பள்ளிகளில் மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும்…சிபிஎஸ்இ வலியுறுத்தல்!
Central Board of Secondary Education: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் 500 மாணவ, மாணவிகளுக்கு ஒரு மனநல ஆலோசகர், தொழில் ஆலோசகர் நியமிக்கப்பட வேண்டும் என்று சிபிஎஸ்இ வாரியம் வலியுறுத்தி உள்ளது, இது தொடர்பாக அறிக்கையையும் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது .
இந்தியாவில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் உளவியல் ஆரோக்கியம் தொடர்பான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஆலோசனை சேவைகள் குறித்த விதிமுறைகளை திருத்தி உள்ளது. இதன் மூலம் இணைக்கப்பட்ட பள்ளிகள் தங்கள் மன ஆரோக்கியம் மற்றும் தொழில் வழிகாட்டுதல் அமைப்புகளை கணிசமாக வலுப்படுத்தை கட்டாயமாக்கி உள்ளது. இது தொடர்பாக சிபிஎஸ்இ கல்வி வாரியம் நேற்று ஜனவரி 19- ஆம் தேதி (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சி. பி. எஸ். இ. பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் உளவியல் ஆரோக்கியம் தொடர்பான அனைத்து இடைநிலை மற்றும் மூத்த இடைநிலைப் பள்ளிகளும் முழுநேர அடிப்படையில் ஆரோக்கிய ஆசிரியர்கள் (சமூக-உணர்ச்சி ஆலோசகர்கள்) மற்றும் தொழில் ஆலோசகர்களை நியமிக்க வேண்டும்.
500 மாணவர்களுக்கு ஒரு மன நல ஆலோசகர்
அதன்படி, ஒவ்வொரு பள்ளிகளிலும் தற்போது 9- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு 500 மாணவர்களுக்கும் ஒரு ஆலோசகர் மற்றும் நல்வாழ்வு ஆசிரியரையும், ஒரு தொழில் ஆலோசகரையும் நியமிக்க வேண்டும். இதன் மூலம் 1,500 மாணவர்களைக் கொண்ட ஒரு பள்ளியில் குறைந்தது 3 ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். 300- க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் பகுதி நேர அடிப்படையில் ஆலோசகர்கள்கள் நியமனம் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க: பாஜகவின் புதிய தேசியத் தலைவராக நிதின் நபின் தேர்வு – யார் இவர்?




பள்ளிகளில் தரத்தை மேம்படுத்த வேண்டும்
இதே போல, அனைத்து பள்ளிகளிலும் தரத்தை மேம்படுத்துவதற்காக, அனைத்து ஆலோசகர்களும் வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்ட 50 மணி நேர திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும், இதில், உளவியல் – சமூக ஆலோசனை மற்றும் தொழில் ஆலோசனை ஆகியவை அடங்கும். உளவியல், சமூகப் பணி அல்லது பள்ளி ஆலோசனை மற்றும் சமூக – உணர்ச்சி கற்றல் ஆகியவற்றில் கல்விப் பயிற்சி பெறுவதையும் வாரியம் கட்டாயப்படுத்தி உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனநல ஆலோசகருக்கான தகுதிகள்
மேலும், கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதலை மையமாகக் கொண்ட பணிகளில் ஈடுபடும் தொழில் ஆலோசகர்கள், மனித நேயம், அறிவியல் அல்லது சமூக அறிவியலில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்ற பட்டதாரிகளாக இருக்க வேண்டும். அவர்கள் சிபிஎஸ்இ- ஆல் அனுமதிக்கப்பட வேண்டிய 50 மணி நேர தொழில்முறை மேம்பாட்டுப் பயிற்சியையும் பெற வேண்டும். இந்தப் பயிற்சி அமர்வுகள் பொதுவாக ஆலோசனை முறைகள், தொழில் மதிப்பீடு, மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் திறம்பட ஈடுபடுதல் மற்றும் தொழில் முறை கொள்கைகளைப் பின்பற்றுதல் போன்ற பகுதிகளை உள்ளடக்கியவையாக இருக்கும்.
மேலும் படிக்க: பெண் ஊழியர்களுடன் ஆபாச செயல்களில் ஈடுபட்ட கர்நாடகா டிஜிபி.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோக்கள்!