AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பலத்த பாதுகாப்புடன் நீட் மறுதேர்வு.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை

Re-NEET Preparations: தேர்வு மையங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் எந்தவித தளர்வும் இருக்கக்கூடாது என்பது முக்கிய அறிவுறுத்தலாக வழங்கப்பட்டுள்ளது. முந்தைய தேர்வில் ஏற்பட்ட அனைத்து பாதுகாப்பு குறைபாடுகளும் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றை முழுமையாக சரிசெய்த பிறகே மறுதேர்வு நடத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்புடன் நீட் மறுதேர்வு.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 19 May 2026 18:03 PM IST

மே 19, 2026: வரவிருக்கும் நீட் யு.ஜி. மறுதேர்வுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேசிய தேர்வுகள் முகமை (NTA), கல்வித்துறை உயர் அதிகாரிகள், உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

மத்திய அமைச்சர் கடும் எச்சரிக்கை:

தேர்வு நடத்தும் முறையில் முழுமையான வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார். குறிப்பாக, கடந்த தேர்வில் ஏற்பட்டதாக கூறப்பட்ட வினாத்தாள் கசிவு மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் போன்ற பிரச்சினைகள் மீண்டும் எந்த சூழலிலும் நடைபெறக் கூடாது என அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

முந்தைய தேர்வு செயல்முறையில் கண்டறியப்பட்ட அனைத்து குறைபாடுகளும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, அவற்றை முற்றிலும் சரிசெய்ய தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தேர்வு மையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு கேமராக்கள், அடையாளச் சோதனைகள் மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு முறை போன்றவை தீவிரப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் எந்தவித தவறும் நடைபெறாத வகையில், முழுமையான பாதுகாப்புடனும் சீரான முறையிலும் ரீ-நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார். தேர்வு ஏற்பாடுகளை தீவிரமாக கண்காணிப்பதற்காக பல்வேறு மாநிலங்களின் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் அவசர ஒருங்கிணைப்பு கூட்டங்களை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கிய முடிவுகள் மற்றும் அறிவுறுத்தல்கள்:

தேர்வு மையங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் எந்தவித தளர்வும் இருக்கக்கூடாது என்பது முக்கிய அறிவுறுத்தலாக வழங்கப்பட்டுள்ளது. முந்தைய தேர்வில் ஏற்பட்ட அனைத்து பாதுகாப்பு குறைபாடுகளும் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றை முழுமையாக சரிசெய்த பிறகே மறுதேர்வு நடத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தேர்வுக்கு வரும் மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி, குடிநீர், மருத்துவ உதவி, ஓய்வு வசதி மற்றும் பிற அடிப்படை வசதிகளையும் முறையாக ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக தொலைதூர பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: உயிரோடு இருக்கும்போதே மனைவிக்கு அருகில் கல்லறை கட்டிய நெகிழ்ச்சி சம்பவம்..!

தேசிய அளவில் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதும் முக்கியத் தேர்வு என்பதால், மத்திய மற்றும் மாநில அமைப்புகள் இணைந்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொண்டால்தான் தேர்வை பாதுகாப்பாகவும் நம்பகத்தன்மையுடனும் நடத்த முடியும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், தேர்வு முறையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நம்பிக்கையை மீண்டும் உருவாக்குவது அரசின் முக்கிய பொறுப்பாகும் என்றும், எந்தவித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

Follow Us