‘இந்தியாவின் பொருளாதார டிஎன்ஏ மாறிவிட்டது’ – நார்வே வணிகத் தலைவர்களிடம் பிரதமர் மோடி பேச்சு
கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார அடிப்படைக்கூறு முற்றிலும் மாறிவிட்டது என்று பிரதமர் மோடி நார்வே வணிகத் தலைவர்களிடம் கூறினார். வரிவிதிப்பு மற்றும் தொழிலாளர் சட்டங்கள் போன்ற துறைகளில் நாடு பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி, வணிகம் செய்வதை இந்தியா எளிதாக்கியுள்ளது எனக் குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் உள்ள வாய்ப்புகளை எடுத்துரைக்கும் வகையில், திங்களன்று நார்வேயின் முக்கிய வணிக மற்றும் ஆராய்ச்சித் தலைவர்களுடன் ஒரு பெரிய அளவிலான கலந்துரையாடலை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உணவு, எரிபொருள் மற்றும் உரப் பாதுகாப்பு ஆகியவை உலகளாவிய சவால்களாக மாறியுள்ள இன்றைய சூழலில், அவற்றை எதிர்கொள்ள இந்தியாவும் நார்வேயும் இணைந்து செயல்படுகின்றன என்றார். சரியான தருணத்தை விவேகத்துடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய ஒரு வாய்ப்பாக இன்றைய நாள் அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.
2025 அக்டோபரில், ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்கத்துடன் வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தை (TEPA) நாங்கள் செயல்படுத்தினோம் என்று பிரதமர் மோடி கூறினார். இந்த தனித்துவமான மற்றும் சிறப்புமிக்க ஒப்பந்தம், நமக்கிடையேயான திறமை, தொழில்நுட்பம் மற்றும் பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலான ஓர் ஒப்பந்தமாகும் என்றார்
வீடியோ
Speaking at the India-Norway Business and Research Summit in Oslo.
https://t.co/1otNH9QiwD— Narendra Modi (@narendramodi) May 18, 2026
இந்தியாவின் மாறிவரும் பொருளாதார டிஎன்ஏ
மேலும் பேசிய பிரதமர் மோடி, கடந்த 12 ஆண்டுகளில், நாம் பொருளாதாரச் சூழலை முழுமையாக மாற்றியமைத்துள்ளோம். நாங்கள் இணக்கத் தேவைகளைத் தொடர்ந்து குறைத்து வருவதுடன், வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கு முனைப்பான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். சமீபத்தில், வரிவிதிப்பு, தொழிலாளர் சட்டங்கள் மற்றும் நிர்வாகத்தில் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம். உற்பத்தித் துறையை மேலும் மேம்படுத்துவதற்காக, பல்வேறு தொழில்துறைகளில் முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புகளையும் ஊக்கங்களையும் நாங்கள் வழங்கி வருகிறோம். கப்பல் கட்டும் துறை இந்த முயற்சிகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ‘சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம்’ என்ற தாரக மந்திரத்துடன் நாம் முன்னேறிச் செல்லும் அதே வேளையில், திரும்பிப் பார்க்கையில், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார டிஎன்ஏ-வை நாம் முற்றிலுமாக மாற்றிவிட்டோம் என்றார்
இந்தியாவில் நார்வேக்கான வணிக மற்றும் முதலீட்டு வாய்ப்புகள்
சமீபத்தில், வரிவிதிப்பு, தொழிலாளர் சட்டம் மற்றும் ஆளுகை போன்ற துறைகளில் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம் என்று அவர் கூறினார். கப்பல் கட்டுதல் மட்டுமின்றி, பராமரிப்பு, பழுதுபார்த்தல் மற்றும் முழுமையான சீரமைப்பு (MRO), பசுமைக் கப்பல் போக்குவரத்து மற்றும் பல்வேறு கடல்சார் சேவைகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவாகி வருகிறது. தற்போது, நார்வேயின் கப்பல்களில் 10% இந்தியாவில் கட்டப்படுகின்றன என்றார்.
“அடுத்த ஐந்தாண்டுகளில் இந்த எண்ணிக்கையை 25% ஆக உயர்த்த முடியுமா? குறிப்பாக, இந்தத் துறையில் தற்போது நிலவும் வேகத்தைக் கருத்தில் கொள்ளும்போது, இது அடையக்கூடிய ஒரு இலக்கு என்று நான் நம்புகிறேன். இன்று, இந்தியா-நார்வே உறவுகளில் ஆய்வகங்களுக்கு இடையேயும், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயும், விஞ்ஞானிகளுக்கு இடையேயும் கூட்டாண்மைகளை நாங்கள் கட்டமைத்து வருகிறோம். இது இரு நாடுகளின் ஆராய்ச்சி மற்றும் புத்தொழில் சூழல் அமைப்புகளை இணைக்கும்,” என்று பிரதமர் மோடி வினவினார்.