பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் – குஜராத்தை சேர்ந்த உளவாளி கைது!
Health worker turns traitor : இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து ரகசியத் தகவல் வழங்கியதாக, குஜராத்தைச் சேர்ந்த ஒரு சுகாதார பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ஏஜெண்டுடன் வாட்ஸ்அப் வாயிலாக இந்திய எல்லை பாதுகாப்பு படை சம்பந்தமான முக்கிய புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்ததாக அவரர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு (India) எதிரான உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, குஜராத் (Gujarat) மாநிலத்தில் (Pakistan) உள்ள கச்சின் எல்லைப் பகுதியிலிருந்து ஒரு சுகாதாரப்பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் அவர் இந்திய விமானப்படை மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினரின் (BSF) முக்கிய தகவல்களை பகிர்ந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சாகதேவ் சிங் கோஹில் என அடையாளம் காணப்பட்டுள்ள அவர், கச்சின் பகுதியில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளராக வேலை செய்துவந்திருக்கிறார். இந்தியா டுடேயில் வெளியான தகவலின் படி இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு வாட்ஸ்அப் மூலம் அதிதி பாரத்வாஜ் என்ற பெயருடைய பெண்ணுடன் பேசியதாகவும் அந்த பெண் பாகிஸ்தான் உளவுத்துறையைச் சேர்ந்தவர் என்பதும் தற்போது தெரியவந்திருக்கிறது.
இதனையடுத்து அவர் புதிதாக கட்டப்பட்டு வந்த எல்லைப் பாதுகாப்பு படையினரின் இடங்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து அதனை வாட்ஸ்அப் மூலம் அதிதி பரத்வாஜுக்கு அவர் அனுப்பியுள்ளார். மேலும், அந்த பெண்ணுக்கு புதிதாக வாட்ஸ்அப் கணக்கை உருவாக்கும் வகையில் தனது ஆதார் கார்டை பயன்படுத்தி ஒரு புதிய சிம் கார்டும் வாங்கி தந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
40,000 ரூபாய் பணம் பெற்று உளவுத் தகவலை பகிர்ந்ததாக குற்றச்சாட்டு
கோஹிலுக்கு, பெயர் தெரியாத ஒருவர் மூலம் ரூ.40,000 ரொக்கமாக வழங்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது அவர் உளவுத் தகவல்களை பகிர்ந்ததற்காக அனுப்பப்பட்ட படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது ஸ்மார்ட்போன் தற்போது புலனாய்வுத்துறை ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இவர்மீதும் பாகிஸ்தான் முகவர்மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 61 மற்றும் 148 கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் நீண்ட காலமாக பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும், எல்லை தொடர்பான முக்கிய தகவல்களை அவர்களுக்கு அனுப்பி வருவதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. குஜராத் எல்லையில் பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்புடைய ஒருவர் பிடிபடுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக, போர்பந்தர் பகுதியில் இருந்து ஒரு உளவாளி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அந்த பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவது அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
பல மாநிலங்களில் உளவு பார்த்ததாக 11 பேர் கைது
இந்த வழக்கு, ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட உளவு தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். கடந்த ஒருவாரத்தில் ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசத்தில் 11 பேர் பாகிஸ்தானுக்கு உளவுத்தகவல் வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், ஹரியானாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்கோத்ரா உள்பட மாணவர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் ஒரு ஆப் டெவலப்பர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இவர்கள் மீதான விசாரணை தீவிரமடைந்து வருகிறது.