ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்.. ஓமன் டூ திருப்பத்தூர் வந்த நபரின் பதிவு வைரல்!
Tirupattur Constituency TVK Candidate: தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரு வாக்கு வித்தியாசத்தில் அமைச்சர் பெரியகருப்பனை வீழ்த்தினார். தவெக வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கு ஓமன் நாட்டில் இருந்து வந்தவரின் பதிவு வைரலாகி வருகிறது.

ஓமன் நாட்டில் இருந்து வாக்களித்த நபர்
தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக ஓமன் நாட்டில் இருந்து நீண்ட தூரம் பயணம் செய்து தமிழகத்தை சேர்ந்த ஒருவர் வந்ததாக இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறார். அந்த நபர் ஆதரித்த வேட்பாளர் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக கூறப்பட்டதை அடுத்து இந்த நபர் பிரபலம் அடைந்துள்ளார். மணிகண்டன் சிவானந்தம் என்ற இளைஞர் ஓமன் நாட்டில் மஸ்கட் என்ற இடத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களிப்பதற்காகவே சுமார் 3,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்ததாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தற்போது, வெளியான சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி முடிவுகள் முக்கிய கவனம் பெற்றுள்ளது.
ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்
அந்த தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சர்ருமான பெரிய கருப்பனை, ஒரு வாக்கு வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் எண்ணப்பட்ட வாக்குகளின் இறுதி சுற்றுகளின் அடிப்படையில், தமிழக வெற்றிக்காக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதில், ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் பெரிய கருப்பன் தோல்வியை தழுவினார். தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே மணிகண்டன் தனது பயணத்தையும், முடிவையும் தொடர்பு படுத்தி சமூக வலைதளங்களில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.
மேலும் படிக்க: பனையூரில் தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டம்.. ஆட்சி அமைக்க விஜய் போடும் ‘மாஸ்டர் பிளான்’!
சமூகவலைதளங்களில் வைரலாகும் பதிவு
அதில், திப்பட்டூர் தொகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தவெக தலைவர் விஜய்க்கு வாக்களிப்பதற்காக ஓமன் நாட்டில் இருந்து இந்தியா வரை பயணம் செய்ததில் நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். இந்த பதிவில் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில், திருப்பத்தூர் தொகுதி தேர்தல் முடிவில் இந்த நபரின் வாக்கு நேரடி பங்கு வகித்திருக்கலாம் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
ஓமன் நாடு டூ திருப்பத்தூர் தொகுதி
தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களிப்பதற்காக ஓமன் நாட்டிலிருந்து விமான பயணத்தை முன்பதிவு செய்ததாக மணிகண்டன் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி பதிவிட்டு இருந்தார். அவரது பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில், தேர்தலில் வாக்களிப்பதற்காக நீண்ட தூரம் பயணம் செய்ததற்காக பலரும் அவரை பாராட்டினர். அதில், ஒரு நபர் இன்னும் எத்தனை தருணங்களையும், அற்புதங்களையும் நாம் தமிழகத்தில் காணப்போகிறோம். மஸ்கட்டில் இருந்து தமிழகத்துக்கு வந்த 26 பேரில் இந்த தேர்தலுக்கு என்ன ஒரு வெற்றியை கொண்டு வந்தீர்கள் என்று எதிர் கருத்து தெரிவித்திருந்தனர்.
மேலும் படிக்க: மாபெரும் வெற்றி பெற்றும் தனிப்பெரும்பான்மை இல்லை.. ஆட்சி அமைப்பதற்கு விஜய்க்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன!