உயிர் காக்க உதவும் ஆம்புலன்ஸே, இரு உயிர்களை பறித்த சோகம்!!
Ambulance accident: பெங்களூருவில் அதிவேகமாக ஆம்புலன்ஸை ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்தில் போக்குவரத்து சிக்னலில் காத்துக்கொண்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மீது ஆம்புலன்ஸ் வேகமாக மோதியுள்ளது. அதில், ஆம்புலன்ஸில் சிக்கிய வாகனங்கள் சில அடி தூரத்திற்கு இழுத்தும் செல்லப்பட்டுள்ளன.
பெங்களூரு, நவம்பர் 02: பெங்களூருவில் அதிவேகமாக சென்ற ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு போக்குவரத்து சிக்னலில் நின்றுகொண்டிருந்த தம்பதி மீது வேகமாக வந்த அந்த ஆம்புலன்ஸ் மோதியுள்ளது. அதோடு, அருகில் இருந்த மேலும் பலர் மீதும் மோதியுள்ளது. சிக்னலுக்காக பலரும் காத்துக்கொண்டிருந்த சமயம், வேகமாக வந்த ஆம்புலன்ஸ் உடனே நிற்க முடியாமல் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிகிறது. இதன் காரணமாகவே அங்கிருந்த பல இருசக்கர வாகனங்கள் மீது மோதியதாக தெரிகிறது. அதோடு, விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் பெரும் சேதம் ஏற்படுத்தியதை உணர்ந்து, சம்பவ இடத்தில் இருந்து உடனடியாக தப்பிச் சென்றுள்ளார்.
இதையும் படிக்க : இந்தியாவின் ‘பாகுபலி’.. இன்று விண்ணில் பாயும் எல்.வி.எம் – எம்5 ராக்கெட்.. சிறப்பம்சம் என்ன?
உயிரைக் காக்கும் ஆம்புலன்ஸ்:
எதிர்பாராத விதமாக நாம் நோயிலோ, விபத்திலோ சிக்கிவிட்டால் நம் உயிரை மருத்துவர்கள் காப்பார்கள். ஆனால், அந்த மருத்துவமனைக்கு நம்மை விரைந்து அழைத்துச் சென்று நம் உயிரை காப்பது உயிரற்ற ஆம்புலன்ஸாக தான் இருக்கும். சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும், ஆம்புலன்ஸின் சைரன் ஒலியைக் கேட்டால், யோசிக்காமல் சட்டென ஒதுங்கி வழிவிட்டுவிடும். ஏனெனில், உள்ளே இருப்பவர்களுக்கு என்ன நடந்ததோ? என்ற கவலையும், பதட்டமும் எதிரில் உள்ள அனைவருக்கும் அவர்களை அறியாமல் தொற்றிக்கொள்ளும். அப்படி, விலையற்ற உயிரைக் காக்கும் ஆபத்பாந்தவனாகவே ஆம்புலன்ஸ்கள் இருந்து வருகின்றன.
உயிரைப் பறித்த ஆம்புலன்ஸ்:
இப்படிப்பட்ட ஆம்புலன்ஸ்களே, பெங்களூருவில் பெரும் விபத்தை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்துவிட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் இஸ்மாயில் (40). இவரது மனைவி சமீன் பானு (33). கணவன், மனைவி இருவரும் நேற்று இரவு 11 மணியளவில் ரிச்மவுண்ட் பகுதி அருகே சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சிக்னலுக்காக காத்திருந்துள்ளனர். அப்போது புயல் வேகத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸ் சிக்னலுக்காக காத்திருந்த அந்த தம்பதியினரின் இரு சக்கர வாகனத்தின் மீது முதலில் மோதியது.
தம்பதி பரிதாபமாக பலி:
அதோடு, மோதிய வேகத்தில் அங்கே இருந்த வேறு சில இரு சக்கர வாகனங்களையும் இழுத்த படியே சிறிதுதூரம் சென்றது. பின்னர், அங்குள்ள சிக்னல் கம்பத்தின் மீது மோதி நின்றுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சிக்கனலுக்காக காத்திருந்த தம்பதி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொடர்ந்து, இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த 2 பேர் உட்பட மேலும் சிலர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிக்க : இந்த வகை வாகனங்களுக்கு அனுமதி இல்லை.. டெல்லி அரசு எடுத்த முடிவு!
ஆம்புலன்ஸை கவிழ்த்த பொதுமக்கள்:
இதைத்தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய ஆம்புலன்ஸ் டிரைவர் அசோக்குமார் என்பவர், சம்பவ இடத்தில் இருந்து உடனடியாக தப்பிச் சென்றுள்ளார். தொடர்ந்து, தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் இன்று காலையே போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இதனிடையே, விபத்து சம்பவம் நடந்தபோது, ஆம்புலன்ஸ் உள்ளே நோயாளிகள் யாரும் இல்லை என்பதை அறிந்த பொதுமக்கள், கோபத்தில் ஆம்புலன்ஸை சேதப்படுத்தி கவிழ்த்துள்ளனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



