AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒழுக்கமும் ஊக்கமும் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது – பரீட்சா பே சர்ச்சா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை..

வாழ்க்கையில் ஊக்கமும் ஒழுக்கமும் இரண்டும் அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஒழுக்கம் இல்லையெனில் எவ்வளவு ஊக்கம் இருந்தாலும் அது பயன் தராது. அருகில் இருக்கும் விவசாயி அதிக வருமானம் ஈட்டுவதைப் பார்த்து நாம் ஊக்கம் பெறலாம். ஆனால் ஒழுக்கம் இல்லாமல் அந்த ஊக்கம் செயல்படாது. அப்போது அது சுமையாக மாறி, ஏமாற்றத்தை உருவாக்கும் என அவர் விளக்கினார்.

ஒழுக்கமும் ஊக்கமும் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது – பரீட்சா பே சர்ச்சா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 09 Feb 2026 11:51 AM IST

பிப்ரவரி 9, 2026: நாடுமுழுவதும் பிரதமர் நரேந்திர மோடி நடத்தி வரும் ‘பரீட்சா பே சர்ச்சா’ 9-ஆவது பதிப்பு தொடங்கியுள்ளதாம் அனைவருக்கும் தெரிந்ததே. இதன் ஒரு பகுதியாக, இரண்டாவது அமர்வு இன்று காலை 10 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் உரையாடினார். ஸ்டார்ட்அப்கள் முதல் தேர்வு தயாரிப்பு, மனஅழுத்தம், சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மாணவர்களுக்கு வழிகாட்டல் வழங்கினார்.

முதலில் நீங்கள் தலைவராக மாற வேண்டும்:

“முதலில் நீங்கள் ஒரு தலைவராக மாற வேண்டும். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதை தீர்மானிக்க வேண்டும். அதனை நடைமுறையில் கொண்டு வர வேண்டும். உதாரணமாக, நீங்கள் தெருவில் குப்பைகளை அகற்றினால், மக்கள் உங்களைப் பின்பற்றுவார்கள். தலைவராக இருப்பது தேர்தலில் போட்டியிடுவது மட்டுமல்ல. சிலரை நம்ப வைக்கக்கூடிய திறன் கொண்டிருப்பதே உண்மையான தலைமை. அதனை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். தொடர்ச்சியாக சரியான செயல்களை செய்வதே உண்மையான தலைமை. உங்கள் எண்ணங்களை குறைந்தது 10 பேருக்காவது தெளிவாக எடுத்துச் சொல்லும் திறன் தலைமைக்கான முக்கியமான பண்பாகும்” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய தொழில்நுட்பங்கள் வந்தபோது இதுபோன்ற விவாதங்கள் எழுகின்றன. அதற்கு நாம் பயப்பட தேவையில்லை. அதன் அடிமைகளாக மாறாமல் இருப்பதற்காக நாம் முயற்சி செய்ய வேண்டும். அதனை நம்மை ஆள விடக்கூடாது. கணினிகள் வந்தபோதும் இதே மாதிரியான விவாதங்கள் நடந்தன.

மொபைலுக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும்:

இன்றைக்கு குழந்தைகள் மொபைலுக்கு அடிமையாகி வருகிறார்கள். மொபைல் இல்லையெனில் உணவுக்கூட சாப்பிடவில்லை என்று கேள்விப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்த நிலை மாற வேண்டும். யாரும் மொபைலின் அடிமையாகாமல் இருக்க வேண்டும். அதேபோல், வேலைகளின் தன்மை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். எனவே தொழில்நுட்பத்தை புரிந்துகொள்ள வேண்டும். ஏஐ-க்கு நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை என பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

வாழ்க்கையில் ஒழுக்கம் ஏன் அவசியம்?

வாழ்க்கையில் ஊக்கமும் ஒழுக்கமும் இரண்டும் அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஒழுக்கம் இல்லையெனில் எவ்வளவு ஊக்கம் இருந்தாலும் அது பயன் தராது. அருகில் இருக்கும் விவசாயி அதிக வருமானம் ஈட்டுவதைப் பார்த்து நாம் ஊக்கம் பெறலாம். ஆனால் ஒழுக்கம் இல்லாமல் அந்த ஊக்கம் செயல்படாது. அப்போது அது சுமையாக மாறி, ஏமாற்றத்தை உருவாக்கும் என அவர் விளக்கினார்.

ஸ்டார்ட்அப் எப்படி தொடங்குவது?

பிரதமர் மோடி, “நீங்கள் ஒரு சிறிய ஸ்டார்ட்அப்புடன் தொடங்கலாம். அதற்கு 25 வயது இருக்க வேண்டிய அவசியமில்லை. எந்த வயதிலும் தொடங்கலாம். உங்கள் கல்வியும், தொழிலையும் ஒரே நேரத்தில் தொடர விரும்பினால், வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை உங்கள் தொழிலுக்காக ஒதுக்குங்கள். இது இரண்டையும் சமநிலைப்படுத்த உதவும். சில ஸ்டார்ட்அப்கள் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு செயல்படுகின்றன. பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் கொண்ட நண்பர்களுடன் சேர்ந்து ஒரு சிறிய ஸ்டார்ட்அப்பை தொடங்கலாம்” என்றார்.

உங்கள் வாழ்க்கையில் ஆசிரியரின் பங்கு என்ன?

“எங்கள் ஆசிரியர்கள் எங்களை நூலகத்திற்குச் செல்ல ஊக்குவித்ததில் முக்கிய பங்காற்றினர். உடல் உறுதியை பேண யோகா பயிற்சி செய்யுமாறும் அறிவுறுத்தினர். ஒவ்வொரு ஆசிரியரும் ஏதோ ஒரு வகையில் நம்மை உருவாக்க உதவுகிறார்கள்” என பிரதமர் மோடி கூறினார். தேர்வுகள் குறித்த உரையாடலின்போது, குஜராத்தில் உள்ள பால்தாரியா சமூகத்திற்காக அவர் செய்த சேவைகளையும் நினைவுகூர்ந்தார். மனஅழுத்தத்தை குறைக்க குழந்தைகள் நல்ல தூக்கம் பெற வேண்டும் என்றும், தங்கள் கனவுகளை அடைய கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

படிப்பு – விளையாட்டு சமநிலை எப்படி?

“கல்வி மட்டும் எல்லாவற்றிற்கும் தீர்வாக இருக்காது. அதனால் விளையாட்டுகளிலும் ஈடுபட வேண்டும். வாழ்க்கை ஒரு விளையாட்டாக மாறாமல் இருக்க, நீங்கள் விளையாட வேண்டும்” என பிரதமர் கூறினார்.

மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி:

இந்த அமர்வில் தமிழ்நாட்டுடன் சேர்த்து சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூரைச் சேர்ந்த மாணவர்களுடனும் பிரதமர் மோடி உரையாடினார். மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். தங்கள் நகரங்களில் உள்ள பல்வேறு இடங்களை பார்வையிடுமாறு மாணவர்கள் பிரதமரை அழைத்தனர்.

தேர்வுகளுக்குத் தயாராகும் போது தன்னம்பிக்கை, ஒழுங்கான தினசரி பழக்கம், தன்னம்பிக்கை மீதான நம்பிக்கை ஆகியவற்றை பற்றி நடைமுறைச் சிந்தனைகளையும் பகிர்ந்தார். தேர்வு மனஅழுத்த மேலாண்மை, நேர மேலாண்மை, தன்னம்பிக்கை வளர்ப்பு, நேர்மறை சிந்தனை, தொழில்நுட்பத்தின் சரியான பயன்பாடு போன்ற விஷயங்களில் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

2018 ஆம் ஆண்டிலிருந்து பிரதமர் மோடி, ஒவ்வொரு ஆண்டும் போர்டு தேர்வுகளுக்கு முன் ‘பரீட்சா பே சர்ச்சா’ (PPC) நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். மாணவர்களின் தேர்வு மனஅழுத்தத்தை குறைத்து, முழுமையான கல்வியை ஊக்குவிப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில், தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு ஏற்ப இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

Follow Us