எஸ்ஐஆர் வழக்கு: ஜனவரி இறுதியில் தீர்ப்பு.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு!
SIR case: எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த மனுக்கள் குறித்து தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மாலா பக்சி அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், எஸ்ஐஆர் வழக்கில் ஜனவரி இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி, டிசம்பர் 11: எஸ்ஐஆர் விவகாரத்தில் புதிதாக எந்த வழக்குகளும் அனுமதிக்கப்படாது எனக் கூறியுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த், இம்மாதம் வாதங்களை முடித்து ஜனவரி இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். பீகாரில் கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அதற்கு முன்னதாக அங்கும் எஸ்ஐஆர் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதற்கு, இந்தியா கூட்டணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பிய போதும், தேர்தல் ஆணையம் அதனை பொருட்படுத்தாது தனது பணியை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிக்க : தமிழ்நாட்டில் 70 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கம்? நீக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்? வெளியான அறிவிப்பு
எஸ்ஐஆர்-க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு:
இதனிடையே, எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் இருந்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எஸ்ஐஆர், பணிகள் நடக்கும் கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மனுக்களை அரசியல் கட்சியினர், தனி நபர்கள் மற்றும் சமூக அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் கூறுவது என்னவென்றால், தேர்தல் நெருங்கும் சமயத்தில் அவசர கதியில் எதற்காக இப்பணிகளை செய்ய வேண்டும் என்பது தான். எஸ்ஐஆர் பணிகள் நிச்சயம் மேற்கொள்ளப்பட வேண்டும், அதனை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், தேர்தல் முடிந்த பின்னர் இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும் கூறி வந்தன.




எதிர்ப்புகளை பொருட்படுத்தாத தேர்தல் ஆணையம்:
எந்த கட்சிகள் என்ன கோரினாலும், எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் எதையும் தேர்தல் ஆணையம் பொருட்படுத்தவில்லை. தற்போது தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது. தொடர்ந்து, டிசம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி வரை அதில் மாற்றங்கள் செய்ய விரும்புவோர் உரிய படிவங்களில் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” திமுகவின் புதிய பிரசார பயணம் தொடக்கம்!
ஜனவரி இறுதியில் தீர்ப்பு:
இதைத்தொடர்ந்து, படிவங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, பிப்ரவரி 14 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த நிலையில் எஸ்ஐஆர் பணிகள் சில மாநிலங்களில் முடிவடையாத நிலையில், மேலும் அவகாசம் அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த மனுக்கள் குறித்து தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மாலா பக்சி அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், எஸ்ஐஆர் வழக்கில் ஜனவரி இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் புதிய மனுக்கள் இனி விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை என்றும் கூறியுள்ளது.