கேரளாவில் ஒன்றரை வயதுக் குழந்தை அடித்துக் கொலை.. உடலில் 51 காயங்கள், சிகரெட் சுடுகள்.. பெற்ற தாயே உடந்தை? அதிர்ச்சித் தகவல்!
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு யூடியூப் விளாக்கில் இக்குழந்தை தோன்றியபோது, அதன் இரு கைகளிலும் பலத்த கட்டு போடப்பட்டிருந்தது. குழந்தை சைக்கிளில் இருந்து கீழே விழுந்து கைகள் உடைந்ததாக தாய் அகிலா கூறிவந்துள்ளார். ஆனால், அஷ்கர் தான் குழந்தையின் கைகளை அடித்து உடைத்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
திருவனந்தபுரம், ஜுன் 1: கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியில் ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று, அதன் தாயார் மற்றும் கள்ளக்காதலனால் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் உடலில் சிகரெட்டுகளால் சுடப்பட்ட தீக்காயங்கள் மற்றும் பிறப்புறுப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மொத்தம் 51 காயங்கள் இருந்ததாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் குழந்தையின் தாய் அகிலா (24) மற்றும் அவருடன் வசித்து வந்த அஷ்கர் (31) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர். நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த அர்ஷித் என்ற ஒன்றரை வயதுக் குழந்தையை, கடந்த வெள்ளிக்கிழமை மாலை அவசர நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அஷ்கர் கொண்டு வந்துள்ளார். மதிய உணவு சாப்பிடும் போது குழந்தையின் தொண்டையில் உணவு சிக்கிக் கொண்டதாக அஷ்கர் மருத்துவர்களிடம் கூறியுள்ளார். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இதையும் படிக்க: பணம் கேட்டு தொல்லை கொடுக்கும் மனைவி.. தன்னை கருணை கொலை செய்ய மாவட்ட ஆட்சியரிடம் கணவன் வேண்டுகோள்!
பிரேதப் பரிசோதனையில் வெளிவந்த கொடூரம்:
குழந்தையின் மரணத்தில் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து நடந்த பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. வாரக்கணக்கில் தொடர்ந்து நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களால், குழந்தையின் உடலில் ரத்தப்போக்கு ஏற்பட்டு அதுவே மரணத்திற்கு முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக குழந்தையின் உடலில் 51 காயங்கள் மற்றும் தழும்புகள் கண்டறியப்பட்டன. குழந்தையின் காலடிகள் மற்றும் விரல்களின் கீழ் பகுதியில் லைட்டர் மற்றும் சிகரெட்டுகளால் சுடப்பட்ட வட்ட வடிவ தீக்காயங்கள் இருந்தன. மேலும், குழந்தையின் பிறப்புறுப்பிலும் பலத்த காயங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. குழந்தையின் அலறல் சத்தத்தை அடக்குவதற்காக, அஷ்கர் குழந்தையின் தலையைச் சுவரில் பலமுறை மோதியதும் தெரியவந்துள்ளது.
முன்னரே ஒடிக்கப்பட்ட கைகள்:
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு யூடியூப் விளாக்கில் இக்குழந்தை தோன்றியபோது, அதன் இரு கைகளிலும் பலத்த கட்டு போடப்பட்டிருந்தது. குழந்தை சைக்கிளில் இருந்து கீழே விழுந்து கைகள் உடைந்ததாக தாய் அகிலா கூறிவந்துள்ளார். ஆனால், அஷ்கர் தான் குழந்தையின் கைகளை அடித்து உடைத்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்த குழந்தையின் தந்தை கடந்த 2024-ஆம் ஆண்டே இறந்துவிட்டார். அதன் பிறகு அகிலா, அஷ்கருடன் பனவூர் பகுதியில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார்.
பாட்டியின் புகார் அலட்சியம்:
இதுகுறித்து குழந்தையின் பாட்டி ரீனா கூறுகையில், “அவர்கள் குழந்தையை வளர்க்க விரும்பவில்லை என்றால் எங்களிடம் ஒப்படைக்குமாறு பலமுறை கெஞ்சினேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. அஷ்கர் மீது எனக்கு எப்போதும் சந்தேகம் இருந்தது. குழந்தையின் கைகள் உடைந்திருந்தபோதே அஷ்கர் மீது போலீசில் புகார் அளித்தேன். ஆனால் போலீஸார் அதைச் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை” என்று கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார்.
அஷ்கரின் கொடூரப் பின்னணி:
கைது செய்யப்பட்டுள்ள அஷ்கர் ஏற்கனவே குடும்ப வன்முறைகளில் ஈடுபட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அஷ்கரின் முதல் மனைவியின் தாயார் கூறுகையில், “அஷ்கர் எனது மகளையும் திருமணமாகி வாழ்ந்தபோது இதேபோல சுவரில் தலையை முட்டி கொடூரமாகத் தாக்குவார். அவளது சித்திரவதையைத் தாங்க முடியாமல் என் மகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக மனநல சிகிச்சை பெற்று வருகிறாள்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சென்னையில் இளம்பெண் கார் ஏற்றி கொலை.. பாரில் நடந்தது என்ன?.. இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்!!
சம்பவத்தின் போது தாய் அகிலா நடன நிகழ்ச்சி ஒன்றிற்காகத் தமிழகம் வந்திருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், குழந்தைக்குத் தொடர்ச்சியாக நடந்த சித்திரவதைகளைத் தடுக்காமல் உடந்தையாக இருந்ததால், அகிலா மற்றும் அஷ்கர் இருவர் மீதும் கொலைக் குற்றம் மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சாட்சியங்கள் சேகரிப்புக்காக அஷ்கரை போலீஸார் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றபோது பொதுமக்கள் ஆத்திரமடைந்து முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.