நெருங்கும் சட்டமன்ற தேர்தல்…2-ஆவது முறையாக அமித் ஷா தமிழகம் வருகை…முக்கிய ஆலோசனை!
Union Home Minister Amit Shah: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2- ஆவது முறையாக வருகிற ஜனவரி 28- ஆம் தேதி தமிழகத்துக்கு வருகை தர உள்ளார். அப்போது, கூட்டணி கட்சி தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற வகையில் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி ( அன்புமணி தரப்பு) தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதி கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றன. இந்த கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக அந்தக் கட்சியின் தலைமை மும்முரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியை இறுதி செய்யும் பணிகளிலும், தொகுதி பங்கீடு பணிகளிலும் தீவிரம் காட்டப்படுகின்றன.
தேர்தல் பணிகளில் கட்சிகள் தீவிரம்
மேலும், கூட்டணி விவகாரம், தொகுதி பங்கீடு விவகாரம், பொதுக்கூட்டம், பிரச்சாரம், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, செயற்குழு கூட்டம், விருப்பமனு பெறுதல் என்பன உள்ளிட்ட பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.
மேலும் படிக்க: 170 தொகுதிகளில் அதிமுக போட்டி?.. விறுவிறுக்கும் வேட்பாளர்கள் தேர்வு..
மோடியை தொடர்ந்து அமித் ஷாவும் தமிழகம் வருகை
தற்போது, அவரது வருகையை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், வருகிற ஜனவரி 28, 29 ஆகிய தேதிகளில் 2 நாள் பயணமாக தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமித் ஷாவின் இந்த வருகையின் போது, சென்னையில் பாஜக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் ஆகியோரை சந்தித்து கூட்டணியை மேலும் வலுப்படுத்துவது மற்றும் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பது என்பன உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மேலும், சில முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
2- ஆவது முறையாக தமிழகம் வரும் அமித் ஷா
ஏற்கெனவே, கடந்த சில வாரங்களுக்கு முன்பு மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா புதுக்கோட்டைக்கு வருகை தந்திருந்தார். அங்கு, பாஜக மக்கள் சந்திப்பு பயண நிறைவு விழாவில் பங்கேற்று பேசியிருந்தார். இந்த நிலையில், தற்போது, 2- ஆவது முறையாக அமித் ஷா தமிழகம் வர உள்ளார். அண்மையில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து சென்ற நிலையில், தற்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருவது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: நான் அரசியலில் 62 வருடங்களாக இருக்கிறேன்.. கமலை போல் இப்போது வந்தவனா? – வைகோ கேள்வி..