இண்டிகோ சேவை ரத்து: விண்ணை முட்டிய விமான டிக்கெட் விலை.. பயணிகள் கடும் அவதி!!
IndiGo crisis: இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயண்படுத்திக்கொண்ட மற்ற விமான நிறுவனங்கள், விமான டிக்கெட் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளன. அதன்படி, சென்னையில் இருந்து கோவைக்கு விமான டிக்கெட் விலை வழக்கமாக ரூ.5,400 ஆக இருக்கும் நிலையில், தற்போது ரூ.57,700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை, டிசம்பர் 06: நாடு முழுவதும் இண்டிகோ (Indigo) ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவை கடந்த 2 நாட்களாக முடங்கியுள்ளது. இதன் காரணமாக நேற்று ஒரேநாளில் 1000க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், மாற்று பயண ஏற்பாடின்றி பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயண்படுத்திக்கொண்ட மற்ற விமான நிறுவனங்கள், விமான டிக்கெட் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளன. இந்தியாவில் மிகப்பெரிய விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாக இண்டிகோ உள்ளது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் தினமும் 2,200-க்கு மேற்பட்ட விமானங்களை இண்டிகோ இயக்கி வருகிறது.
மேலும் படிக்க: “கூடங்குளம் அனுமின் திட்டத்திற்கு உறுதுணையாக இருப்போம்”.. ரஷ்ய அதிபர் புதின் உறுதி!!
புதிய விதிமுறையால் வந்த சிக்கல்:
கடந்த சில நாட்களாக இந்த நிறுவனத்துக்கு தொடர்ச்சியாக பெரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. விமானங்கள் தாமதமாவதும், ரத்து செய்யப்படுவதும் அதிகரித்து வருவதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பொதுவாக, தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் மோசமான காலநிலை காரணம் என கூறப்பட்டாலும், இந்த முறை வேறு ஒரு முக்கிய காரணம் சொல்லப்படுகிறது. அதாவது, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய FDTL (Flight Duty Time Limit) என்ற புதிய விதி பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திணறிய இண்டிகோ நிறுவனம்:
இந்த விதிமுறைகள் கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இதனால், விமானிகள் எவ்வளவு நேரம் பறக்க வேண்டும், எவ்வளவு நேரம் ஓய்வெடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகளை பின்பற்றுவதற்கு, இண்டிகோ நிறுவனத்திடம் போதிய அளவு விமானிகள் இல்லாததால் பிரச்சினை உருவாகியுள்ளது. இதன் காரணமாக பல விமானங்கள் இயக்க முடியாமல் போயுள்ளன.
இதனால், கடந்த சில நாட்களாக டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் என இந்தியாவின் பல விமான நிலையங்களில் இண்டிகோ விமானங்கள் மட்டும் திடீரென ரத்து செய்யப்படுவதும், தாமதம் ஆவதுமாக இருந்து வந்தது. இவ்வாறு திடீரென விமானம் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் மாற்று பயண ஏற்பாடுகளை கூட செய்ய முடியாமல் தவித்தனர்.
பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்:
இது இப்படி இருக்க, இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயண்படுத்திக்கொண்ட மற்ற விமான நிறுவனங்கள், விமான டிக்கெட் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளன. அதன்படி, சென்னையில் இருந்து கோவைக்கு விமான டிக்கெட் விலை வழக்கமாக ரூ.5,400 ஆக இருக்கும் நிலையில், தற்போது ரூ.57,700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூ.4,600 ஆக இருந்த விமான டிக்கெட் விலை தற்போது ரூ.26,700 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னையில் இருந்து டெல்லிக்கு விமான கட்டணம் ரூ.35,000 ஆகவும், சென்னையில் இருந்து கொச்சிக்கு விமானத்தில் ரூ.41,000 ஆகவும் டிக்கெட் விலை உயர்ந்துள்ளது.சென்னையில் இருந்து பெங்களூருக்கு விமான கட்டணம் ரூ.25,000மாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, விமான டிக்கெட் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க : கொடூர விபத்து…காரில் 8 மணி நேரம் உயிருக்கு போராடி பலியான தம்பதி!
விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை:
இந்நிலையில், கட்டண கொள்ளை புகார் குவிந்ததை அடுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை பயன்படுத்தி, அதிக கட்டணங்கள் வசூலிக்கக்கூடாது என மத்திய அரசு எச்சரித்துள்ளது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்புக்கு உட்பட்டே விமான நிறுவனங்கள் கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்றும் நிலைமை சீராகும் வரை அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.