கொடூர விபத்து…காரில் 8 மணி நேரம் உயிருக்கு போராடி பலியான தம்பதி!
Delhi Car Accident Couple Died: டெல்லியில் விரைவுச் சாலையில் கனரக வாகனம் மோதிய விபத்தில் காரில் பயணித்த தம்பதி பலத்த காயமடைந்து சுமார் 8 மணி நேரம் உயிருக்கு போராடி பலியாகி உள்ளனர். இதனால், அந்த தம்பதியின் 4 குழந்தைகள் நிர்கதியாகி உள்ளன.
டெல்லி – மும்பை விரைவுச் சாலையில் நூஹ் அருகே அடையாளம் தெரியாத கனரக வாகன மோதியதில் காரில் சென்ற தம்பதி பலத்த காயமடைந்து 8 மணி நேரம் உயிருக்கு போராடி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து நூஹ் சதார் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீன் குமார் கூறுகையில், போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் ராஜஸ்தானின் கரெளலியைச் சேர்ந்த லச்சி ராம் மற்றும் அவரது மனைவி குசும் லதா ஆகியோர் என்பது தெரியவந்தது. டெல்லியின் புத் விஹாரில் உள்ள மங்கேரம் பூங்காவில் வசித்து வந்த இவர்கள் தங்களது காரில் டெல்லி-மும்பை விரைவுச் சாலையில் நுஹ் பகுதியில் உள்ள நோசெரா கிராமம் அருகே சென்ற போது, பின்னால் வந்த கனரக வாகனம் மோதியதில் கார் அப்பளம் போல நொறுங்கி தம்பதி இருவரும் பலத்த காயமடைந்து காரின் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
8 மணி நேரம் உயிருக்கு போராடிய தம்பதி
பரபரப்பான டெல்லி மும்பை விரைவு சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் காரின் உள்ளே தம்பதி சுமார் 8 மணி நேரம் உயிருக்கு போராடி பலியாகி உள்ளனர். மேலும், அந்த வழியாகச் சென்ற எந்த வாகன ஓட்டிகளும் இந்த காரில் இருந்தவர்களை மீட்காமல் இருந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: ஆதரவற்ற சிறுமி.. அடைக்கலம் கொடுப்பது போல் பாலியல் வன்கொடுமை செய்த மாமா!
விபத்தை அறியாத தந்தையின் செயல்
இந்த காரின் மீது மோதியதாக சந்தேகப்படும் இரு வாகனங்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். சம்பந்தப்பட்ட வாகனத்தை விரைவில் கண்டுபிடிப்போம் என்று கூறினார். இந்த வித்துது குறித்து தகவல் அறியாத லச்சி ராமின் தந்தை தேவி சிங் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டார். வெகு நேரம் செல்போனை எடுக்காத நிலையில், விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார் செல்போனை எடுத்து தேவி சிங்குக்கு விபத்து குறித்து தகவல் தெரிவித்தனர்.
4 குழந்தைகள் நிர்கதியாகி உள்ளது
இதைத் தொடர்ந்து, தேவி சிங் அளித்த புகாரின் பேரில், அடையாளம் தெரியாத ஓட்டுனர் மீது நூஹ் சதார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த லச்சி ராம் கட்டுமான ஒப்பந்ததாரராகவும், லதா இல்லத்தரசியாகவும் இருந்து வந்தனர். இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் மற்றும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். விபத்தில் தாய் மற்றும் தந்தை உயிரிழந்ததால் இந்த 4 குழந்தைகளும் நிர்கதியாகி உள்ளது.
மேலும் படிக்க: ரசகுல்லாவால் வந்த ரகளை…திருமணத்தில் மணமகன்-மணமகள் குடும்பத்தினர் களேபரம்!