விவசாயிகளுக்கு MSP விலை உத்தரவாதம் கிடைக்கிறதா? – ஒரு பார்வை
நெல், கோதுமை, பருத்தி உள்ளிட்ட 22 பயிர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் இந்த விலையை அறிவிக்கிறது. விதை, உரம், தண்ணீர், தொழிலாளர்கள் என பல்வேறு செலவுகளைச் செய்து பல மாதங்கள் காத்திருந்து விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு, அறுவடைக்குப் பிறகு சந்தை விலை சரிந்துவிட்டால் நஷ்டம் ஏற்படக்கூடாது என்பதுதான் இதன் முக்கிய நோக்கம்.
ஒரே மாவட்டத்தில் இரண்டு விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்கிறார்கள். இருவரும் ஒரே அளவுக்கு உழைக்கிறார்கள். இருவரும் ஒரே பருவத்தில் பயிரிடுகிறார்கள். ஆனால், அவர்களுடைய வருமானத்தில் மட்டும் மிகப்பெரிய வித்தியாசம்!
இதற்கு காரணம் என்ன தெரியுமா? அவர்கள் வசிக்கும் இடமும், அரசு கொள்முதல் மையம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதும்தான்! பீம்ராவ் என்ற விவசாயி அரசு கொள்முதல் மையத்திலிருந்து வெறும் 6 கிலோமீட்டர் தொலைவில் வசிக்கிறார். அரசு அறிவித்த விலைக்கு தனது விளைபொருளை விற்பனை செய்து பணம் பெறுகிறார்.
ஆனால், தன்ராஜ் என்ற மற்றொரு விவசாயி, கொள்முதல் மையத்திலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் வசிக்கிறார். போக்குவரத்து வசதியும் இல்லை. ஏற்கனவே உள்ளூர் வியாபாரியிடம் கடன் வாங்கியிருக்கிறார். இதனால், அந்த வியாபாரி சொல்லும் குறைந்த விலைக்கே தனது விளைபொருளை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இருவரும் ஒரே மாதிரிதான் உழைத்தார்கள். ஆனால், ஒருவருக்கு அரசு அறிவித்த விலை கிடைக்கிறது. மற்றொருவருக்கு கிடைக்கவில்லை. இதுதான் இந்திய விவசாயிகளின் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று!
அப்படியென்றால் என்ன இந்த MSP?
MSP எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது, விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை விற்பனை செய்யும்போது, சந்தையில் விலை குறைந்தாலும் ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச விலை கிடைப்பதை உறுதி செய்வதற்காக அரசு அறிவிக்கும் விலையாகும்.
நெல், கோதுமை, பருத்தி உள்ளிட்ட 22 பயிர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் இந்த விலையை அறிவிக்கிறது. விதை, உரம், தண்ணீர், தொழிலாளர்கள் என பல்வேறு செலவுகளைச் செய்து பல மாதங்கள் காத்திருந்து விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு, அறுவடைக்குப் பிறகு சந்தை விலை சரிந்துவிட்டால் நஷ்டம் ஏற்படக்கூடாது என்பதுதான் இதன் முக்கிய நோக்கம்.
ஆனால், அரசு MSP விலையை அறிவிப்பதால் மட்டுமே அனைத்து விவசாயிகளுக்கும் அந்த விலை கிடைத்துவிடுகிறதா என்றால் இல்லை!
அதிர்ச்சி அளிக்கும் புள்ளிவிவரங்கள்!
தேசிய புள்ளியியல் அலுவலகம் நடத்திய 2018-19ஆம் ஆண்டுக்கான விவசாயக் குடும்பங்கள் தொடர்பான ஆய்வில் சில முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நெல் பயிரிடும் விவசாயக் குடும்பங்களில் சுமார் 41 சதவீதம் பேருக்கு மட்டுமே MSP குறித்துத் தெரிந்திருக்கிறது. கோதுமை பயிரிடும் விவசாயக் குடும்பங்களில் இந்த எண்ணிக்கை சுமார் 37 சதவீதமாக உள்ளது.
அதாவது, நெல் பயிரிடும் விவசாயிகளில் 10 பேரில் 6 பேருக்கும், கோதுமை பயிரிடும் விவசாயிகளில் 10 பேரில் 6 பேருக்கும் மேல் அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த விழிப்புணர்வே இல்லை. இதுமட்டுமின்றி, நெல் பயிரிடும் விவசாயிகளில் நான்கில் ஒருவர் மட்டுமே தங்களுடைய விளைபொருளில் ஒரு பகுதியையாவது MSP விலையில் விற்பனை செய்துள்ளனர்.
இதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், அரசு விலையை அறிவிப்பது வேறு, அந்த விலையில் விளைபொருட்களை கொள்முதல் செய்வது வேறு! அரசின் கொள்முதல் பெரும்பாலும் நெல் மற்றும் கோதுமை பயிர்களில்தான் அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக பஞ்சாப், ஹரியானா மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் கொள்முதல் அதிகமாக நடைபெறுகிறது.
இந்தப் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு MSP என்பது உண்மையான வருமானமாக இருக்கிறது. ஆனால், மற்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு அது வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது.
MSP-க்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் தேவையா?
இதனால்தான் விவசாய அமைப்புகள் MSP விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச விலை வெறும் அறிவிப்பாக இல்லாமல், சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை.
ஆனால், இதற்கு எதிராகவும் சில முக்கியமான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அனைத்து பயிர்களையும் அரசு அறிவித்த MSP விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அரசுக்கு மிகப்பெரிய நிதிச்சுமை ஏற்படும். கொள்முதல் செய்யப்படும் தானியங்களை சேமித்து வைப்பதும், பின்னர் விற்பனை செய்வதும் சவாலாக இருக்கும்.
மேலும், குறிப்பிட்ட பயிர்களுக்கு அதிக விலை கிடைக்கும் என்பதால், தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில்கூட விவசாயிகள் நெல் போன்ற பயிர்களை அதிகமாகப் பயிரிடும் சூழல் ஏற்படலாம். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்புகளும், நுகர்வோருக்கு விலை உயர்வும் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.
இதற்கு மாற்றாக, சந்தை விலை MSP-க்கு கீழே சென்றால், அந்த வித்தியாசத் தொகையை அரசே விவசாயிகளுக்கு வழங்கும் முறையையும் சிலர் முன்வைக்கின்றனர்.
இறுதியாக ஒரு முக்கியமான கேள்வி!
விவசாயிகளுக்கு பாதுகாப்பு தேவை என்பதில் பெரும்பாலானோர் மாற்றுக் கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால், அந்தப் பாதுகாப்பை எப்படி வழங்குவது? அதற்கான செலவை யார் ஏற்றுக்கொள்வது? அனைத்து விவசாயிகளுக்கும் அது எப்படி சென்றடைவது? என்பதில்தான் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
அரசு MSP விலையை உயர்த்திவிட்டது என்ற தலைப்புச் செய்தி மட்டும் விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றிவிடாது. அந்த விலை எந்தப் பயிருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது? எந்த மாநிலத்தில் அரசு கொள்முதல் செய்கிறது? உண்மையில் எவ்வளவு விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன?
இந்த மூன்று கேள்விகளுக்கான பதில்கள்தான் MSP அறிவிப்பின் உண்மையான பயனைத் தீர்மானிக்கின்றன! உங்கள் மாநிலத்தில் விவசாயிகள் அதிகமாக எந்தப் பயிரை சாகுபடி செய்கிறார்கள்? அவர்களுடைய விளைபொருட்களை வாங்குவது யார்? இதைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?