கவுண்டமணியின் மனைவி மரணம் – நேரில் வந்து கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்ன விஜய் – வைரலாகும் வீடியோ
TVK Leader Vijay Pays Respects : நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இதன் ஒரு பகுதியாக நடிகர் விஜய் நேரில் வந்து கவுண்டமணிக்கு ஆறுதல் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் கவுண்டணி (Goundamani). கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் மக்களை மகிழ்வித்து வருகிறார். மேடை நாடகங்களில் காட்சிக்கு காட்சி கவுண்டர் கொடுப்பதால் கவுண்டர் மணி என்ற பெயர் அவருக்கு கிடைத்திருக்கிறது. அது நாளடைவில் கவுண்டமணி என்று மாறியிருக்கிறது. தற்போது 85 வயதாகும் கவுண்டமணி வயது மூப்பு காரணமாக படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டிருக்கிறார். தற்போது அவரது நடிப்பில் ஒத்த ஓட்டு முத்தையா என்ற படம் ரிலீஸிற்கு தயாராகியிருக்கிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த படத்தில் அவர் ஹீரோவாக நடித்திருக்கிறார். சாய் ராஜ கோபால் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யோகி பாபுவும் (Yogi Babu) முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
நடிகர் கவுண்டமணியின் மனைவி மரணம்
இந்த நிலையில் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி மே 5, 2025 அன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 67. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணியின் வீட்டில் அவரது மனைவியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மரணம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திரையுலக பிரபலங்கள் பலரும் கவுண்டமணியின் வீட்டுக்கு நேரில் சென்று அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடன் பல படங்களில் இணைந்து நடித்திருந்த செந்தில் அவருக்கு நேரில் வந்து ஆறுதல் தெரிவித்திருந்தார். இந்த காட்சிகள் காண்போரை நெகிழ செய்தது.
கவுண்டமணிக்கு நேரில் வந்து ஆறுதல் சொன்ன விஜய்
View this post on Instagram
இதன் ஒரு பகுதியாக நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் கவுண்டமணியிடம் நீண்ட நேரம் உரையாடிய அவர் அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லியிருந்தார். நடிகர் விஜய்யின் ஆரம்ப கால படங்களில் கவுண்டமணியுடன் இணைந்து அவர் நடித்திருக்கிறார். ஜன நாயகன் படத்துக்காக கொடைக்கானலில் இருந்த விஜய் மே 5, 2025 அன்று மாலை சென்னை திரும்பினார். தகவலைக் கேள்விப்பட்ட விஜய் உடனடியாக கவுண்டணியின் வீட்டிற்கு வந்து ஆறுதல் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்யின் ரசிகன், கோயம்புத்தூர் மாப்பிள்ளை ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தார். அந்த படங்களில் அவர்கள் இருவரது காமினேஷன் அசத்தலாக இருக்கும். குறிப்பாக கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தில் வேலைக்கு செல்வதாக மாறி மாறி நடிக்கும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தன. விஜய் கோயம்புத்தூர் ஸ்டைலில் அண்ணா என அழைப்பார். இது குறித்து பழைய பேட்டி ஒன்றில் அவர் கவுண்டமணியின் தீவிர ரசிகர் என்றும் அவரிடம் இருந்து அந்த ஸ்டைலை பின்பற்றுவதாகவும் தெரிவித்திருந்தார்.