Karnataka: திருமணம் செய்யாமல் வாழ்ந்த ஜோடி.. தூக்கிட்டு தற்கொலை!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்த ராகேஷ், சீமா ஜோடி தற்கொலை செய்துகொண்டனர். பணப் பிரச்சனை, குடும்ப தகராறு காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒருவர்பின் ஒருவராக உயிரை மாய்த்துக்கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா, அக்டோபர் 22: கர்நாடகா மாநிலத்தில் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வாழ்ந்த ஜோடி ஒன்று தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே ஆனைக்கல் தாலுகா என்ற இடம் உள்ளது. இங்குள்ள ஜிகினி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ராகேஷ் பாத்ரா என்பவர் வசித்து வருகிறார். ஒடிசா மாநிலத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சீமா நாயக் என்ற 21 வயது பெண் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இரண்டு பேரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் ஜிகினி அருகே உள்ள கல்லுபாலு கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து இரண்டு பேரும் தங்க முடிவு செய்துள்ளனர். காதலித்து வந்த நிலையில் ராகேஷ் மற்றும் சீமான் இருவரும் திருமணம் செய்யாமல் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சமீபகாலமாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
Also Read: ஆன்லைன் வர்த்தக நஷ்டம்.. 2 மகன்களை கொன்று தந்தை தற்கொலை




இதற்கிடையில் கடந்த இரு தினங்களாகவே ராகேஷ் வசித்து வந்த வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. தீபாவளியால் ஊரே மகிழ்ச்சியாக இருந்த நிலையில் இவர்கள் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததைக் கண்டு சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ராகேஷ் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் போன் ரிங் அடித்துக் கொண்டே இருந்ததே தவிர யாரும் போனை எடுத்து பேசவில்லை.
இதனை தொடர்ந்து சந்தேகம் அடைந்த மக்கள் அவர்கள் வீட்டு ஜன்னல் கதவை உடைத்துப் பார்க்கையில் உள்ளே சீமா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவருக்கு அருகே ராகேஷ் சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக ஜிகினி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்து ராகேஷ் மற்றும் சீமா ஆகியோரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
Also Read: பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட பெண்.. பகீர் பின்னணி!
இப்படியான நிலையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அக்டோபர் 19ஆம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட குடும்ப தகராறு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ராகேஷ் சீமா தூங்கிய பிறகு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று முன்தினம் (அக்டோபர் 20) அதிகாலையில் எழுந்து சீமா ராகேஷ் தூக்கில் தொங்குவதைக் கண்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டது தெரிய வந்தது.
இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் அந்த வீட்டிற்கு வாடகைக்கு வந்துள்ளனர். பண பிரச்சனையால் அவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஜிகினி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)