Fact Check: AI மூலம் உருவாக்கப்பட்ட பிரதமர் மோடியின் போலி வீடியோ வைரல்.. PIB உண்மை சரிபார்ப்பு குழு சொன்ன விளக்கம்..
அரசு தொடர்பான எந்த அறிவிப்பாக இருந்தாலும், அதை அதிகாரப்பூர்வ அரசு இணையதளங்கள் மூலமாக சரிபார்த்த பிறகே நம்ப வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் பகிர்வதற்கு முன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த உண்மையான தகவல்களை பொதுமக்கள் MyScheme Portal மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 26, 2026: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வீடியோவில், அனைத்து ஆதார் அட்டைதாரர்களுக்கும் மத்திய அரசு இலவச மின்சார சைக்கிள் வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததாக தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் போலியான வீடியோ:
இந்த வைரல் வீடியோவை “Dealdukaaan99” என்ற பெயரில் இயங்கும் ஃபேஸ்புக் கணக்கு பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஆதார் அட்டைதாரருக்கும் இலவச எலக்ட்ரிக் சைக்கிள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதுடன், பலரும் அதை உண்மையான அரசு அறிவிப்பாக நம்பி பகிரத் தொடங்கினர். குறிப்பாக வாட்ஸ்அப் உள்ளிட்ட மெசேஜிங் தளங்களில் இந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பி.ஐ.பி உண்மை சரிபார்ப்பு குழு சொன்ன விளக்கம்:
An AI-generated video of Prime Minister @narendramodi shared by the Facebook account ‘Dealdukaaan99’ falsely claims that electric bicycles will be provided to all Aadhaar card holders#PIBFactCheck:❌This claim is fake!
✅ No such announcement has been made by the Prime… https://t.co/5IT1D6XNMP
— PIB India (@PIB_India) May 25, 2026
இந்நிலையில், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ உண்மைச் சரிபார்ப்பு அமைப்பான பி.ஐ.பி உண்மை சரிபார்ப்பு, இந்த தகவல் முற்றிலும் போலியானது என விளக்கம் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியோ, மத்திய அரசோ இதுபோன்ற எந்த இலவச மின்சார சைக்கிள் திட்டத்தையும் அறிவிக்கவில்லை என தெரிவித்துள்ளது. மேலும், இந்த வீடியோ AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டு மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் பரப்பப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்களுக்கு அரசு முக்கிய எச்சரிக்கையும் விடுத்துள்ளது. சமூக வலைதளங்களில் இலவச பரிசுகள், பண உதவிகள், வாகனங்கள் அல்லது அரசு நலத்திட்டங்கள் வழங்கப்படும் என கூறப்படும் தகவல்களை உடனே நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற போலி அறிவிப்புகள் மூலம் மக்களின் தனிப்பட்ட தகவல்களை திரட்டுவது, போலியான பதிவு செயல்முறைகளில் சிக்கவைத்தல் மற்றும் ஆன்லைன் மோசடிகளில் ஈடுபடுத்துவது போன்ற அபாயங்கள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு அறிவிப்புகள் – அரசு இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும்:
எனவே, அரசு தொடர்பான எந்த அறிவிப்பாக இருந்தாலும், அதை அதிகாரப்பூர்வ அரசு இணையதளங்கள் மூலமாக சரிபார்த்த பிறகே நம்ப வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் பகிர்வதற்கு முன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த உண்மையான தகவல்களை பொதுமக்கள் MyScheme Portal மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தேகத்திற்கிடமான தகவல்கள், வீடியோக்கள் அல்லது படங்கள் கிடைத்தால் அவற்றை PIB Fact Check அமைப்பிற்கு வாட்ஸ்அப் எண் +91 8799711259 அல்லது factcheck@pib.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகும் போலி தகவல்கள் சமூக வலைதளங்களில் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.