இந்திய போர்க்கப்பலுடன் பாகிஸ்தான் கடற்படை கப்பல் மோதல்: தூதரக அதிகாரிக்கு சம்மன்!
செப்டம்பர் 15ஆம் தேதி மாலை இந்த சம்பவம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு அரபிக்கடல் பகுதியில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியாவின் முன்னணி போர்க்கப்பல் அருகே பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் வந்ததாக கூறப்படுகிறது. "இந்த சம்பவத்தில் எந்தவித சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை" என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
செப்டம்பர் 16, 2026: இந்திய கப்பலுடன் பாகிஸ்தான் கடற்படை கப்பல் மோதிய சம்பவம் தொடர்பாக, பாகிஸ்தான் தூதரகத்தின் பொறுப்பு அதிகாரியை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரில் அழைத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தூதரகத்தின் பொறுப்பு அதிகாரியான சாத் அகமது வார்ராய்ச், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் நேரில் அழைக்கப்பட்டார். சர்வதேச கடல் பகுதியில் பாகிஸ்தான் கடற்படை பிரிவுகள் கடைப்பிடித்த “ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் தொழில்முறையற்ற நடவடிக்கைக்கு” இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
இந்திய கப்பலுடன் பாகிஸ்தான் கப்பல் மோதல்:
இந்த சம்பவம் சர்வதேச கடல் பகுதியில் நடைபெற்றதாகவும், இதில் பெரிய அளவிலான சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனினும், பாகிஸ்தான் கடற்படை கப்பலின் செயல்பாடு, ராணுவப் பயிற்சிகள், போர் ஒத்திகைகள் மற்றும் படையினர் நகர்வு தொடர்பாக முன்கூட்டியே தகவல் தெரிவிப்பது குறித்த இந்தியா-பாகிஸ்தான் இடையேயான 1991ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் 10ஆவது பிரிவுக்கு நேரடியாக முரணாக இருப்பதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
“இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், அனைத்து ராணுவப் பிரிவுகளும் உரிய முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவதுடன், இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்புடைய ஒப்பந்தங்களின் விதிகளை மதித்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்” என பாகிஸ்தான் தூதரக பொறுப்பு அதிகாரியிடம் அறிவுறுத்தப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
மேலும், இந்தியாவின் இந்த செய்தியை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடமும் தெரிவிக்குமாறு அந்த தூதரக அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டது. “இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் பொறுப்பு அதிகாரியும், பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் இதேபோன்ற எதிர்ப்பை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்” என வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஒவ்வொரு பள்ளியும் முன்மாதிரிப் பள்ளி.. இந்தியாவின் எதிர்காலத்திற்குத் தயாராகும் PM SHRI கல்வி திட்டம்
பாகிஸ்தான் தூதரகத்தின் பொறுப்பு அதிகாரி, டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஜன்பத் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டதாகவும், அங்கு சுமார் 30 நிமிடங்கள் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோதல் குறித்து வெளியான தகவல்கள்:
செப்டம்பர் 15ஆம் தேதி மாலை இந்த சம்பவம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு அரபிக்கடல் பகுதியில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியாவின் முன்னணி போர்க்கப்பல் அருகே பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் வந்ததாக கூறப்படுகிறது.
ஓமன் நாட்டின் கிழக்குப் பகுதியில் இருந்து சுமார் 220 கிலோமீட்டர் தொலைவில் இந்திய கப்பலை பாகிஸ்தான் போர்க்கப்பல் கடந்து சென்றதாகவும், அப்போது அது அதிக வேகத்தில், பாதுகாப்பற்ற மற்றும் தொழில்முறையற்ற வகையில் திசைமாற்றி இயக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக இரு கப்பல்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகள் முற்றிலும் இலவசம்.. மத்திய அரசு அறிவிப்பு!
“இந்த சம்பவத்தில் எந்தவித சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை” என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கப்பல்களின் துல்லியமான அடையாளம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும், இந்தியாவின் முன்னணி போர்க்கப்பலுடன் மோதியது பாகிஸ்தான் கடற்படையின் ஹுனைன் வகை (Hunain-class) கார்வெட் கப்பலாக இருக்கலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடல் சீற்றத்தால் ஏற்பட்ட விபத்து?
சம்பவம் நடைபெற்றபோது கடல் சீற்றத்துடன் காணப்பட்டதாகவும், பின்னர் இரு கப்பல்களும் ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. “சீற்றமான கடல் சூழலில் எவ்வாறு பாதுகாப்பாக செயல்படுவது என்பது குறித்து போதிய கவனம் செலுத்தாமல், பாகிஸ்தான் கடற்படையினர் ஆக்ரோஷமான, அச்சுறுத்தும் மற்றும் தொழில்முறையற்ற வகையில் செயல்பட்டனர்” என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய மற்றும் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள் மோதுவது தொடர்பான இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம், பாகிஸ்தான் கடற்படையின் ‘பாபர்’ கப்பலும், இந்திய கடற்படையின் ‘ஐஎன்எஸ் கோதாவரி’ கப்பலும் இதேபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டிருந்தன.