AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இந்தியாவின் முதல் உள்நாட்டு பறவைக் காய்ச்சல் தடுப்பூசி அறிமுகம்! கோழிப்பண்ணைத் தொழிலுக்கு புதிய நம்பிக்கை.. நாளை முதல் அமல்..

Bird Flu Vaccine: பல ஆண்டுகால ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைகளுக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்பூசி, கோழிப்பண்ணைத் தொழிலில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பறவைக் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்துவதுடன், கோழிப்பண்ணை விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளையும் குறைக்க இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் உள்நாட்டு பறவைக் காய்ச்சல் தடுப்பூசி அறிமுகம்! கோழிப்பண்ணைத் தொழிலுக்கு புதிய நம்பிக்கை.. நாளை முதல் அமல்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 19 Nov 2026 09:39 AM IST

நவம்பர் 19, 2026: இந்தியாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பைத் தடுக்கும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் H5N1 பறவைக் காய்ச்சல் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட உள்ளது. பல ஆண்டுகால ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைகளுக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்பூசி, கோழிப்பண்ணைத் தொழிலில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பறவைக் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்துவதுடன், கோழிப்பண்ணை விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளையும் குறைக்க இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போபால் விஞ்ஞானிகள் உருவாக்கிய தடுப்பூசி

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) கீழ் செயல்படும் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனம் (NIHSAD) விஞ்ஞானிகள் இந்தத் தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர்.

உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்பூசி, செயலிழக்கச் செய்யப்பட்ட H5N1 (Clade 2.3.2.1a) வகையைச் சேர்ந்ததாகும். இந்தியாவில் தற்போது பரவி வரும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பறவைக் காய்ச்சல் வைரஸுக்கு எதிராகப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: வாகன ஓட்டிகளே உஷார்! இன்ஸுரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் பைன்.. முக்கிய அறிவிப்பு!

இதுகுறித்து ICAR-NIHSAD நிறுவனத்தின் இயக்குநர் அனிகேத் சன்யால் கூறுகையில், கோழிகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும், பண்ணைகளின் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துவதிலும், கால்நடை மருத்துவத் தடுப்பூசி உற்பத்தியில் தற்சார்பு இந்தியா இலக்கை அடைவதிலும் இது முக்கிய மைல்கல்லாக அமையும் என தெரிவித்துள்ளார்.

24 மாநிலங்களில் 341 முறை பறவைக் காய்ச்சல் பாதிப்பு

இந்தியாவில் கடந்த 2006 முதல் 2021ஆம் ஆண்டு வரை 24 மாநிலங்களில் மொத்தம் 341 முறை பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 284 பாதிப்புகள் H5N1 வைரஸாலும், 57 பாதிப்புகள் H5N8 வைரஸாலும் ஏற்பட்டவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை குறைந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சில வகை வைரஸ்களுக்கு தடுப்பூசிகள் இருந்தாலும், தற்போது இந்தியாவில் பரவி வரும் H5N1 வகையின் Clade 2.3.2.1a வைரஸுக்கு எனத் தனிப்பட்ட தடுப்பூசி இல்லாத நிலை இருந்து வந்தது. இந்தச் சூழலில் புதிய தடுப்பூசியின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும் படிக்க: சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கேரள ‘சத்யா’ உணவு.. அரவணை பாயாசம் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள்..

மேலும், இந்த வைரஸ் பறவைகளுக்கு மட்டுமின்றி பாலூட்டி இனங்களைச் சேர்ந்த சில விலங்குகளுக்கும் பரவியுள்ளதாகவும், சமீபத்தில் மனிதர்களிடையேயும் மூன்று பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பொருளாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம்

பறவைக் காய்ச்சல் மிகப்பெரிய அளவில் பரவினால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் (GDP) 1.5 சதவீதம் வரை பாதிப்பு ஏற்படக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாடின்றிப் பரவினால் நாட்டின் மொத்த கோழி இனங்களில் 20 சதவீதத்துக்கும் அதிகமானவை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு ஏற்பட்ட பறவைக் காய்ச்சல் பாதிப்பால் இந்தியாவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ரூ.2,200 கோடி முதல் ரூ.3,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள H5N1 தடுப்பூசி, பறவைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதிலும், கோழிப்பண்ணைத் தொழிலைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us