நாடு முழுவதும் 14 வயது சிறுமிகளுக்கு இலவச HPV தடுப்பூசி திட்டம்.. தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..
HPV vaccination for 14-year-old girls: இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 1.2 லட்சம் புதிய வழக்குகள் கண்டறியப்படுவதோடு, சுமார் 80,000 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்தத் தடுப்பூசித் திட்டம் இறப்பு விகிதத்தை பெருமளவு குறைக்க உதவும் நம்பப்படுகிறது.
ராஜஸ்தான், பிப்ரவரி 28: இந்தியாவின் பொது சுகாதாரப் பயணத்தில் முக்கிய மையல்கல்லாக, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் (Cervical Cancer) தடுப்பதற்கான நாடு தழுவிய ‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ (HPV) தடுப்பூசி திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு அவர் மேற்கொண்ட பயணத்தின் போது இந்தத் திட்டம் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 14 வயதுடைய சிறுமிகளை இலக்காகக் கொண்டதாகும். ஆண்டுதோறும் சுமார் 1.15 கோடி சிறுமிகள் இதன் மூலம் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க: “மக்கள் நலனுக்காக பாடுபட்டுவர் ஜெயலலிதா”.. மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!
இலவசத் தடுப்பூசி, கட்டாயம் அல்ல:
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் (ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர்கள்), சமூக சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்தத் தடுப்பூசி முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். குறிப்பாக, இந்தத் தடுப்பூசியை போடுவது கட்டாயமல்ல, முற்றிலும் விருப்பத்தின் அடிப்படையிலானது. தடுப்பூசி போடுவதற்கு முன்பு பெற்றோரின் அல்லது பாதுகாவலரின் ஒப்புதல் பெறுவது அவசியமாகும்.
தடுப்பூசி வகை மற்றும் சிறப்பு முகாம்கள்:
இந்திய அரசின் இந்த தேசிய திட்டத்தில் ‘கார்டசில்’ (Gardasil) என்ற தடுப்பூசி பயன்படுத்தப்படுகிறது. இது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை உண்டாக்கும் HPV 16 மற்றும் 18 வகை வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படுகிறது. முதற்கட்டமாக அடுத்த 90 நாட்களுக்கு இது ஒரு சிறப்பு இயக்கமாக நடத்தப்படும். இந்த நாட்களில் தகுதியுள்ள சிறுமிகள் தினமும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம். அதன் பிறகு, வழக்கமான தடுப்பூசி போடும் நாட்களில் இது கிடைக்கும்.
பிரதமர் மோடி நெகிழ்ச்சி:
Prime Minister @narendramodi launches the nationwide Human Papillomavirus (HPV) Vaccination Programme for girls aged 14 years in Ajmer, #Rajasthan
Watch: pic.twitter.com/Ni7xQ1qa6R
— PIB India (@PIB_India) February 28, 2026
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, “நாட்டின் மகள்கள் ஆரோக்கியமாகவும், வளமாகவும் இருப்பதை உறுதி செய்ய நாங்கள் எவ்வித முயற்சியையும் விட்டுவைக்கவில்லை. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்,” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: விமானம் போன்ற வசதிகளுடன்.. மணிக்கு 200 கிமீ வேகத்தில் பயணிக்கும் நாட்டின் முதல் ரயில்..
இறப்பு விகிதத்தை குறைக்க உதவும்:
இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 1.2 லட்சம் புதிய வழக்குகள் கண்டறியப்படுவதோடு, சுமார் 80,000 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்தத் தடுப்பூசித் திட்டம் வரும் காலங்களில் இந்த இறப்பு விகிதத்தை பெருமளவு குறைக்க உதவும் என்று மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அஜ்மீரில் நடைபெற்ற இந்த விழாவில், சுகாதாரத் திட்டங்களுடன் சேர்த்து சுமார் ரூ.16,680 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.