Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிரபல திரைப்பட இயக்குநர் வி.சேகர் காலமானார் – ரசிகர்கள் சோகம்

Director V.Sekar : குடும்ப படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் வி.சேகர் உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நவம்பர் 14, 2025 அன்று காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிைடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல திரைப்பட இயக்குநர் வி.சேகர் காலமானார் – ரசிகர்கள் சோகம்
வி.சேகர்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 14 Nov 2025 19:26 PM IST

குடும்ப படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் வி.சேகர் (V.Sekar) உடல்நலக்குறைவால் காலமானார். விரலுக்கு ஏத்த வீக்கம் (Viralukketha Veekkam), வரவு எட்டனா செலவு பத்தனா போன்ற படங்களின் மூலம் ரசிகர்களில் மனதில் தனி இடத்தை பெற்றவர். கடந்த சில நாட்களாக உடல்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நவம்பர் 14, 2025 அன்று காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிைடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 72. குடும்ப சிக்கல்களை பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்லி தனக்கென தனி அடையாளத்தை பெற்றவர் வி.சேகர். இவரது படங்களில் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது மரணம் தமிழ் திரையுலகுக்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.

இயக்குநர் வி.சேகரின் திரைப்பயணம்

சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வந்த வி.சேகர், இயக்குநர் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான நீங்களும் ஹீரோ தான் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே நடிகர்களின் போலி பிம்பத்தை உடைத்தார்.  சினிமாவில் காட்டப்படுவதை எல்லாம் உண்மை என நம்பி நடிகர்களின் பின்னால் செல்லும் ரசிகர்களின் நிலையை அந்த படத்தில் தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருந்தார்.  பெரும்பாலும் தனது படங்களை திருவள்ளூவர் கலைக்கூடம் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் இவரே தயாரித்தும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : அரசன் படத்தில் கவினுக்காக ஒரு கதாபாத்திரம் இருந்தது.. ஆனால் – வெற்றிமாறன் ஓபன் டாக்!

தொடர்ந்து குடும்பங்களில் நடக்கும் பிரச்னைகளை அடிப்படையாக வைத்து பொறந்த வீடா குடும்ப வீடா, வரவு எட்டனா செலவு பத்தனா போன்ற படங்களை இயக்கினார். அன்றைய காலகட்டத்தில் சமூகத்தில் நிலவி வந்த மாமியார் கொடுமை பிரச்னைகளை தனது நான் பெத்த மகனே படத்தில் பேசினார். வருமானத்தை மீறி செலவு செய்வதால் ஏற்படும் பிரச்னைகளை வரவு எட்டணா செலவு பத்தனா பத்தில் பேசினார்.

குறிப்பாக இவரது படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும். குடும்பத்தில் நடக்கும் பிரச்னைகளை நகைச்சுவையாக சொல்லும் இவர் பாணி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. வன்முறை, கவர்ச்சி இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் படங்களைக் கொடுத்தார். இதன் காரணமாக பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக இவரது படங்கள் வசூல் சாதனை படைத்தது.

குடும்ப படங்களுக்கு பெயர் பெற்ற வி.சேகர்

வி.சேகர் படங்கள் என்றாலே குடும்பங்களில் நடக்கும் சிக்கல்களையும் அனைவருக்கும் ரசிக்கும்படியாக காட்சிப்படுத்தியிருப்பார். சமீபத்தில் குடும்பஸ்தன் பட நிகழ்வில் பேசிய நடிகர் மணிகண்டன் தமிழ் சினிமாவில் இயக்குநர் வி.சேகர் படங்களின் முக்கியத்துவம் குறித்து பேசினார். அந்த அளவுக்கு உறவு சிக்கல்கள் குறித்து அனைவரும் ரசிக்கும்படி தனது படங்களில் பேசினார்.

இதையும் படிக்க : வெற்றிமாறன் எந்த கேரக்டருக்காகவும் என்னை பாராட்டியது இல்லை… ஆனால் – ஆண்ட்ரியா சொன்ன விசயம்

இவரது படங்களில் ஹீரோக்களை விட காமெடி நடிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் போன்றோர் இவரது படங்களில் தங்களது முத்திரையை பதித்தனர். குறிப்பாக நடிகர் வடிவேலு இவர் படங்களில் நடிக்கத் தொடங்கிய பிறகே திரையுலகில் அதிக கவனம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்து படங்களில் பெரிய ஹீரோக்கள் இருக்க மாட்டார்கள், பெரிய இசையமைப்பாளர்கள் இருக்க மாட்டார்கள். ஆனாலும் இவரது படத்தை ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்தனர்.