Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

SpiceJet: கழன்று ஓடிய டயர்.. விமானம் புறப்படும்போது நடந்த திகில் சம்பவம்!

ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று கண்ட்லா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் வலது பக்க சக்கரம் ஒன்றை இழந்தது. 75 பயணிகளுடன் சென்ற விமானம், மும்பை விமான நிலையத்தில் திறமையான விமானியின் துரித நடவடிக்கையால் பாதுகாப்பாக அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

SpiceJet: கழன்று ஓடிய டயர்.. விமானம் புறப்படும்போது நடந்த திகில் சம்பவம்!
டயர் கழன்று ஓடும் காட்சி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 12 Sep 2025 19:59 PM IST

மும்பை, செப்டம்பர் 12: மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பை விமான நிலையத்தில் இன்று ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்றில் ஒரு பக்கத்தில் ஒரு சக்கரம் இல்லாமல், 75 பேருடன் பத்திரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்தியாவில் விமான பயணம் என்பது தற்போது அனைத்து தரப்பு மக்களாலும் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இத்தகைய விமான பயணம் என்பது சமீப காலமாக மிகவும் கசப்பான அனுபவங்களைப் பெற்று வருகிறது. தொழில்நுட்ப கோளாறு தொடங்கி விமான விபத்து வரை கடந்த ஓராண்டு காலத்தில் பல நிகழ்வுகள் நடந்தேறி விட்டது. இப்படியான நிலையில் மற்றுமொரு அதிர்ச்சியளிக்கும் விமான பயணம் ஒன்று அரங்கேறியுள்ளது.

அதன்படி குஜராத் மாநிலத்தின் கண்ட்லா விமான நிலையத்தில் இன்று (செப்டம்பர் 12) மும்பை நகருக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று இயக்கப்பட்டது. பொதுவாக விமானம் புறப்படுவது மற்றும் தரையிறங்குவதை பயணிகள் படம் பிடிப்பது வழக்கம். இப்படியான நிலையில் Q400 டர்போபிராப் ரக விமானம் புறப்பட்ட பிறகு அதில் வலது புறத்தில் சக்கரங்கள் இருக்கும் பக்கத்தில் பயணி ஒருவர் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து விமானம் மேலேழும்புவதை வீடியோவாக பதிவு செய்தார்.

இதையும் படிங்க: லக்கேஜ் ஏன் அதிகமா இருக்கு? விமான ஊழியர்களை அட்டாக் செய்த ராணுவ அதிகாரி.. ஸ்ரீநகர் ஏர்போர்ட்டில் பரபரப்பு

கழன்று ஓடிய டயர்

அப்போது எதிர்பாராத விதமாக வலது பக்கத்தில் உள்ள இரண்டு சக்கரங்களில் ஒன்று கழன்று ஓடியது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், “சக்கரம் விழுந்துவிட்டது” என்று திரும்ப திரும்ப கத்தினார். இதனால் விமானத்தில் இருந்த 75 பேரும் அதிர்ச்சியடைந்தனர். அதற்குள் விமானம் மேலெழும்பி விட்டது. இதனைத் தொடர்ந்து மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. விமான நிலையமே பரபரப்பாக மாறிய நிலையில் சம்பந்தப்பட்ட விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியது.

விமானம் பிற்பகல் 3.51 மணிக்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மும்பை விமான நிலையத்தில் தற்காலிக அவசரநிலை அறிவிக்கப்பட்டது. ஆனால் விமானி துரிதமாக செயல்பட்டு பெரும் விபத்தை தவிர்த்தார். அவர் விமானத்தை இடது பக்கமாக சற்றே சாய்த்து தரையிறக்கியதால் மொத்த எடையும் இடது பக்கத்தில் இறங்கியது. இந்த நிகழ்வில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இதனையடுத்து விமான நிலையத்தில் இயல்பு நிலை திரும்பியது.

இதையும் படிங்க:  தொழில்நுட்ப கோளாறு.. கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானம்.. பயணிகள் அவதி!

உயிரைப் பணயம் வைத்து விமானத்தில் பயணம் செய்ய முடியாது. அனைத்து விமான நிறுவனங்களும் தங்களின் விமானங்களின் தரத்தை சோதனை செய்து அதனை சரியாக வைத்திருக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகளிடையே எழுந்துள்ளது.