Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

170 தொகுதிகளில் அதிமுக போட்டி?.. விறுவிறுக்கும் வேட்பாளர்கள் தேர்வு..

AIADMK Candidate selection; இந்த நேர்காணலின்போது, ​​வேட்பாளர்களிடம் அவர்களின் தொகுதியில் உள்ள செல்வாக்கு, கட்சிக்கு அவர்கள் செய்த பணிகள் மற்றும் திமுக குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. அரசுக்கு எதிரான தொகுதிகளில் உள்ள கள நிலவரம் குறித்து எடப்பாடி பழனிசாமி நேரடியாகக் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.

170 தொகுதிகளில் அதிமுக போட்டி?.. விறுவிறுக்கும் வேட்பாளர்கள் தேர்வு..
எடப்பாடி பழனிசாமி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 25 Jan 2026 07:02 AM IST

சென்னை, ஜனவரி 25: அதிமுகவில் வேட்பாளர் தேர்வுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கான நேர்காணல்கள் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமையலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றன. விரைவில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி, அதிமுக சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து மொத்தம் 10,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அதிமுக சார்பில் போட்டியிட விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் செயல்முறை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த மாதம் 9-ஆம் தேதி தொடங்கியது. இந்த நேர்காணல்கள் 10, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் தொடர்ந்தன.

மேலும் படிக்க : அதிமுக – பாஜக கூட்டணி.. பாமக, அமமுகவிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் எத்தனை?

இபிஎஸ் தலைமையில் நேர்காணல்:

பொங்கல் பண்டிகை மற்றும் பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த பொதுக்கூட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நேர்காணல் செயல்முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், (ஜனவரி 24) நேற்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தவர்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேர்காணல் நடத்தப்பட்டது.

அதேபோல், மாலையில் வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் அதிமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த நேர்காணல்களின்போது, ​​அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் உடனிருந்தனர்.

170 தொகுதிகளில் அதிமுக போட்டி?

இந்த நேர்காணலின்போது, ​​வேட்பாளர்களிடம் அவர்களின் தொகுதியில் உள்ள செல்வாக்கு, கட்சிக்கு அவர்கள் செய்த பணிகள் மற்றும் திமுக குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. அரசுக்கு எதிரான தொகுதிகளில் உள்ள கள நிலவரம் குறித்து எடப்பாடி பழனிசாமி நேரடியாகக் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களைக் கவர எந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திறம்படச் செயல்படுகிறார்கள் என்பதை எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே ஒரு ரகசிய ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? இன்றும் நாளையும் நடக்கும் சிறப்பு முகாம்..

இதன் அடிப்படையில், ஆற்றல்மிக்க அதிமுக நிர்வாகிகளுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதான கட்சியாக உள்ள அதிமுக தனது தலைமையில் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி, 170 தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ள நிலையில், வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணி அதிவேகமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.