கருப்பாக இருப்பதாக கிண்டல்.. உயிரை மாய்த்துக்கொண்ட கல்லூரி மாணவி!
Bengaluru College Student Killed Herself | பெங்களூருவில் இரண்டாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் கருப்பாக இருப்பதால் தன்னை பலரும் கிண்டல் செய்த நிலையில், மனமுடைந்த மாணவி இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு, ஜூன் 27 : கர்நாடகா (Karnataka) மாநிலம் பெங்களூருவில், தான் கருப்பாக இருப்பதால் தன்னை யாரும் நேசிக்கவில்லை என கூறி கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத சூழலில் மாணவி இந்த விபரீத முடிவு எடுத்த நிலையில், அவரது வீட்டில் மாணவி கைப்பட எழுதிய கடிதத்தில் இதனை அவர் குறிப்பிட்டு வைத்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த நிலையில், மாணவி தற்கொலை செய்துக்கொண்டதன் காரணம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவி
கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம் அருகே உள்ள கெனியா பகுதியை சேர்ந்தவர் ஸ்ரேயா. 19 வயதாகும் இவர், மங்களூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஏ (BA – Bachelor of Arts) இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (ஜூன் 26, 2025) வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மாணவி ஸ்ரேயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அப்போது வெளியே சென்றிருந்த அவரது பெற்றோர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, ஸ்ரேயா தூக்கில் பிணமாக தூங்கியதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஸ்ரேயாவின் உடலைக் கண்டு அவரது பெற்றோர் கதறி அழுதுள்ளனர்.
கருப்பாக இருப்பதாக கிண்டல் – உயிரை மாய்த்துக்கொண்ட கல்லூரி மாணவி
இந்த நிலையில் மாணவியின் தற்கொலை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் மாணவியின் வீட்டை சோதனை செய்தபோது , அங்கு அவர் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று போலீசாரக்கு கிடைத்துள்ளது. அதில் தான் கருப்பாக இருப்பதால் அனைவரும் தன்னைக் கிண்டல் செய்வதாகவும், தன்னை யாரும் நேசிக்கவில்லை என்றும் தான் வாழ விரும்பவில்லை என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.




இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நிறவெறுப்பு காரணமாக மாணவி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிறம் காரணமாக மாணவி தற்கொலை செய்துக்கொண்ட இந்த விவகாரம் அந்த பகுதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை எண்ணம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
தற்கொலை எண்ணங்கள் வந்தால், நீங்கள் தனியாக இல்லை. மன அழுத்தம், நெருக்கடியான சூழ்நிலை, தவிர்க்க முடியாத அனுபவங்கள் போன்றவை யாரையும் தற்கொலை எண்ணத்துக்கு இட்டுச் செல்லலாம். ஆனால், இதற்கான தீர்வுகள் இருக்கின்றன. தயங்காமல் உதவியை தேடுங்கள்.
மனநல ஹெல்ப்லைன் எண்கள்
தன்னம்பிக்கை – 104 (தமிழ்நாடு அரசின் மனநலம் ஆலோசனை சேவை)
Sneha Foundation – 044 2464 0050 / 044 2464 0060 (24 மணி நேரம், தமிழிலும் செயல்படுகிறது)
iCall (TISS) – +91 9152987821 (WhatsApp வழியாகவும் கிடைக்கும்)