Chinmayi Sripada: சின்ன வயசு சின்மயி தெரியுமா.. சூப்பரா பாடும் வீடியோ!
சின்மயி ஸ்ரீபதாவின் 1999-ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான சப்தஸ்வரங்கள் இசை நிகழ்ச்சியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஸ்ரீனிவாஸ் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானிடம் அறிமுகமான சின்மயி, 'ஒரு தெய்வம் தந்த பூவே' பாடல் மூலம் பிரபலமானார். டப்பிங் கலைஞராகவும் சிறந்து விளங்கும் அவர், தற்போது தக் லைஃப் பட இசை வெளியீட்டு விழாவில் பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாகவும், டப்பிங் கலைஞராகவும் திகழும் சின்மயியின் (Chinmayi Sripada) பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 1999 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான இசை நிகழ்ச்சியான சப்தஸ்வரங்கள் நிகழ்வில் தான் அவர் பங்கேற்ற வீடியோ ட்ரெண்டாகியுள்ளது. விவி ரமணன் தொகுத்து வழங்கும் அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பங்கேற்றிருக்கிறார். அதில் பேசும் சின்மயி, இந்த நிகழ்ச்சியை என்னுடைய நண்பர்கள் பார்ப்பார்கள். பாடுவதை தவிர்த்து நான் நடனம் கற்று வருகிறேன். அந்த நிகழ்ச்சியில் திரையைப் பார்த்து பாடும் போட்டியானது நடத்தப்பட்டது. இதில் சின்மயி 1991 ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் மம்முட்டி, பானுப்பிரியா, மதுபாலா உள்ளிட்டோர் நடித்த அழகன் படத்தில் இடம் பெற்ற தத்தித்தோம் பாடலை பாடுகிறார்.
இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், “சின்ன வயசு சின்மயி க்யூட்டாக இருக்கிறார்”, “நீ பாடுவதற்காகவே பிறந்தவர்”, “அப்பவே சின்மயி குரல் சூப்பராக உள்ளது” என பாராட்டியுள்ளனர்.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
சின்மயி 2002 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற “ஒரு தெய்வம் தந்த பூவே” பாடல் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். அதேபோல் சில்லுன்னு ஒரு காதல் படத்தில் நடிகை பூமிகாவுக்கு பின்னணி குரல் கொடுத்ததன் மூலமாக டப்பிங் கலைஞராகவும் எண்ட்ரி கொடுத்தார். சின்மயி சினிமாவில் பாடகியாக அறிமுகமாக சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சி தான் அடிப்படையாக அமைந்தது.
அவரின் குரலை பார்த்து பிரமித்த பாடகர் ஸ்ரீனிவாஸ் ஏ.ஆர்.ரஹ்மானிடம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் சின்மயி தென்னிந்திய சினிமாவின் மிக முக்கியமான பாடகியாக வலம் வருகிறார். நடிகர் ராகுல் ரவீந்தரை திருமணம் செய்துக் கொண்ட அவருக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். மீ டூ பிரச்னை காரணமாக சின்மயிக்கு டப்பிங் யூனியன் 7 ஆண்டுகள் தடை விதித்தது. இருந்தாலும் லியோ படத்தில் த்ரிஷாவுக்கு டப்பிங் கொடுத்திருந்தார்.
தக் லைஃப் பாடல் மூலம் ட்ரெண்ட்
கடந்த 2025, மே 24 ஆம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன்,சிலம்பரசன் டிஆர்,அபிராமி, த்ரிஷா, அசோக் செல்வன், சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவான தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் பாடகி தீ பாடிய முத்த மழை பாடலை மேடையில் சின்மயி தன்னுடைய மயக்கும் குரலில் பாடி அனைவரையும் அசர வைத்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில் பலரும் மீண்டும் சின்மயி முழு வீச்சாக சினிமாவில் இயங்க வேண்டும் எனவும், அவரின் கொண்டாடப்படாத பாடல்கள் என ஒரு பட்டியலையும் வெளியிட்டு வருகின்றனர்.