவிட்ட சக பயணி.. பகீர் சம்பவம்!
தலைமைச் செயலர் ஆஜர்:
அதன்படி, இன்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உட்பட அனைத்து மாநில செயலாளர்கள் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, அனைத்து மாநிலங்களும் தங்கள் தரப்பு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து ஒருங்கிணைத்து அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அனைத்து தலைமைச் செயலாளர்களும் அடுத்த விசாரணையில் ஆஜராக தேவையில்லை என்றும் தெரிவித்தது.
உச்சநீதிமன்ற உத்தரவை அலட்சியமாகக் கையாண்டதாலே, தலைமைச் செயலாளர்களை நேரில் ஆஜராக உத்தரவிட்டதாகவும், தொடர்ந்து நவ.7ஆம் தேதி கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் பிறப்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.