95 சதவீத விமான சேவைகள் மீட்பு.. கடும் சவால்களுக்கு பிறகு இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு!
Indigo Flight Services Recovered | டிசம்பர் 1, 2025 முதல் இண்டிகோ நிறுவனம் விமான போக்குவரத்து சேவைகளில் கடுமையான சவால்களை எதிர்க்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தான், 95 சதவீதம் விமான போக்குவரத்து சேவைகள் மீட்கப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி, டிசம்பர் 07 : விமானிகள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக கடந்த சில நாட்களாக இண்டிகோ (Indigo) விமான நிறுவனம் கடுமையான சவால்களை எதிர்க்கொண்டு வருகிறது. ஆட்கள் பற்றாக்குறையால் இண்டிகோ, ஆயிரக்கணக்கான விமானங்களை ரத்து செய்த நிலையில், பயனர்கள் மத்தியில் அது கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், 95 சதவீத விமான சேவை இணைப்பு மீட்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிலையில், விமான சேவை குறித்து இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விமானிகள், பணியாளர்கள் பற்றாக்குறையால் விமானங்களை ரத்து செய்த இண்டிகோ
விபத்துகள் அல்லாத பாதுகாப்பான பயணங்களை உறுதி செய்யும் வகையில் சிவில் விமான போக்குவரத்து துறை புதிய விதிகளை அறிமுகம் செய்தது. அதில், விமானிகள் தொடர்ந்து 8 மணி நேரத்திற்கு மேலாக விமானத்தை ஓட்ட கூடாது என்றும், அவர்களுக்கு வாரத்தில் கட்டாயம் 48 மணி நேரம் ஓய்வு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தது. இந்த விதிகளை இண்டிகோ பின்பற்றாமல் இருந்த நிலையில், டிசம்பர் 1, 2025 முதல் கடும் சவால்களை எதிர்க்கொண்டு வருகிறது. விமானிகள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக தொடர்ச்சியான விமானங்களை இண்டிகோ ரத்து செய்து வந்தது. இதன் காரணமாக உள்நாட்டு விமானங்கள் மட்டுமன்றி, வெளிநாட்டு விமான பயணங்களும் ரத்தானது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் விமான நிலையத்தில் இண்டிகோ அதிகாரிகள் சண்டையிடும் சம்பவங்களும் நடைபெற்றன.
இதையும் படிங்க : குனோ தேசிய பூங்காவில் சிறுத்தை குட்டி உயிரிழப்பு…என்ன காரணம்!




இண்டிகோ விவகாரத்தில் நடவடிக்கை எடுத்த அரசு
இண்டிகோ விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், அதில் தலையிட அரசு முடிவு செய்தது. அதாவது, சிக்கல் சரியாகும்வரை பணியாளர்கள் கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்ற வேண்டாம் என்று அரசு இண்டிகோ நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது. இந்த நிலையில், விமான சேவைகள் படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு வருவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. டிசம்பர் 06, 2025 அன்று 113 இடங்களுக்கு 700 விமானங்களை இயக்கிய நிலையில், இன்று (டிசம்பர் 07, 2025) 1,500-க்கும் அதிகமான விமானங்களை இயக்க உள்ளதாக கூறியுள்ளது.
இதையும் படிங்க : இண்டிகோ சேவை ரத்து: விண்ணை முட்டிய விமான டிக்கெட் விலை.. பயணிகள் கடும் அவதி
இண்டிகோ நிறுவனம் வழக்கமாக விமானங்களை இயக்கும் 138 இடங்களில் மொத்தம் 135 இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், 95 சதவீதம் விமான சேவை இணைப்பு மீட்கப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.