விடியற்காலையில் தலைச்சுற்றலா? இதோ முக்கிய காரணங்கள்!
Morning Dizziness: காலையில் எழுந்தவுடன் ஏற்படும் தலைச்சுற்றலுக்கு ரத்த அழுத்தம் சட்டென குறைதல் மற்றும் உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறையே முதன்மைக் காரணங்களாக அமைகின்றன; படுக்கையிலிருந்து மிக வேகமாக எழும் போது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் ஏற்படும் தற்காலிகத் தடையால் இத்தகைய மயக்கம் உண்டாகிறது.
இரவு முழுவதும் நிம்மதியாக உறங்கிவிட்டு, அதிகாலையில் உற்சாகமாக எழ முயற்சிக்கும்போது பலருக்கும் உலகம் சுற்றுவது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. படுக்கையிலிருந்து எழுந்திருக்க முற்படும்போது கண்கள் இருட்டிக்கொண்டு, தலை பாரமாகி, நிலைதடுமாற்றம் ஏற்படுவதை ‘காலை நேரத் தலைசுற்றல்’ என்கிறோம். இது தற்காலிகமான ஒரு அசௌகரியமாகத் தெரிந்தாலும், இதற்குப் பின்னால் உடலின் பல்வேறு உட்புற மாற்றங்களும், ஆரோக்கியக் குறைபாடுகளும் ஒளிந்திருக்கக்கூடும். குறிப்பாக, சட்டென படுக்கையை விட்டு எழுந்து அமரும்போது புவிஈர்ப்பு விசைக்கு ஏற்ப ரத்த ஓட்டம் மூளைக்குச் சீராகச் செல்லாததே இதற்கு முதன்மைக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
உடலில் நீர்ச்சத்துக் குறைபாடும் ரத்த அழுத்த மாற்றமும்
இரவு நேரத்தில் நாம் நீண்ட நேரம் தண்ணீர் அருந்தாமல் உறங்குவதால், காலையில் உடல் ஓரளவிற்கு நீர்ச்சத்துக் குறைபாட்டுடன் (Dehydration) காணப்படலாம். ரத்தத்தில் நீர்ச்சத்து குறையும்போது அதன் அடர்த்தி மாறுபட்டு, ரத்த அழுத்தம் குறையத் தொடங்குகிறது. இதனால் மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் தற்காலிகமாகக் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும், ‘ஆர்தோஸ்டேடிக் ஹைபோடென்ஷன்’ (Orthostatic Hypotension) எனப்படும் நிலை, படுத்திருக்கும் நிலையில் இருந்து திடீரென நிற்கும்போது ரத்த அழுத்தம் சட்டென குறைவதை உணர்த்துகிறது. இதுவே காலை நேரத் தடுமாற்றத்திற்கு முக்கியப் புள்ளியாக அமைகிறது.
உள் காது பிரச்சனைகளும் சமநிலைத் தன்மையும்
நமது உடலின் சமநிலையை (Balance) பராமரிப்பதில் காதுகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. உள் காதில் உள்ள திரவ நிலையில் மாற்றம் ஏற்பட்டாலோ அல்லது சிறு துகள்கள் இடம்பெயர்ந்தாலோ (BPPV – Benign Paroxysmal Positional Vertigo), தலை சுற்றல் உணர்வு உண்டாகும். தலை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் அசையும்போது, காதில் உள்ள நரம்புகள் தவறான சிக்னல்களை மூளைக்கு அனுப்புவதால், நாம் சுழல்வது போன்ற பிரமை ஏற்படுகிறது. இது தவிர, முந்தைய நாள் இரவு உட்கொண்ட சில மருந்துகள் அல்லது குறைந்த ரத்த சர்க்கரை அளவு (Low Blood Sugar) ஆகியவையும் காலையில் விழிக்கும்போது சோர்வையும் மயக்கத்தையும் தூண்டலாம்.
தீர்வுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்
இப்பரச்சினையைத் தவிர்க்க, காலையில் அலாரம் அடித்தவுடன் அவசரமாக எழுந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். முதலில் மெதுவாகக் கண்களைத் திறந்து, படுக்கையிலேயே சில நொடிகள் அமர்ந்து, பின் கால்களைத் தரையில் ஊன்றி நிதானமாக எழ வேண்டும். இரவு உறங்குவதற்கு முன்னும், காலையில் எழுந்தவுடனும் போதிய அளவு தண்ணீர் குடிப்பது ரத்த ஓட்டத்தைச் சீராக்க உதவும். இருப்பினும், இந்தத் தலைசுற்றல் தொடர்ச்சியாக நீடித்தால், அது இதயம் சார்ந்த பிரச்சனையாகவோ அல்லது நரம்பியல் கோளாறாகவோ இருக்க வாய்ப்புள்ளதால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனப் பெறுவது அவசியமாகும்.