“மீண்டும் சகோதரர்களாக இணைந்துவிட்டோம்”.. இபிஎஸ், டிடிவி தினகரன் கூட்டாக பேட்டி!!
இருவரும் ஒப்புதல் அளித்த பிறகுதான் இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டது. இதில் யாருக்கும் எந்த மிரட்டலோ, அழுத்தமோ இல்லை. ஏப்ரல் 2017-க்கு முன்பு இருந்ததைப் போலவே, நாங்கள் சகோதரர்களாக மீண்டும் இணைந்துள்ளோம். எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை என டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி கூட்டாக கூறியுள்ளனர்.
சென்னை, ஜனவரி 24: அமமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்த பிறகு, எடப்பாடி பழனிசாமியும் டிடிவி தினகரனும் மதுராந்தகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிப் பொதுக்கூட்டத்தில் சந்தித்தனர். மேடையில், இருவரும் ஒருவரையொருவர் வாழ்த்தி கைகுலுக்கிக் கொண்டனர். மேடையில் பேசும்போது, டிடிவி தினகரன்,”சகோதரர், மதிப்பிற்குரிய எடப்பாடி பழனிசாமி” என்று குறிப்பிட்டார். அதேபோல், எடப்பாடி பழனிசாமி பேசியபோது, டிடிவி தினகரனை “மதிப்பிற்குரிய, மாண்புமிகு சகோதரர் டிடிவி தினகரன்” என்று குறிப்பிட்டார். கூட்டத்திற்குப் பிறகு, அக்கூட்டணித் தலைவர்களான இபிஎஸ், டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ், நயினார் நாகேந்திரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, அவர்கள் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்தனர்.
இதையும் படிக்க : ‘அதிமுக உடனான கூட்டணியால் அதிருப்தி’.. திமுகவில் இணைந்த அமமுக துணை பொதுச்செயாலளர்..
அம்மா வளர்த்த பிள்ளைகள்:
பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமியிடம், தினகரனுடன் இணைந்தது குறித்து கேள்வி எழுப்பியபோது, நானும் சரி, டிடிவி தினகரனும் சரி ஒன்றாக இணைந்து செயல்படுகிறோம். நாங்கள் எல்லாம் அம்மா வளர்த்த பிள்ளைகள் என்று தெளிவுபடுத்திவிட்டோம். எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தது. எப்போது இணைந்தோமோ அதை மறந்துவிட்டோம். ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளைத் தொடரவும், தமிழகத்தில் மீண்டும் அம்மா ஆட்சியை கொண்டு வரவும் நாங்கள் இணைந்துள்ளோம் என்று பதிலளித்தார்.
இது எங்கள் குடும்பப் பிரச்சினை:
தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன், இது எங்கள் குடும்பப் பிரச்சினை. ஒரே குடும்பமாக, உடன் பிறந்த சகோதரர்களைப் போல வாழ்ந்த எங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை. இது ஒரு கட்சிப் பிரச்சினை. எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, நாங்கள் பிரிந்து சென்றது உண்மைதான். எனினும், 2021-ல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு முயற்சி செய்தார். அது அப்போது கைகூடவில்லை. 2026ல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் என்னிடம் பேசியபோது, நானும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றுசேர்ந்து, மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப உதவ வேண்டும் என்று கேட்டார்கள்.
மீண்டும் சகோதரர்களாக இணைந்துவிட்டோம்:
நாங்கள் இருவரும் ஒப்புதல் அளித்த பிறகுதான் இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டது. இதில் யாருக்கும் எந்த மிரட்டலோ, அழுத்தமோ இல்லை. ஏப்ரல் 2017-க்கு முன்பு இருந்ததைப் போலவே, நாங்கள் சகோதரர்களாக மீண்டும் இணைந்துள்ளோம். எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஒரே தாயின் பிள்ளைகள் போல் இருந்த நாங்கள், ஒருவரையொருவர் பார்த்த கணமே மீண்டும் இணைந்துவிட்டோம். இனிமேல், நாங்கள் ஒன்றாகப் பிரச்சாரம் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
வைகோ ஸ்டாலினை விமர்சித்தார்:
மதிமுக தலைவர் வைகோ திமுகவையும் அதன் தலைவர் ஸ்டாலின் அவர்களை பேசுனது போல வேறு எந்த தலைவரும் பேசியிருக்க முடியாது.
அதெல்லாம் தொலைக்காட்சில போட மாட்டீங்க!
அறிவாலயத்துல மேல் தளத்துல ரெய்டு,கீழே கூட்டணி பேச்சுவார்த்தை..
இப்படிபட்ட கட்சியெல்லாம் கூட்டணி வைக்கும் போது எங்களுக்கு என்ன… pic.twitter.com/cSBFqkvuzO
— AIADMK IT WING – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) January 23, 2026
தொடர்ந்து, பேசிய இபிஎஸ், வைகோ திமுகவை எந்த அளவிற்கு விமர்சித்தார் மு.க.ஸ்டாலினை எந்த அளவிற்கு விமர்சித்தார்? அதையெல்லாம் நீங்கள் கேட்கவில்லை. அந்த அளவிற்கு வேறு எந்தத் தலைவராலும் பேசியிருக்க முடியாது. அப்படி கடுமையாகப் பேசிய அதே வைகோ, மு.க.ஸ்டாலினுடன் அதே கூட்டணியில் சேர்ந்தார்.
இதையும் படிக்க : அதிமுக – பாஜக கூட்டணி.. பாமக, அமமுகவிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் எத்தனை?
அதேபோல், காங்கிரஸ் கட்சி அவசரநிலை மற்றும் மிசா சட்டங்களைக் கொண்டு வந்தபோது, திமுக என்ன சொன்னது? அவசரநிலையின் போது, மிசா சட்டத்தால் நாங்கள் அனைவரும் சிறைக்குச் சென்று துன்பங்களை அனுபவித்தோம் என்று சொன்னார்கள். இப்படிப்பட்ட கட்சிகள் கூட்டணி அமைக்கும்போது, எங்களுக்கு எந்தவிதமான சங்கடமோ, மனக்கசப்போ இல்லை. நாங்கள் ஒருமித்த நோக்கத்துடன் செயல்படுகிறோம் என்று அவர் கூறினார்.