மீனவர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகள்… அள்ளி வீசிய தவெக தலைவர் விஜய்.. என்னென்ன உள்ளன!
Tvk Leader Vijay Promises To Fishermen : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீனவர்களுக்கான பாதுகாப்பு உரிமை தொகை ரூ.20 ஆயிரம், மீனவர்கள் படகு பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை கன்னியாகுமரி பரப்புரையில் வெளியிட்டார்.

மீனவர்களுக்கான வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய்
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து அந்தக் கட்சியின் தலைவர் விஜய் வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி, தவெக தலைவர் விஜய் இன்று ஞாயிற்றுக்கிழமை ( ஏப்ரல் 12) கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டிருந்தார். இதில், கன்னியாகுமரி பேருந்து நிலையம் அருகே விஜய் மீனவர்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:
மேலும் படிக்க: விஜய்யின் பிரச்சாரம் அடுத்தடுத்து ரத்தாவது ஏன்?.. ஆதங்கத்தில் தொண்டர்கள்.. வெளியான பரபரப்பு தகவல்..
- தமிழகத்தில் கடல் தாய் வீடு திட்டத்தின் கீழ், கடலோரத்தில் உள்ள குடிசை வீடுகள் மற்றும் சிதிலமடைந்த குடியிருப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு புதிய வீடுகள் கட்டுவதற்காக வீட்டு வசதி வாரியம் அமைக்கப்படும்.
- இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் தமிழக மீனவர்களின் படகுகள் திரும்ப பெறப்படும் வரையும், தூதரம் வழியாக பேச்சுவார்த்தை நடத்தும் வரையும் வங்கி கடன்களை திருப்பி செலுத்தவும், மீனவர்களின் குழுவுக்கு ஆதரவு அளிக்கவும் மீனவர்களுக்கு படகு பாதுகாப்பு நிதி என்ற பெயரில் அதன் உரிமையாளர்களுக்கு ரூ.5 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும்.
- மீனவர்களுக்கு பாதுகாப்பு உரிமை தொகை ஆண்டு மீன்பிடி தடை காலத்துக்கு ஏற்ப மீன்வர்கள் பாதுகாப்பு நிதி ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும்.
- மீனவர்கள் எரிபொருள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், இயந்திர படகுகளுக்கான மாதாந்திர டீசல் ஒதுக்கீட்டை 1,800 லிட்டரில் இருந்து 3,500 லிட்டராக உயர்த்தப்படும்.
- ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.15 என்ற நிலையான மானியம் நேரடியாக மீனவர்களின் வங்கி கணக்குக்கு செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.
திட்டங்கள் அனைத்தும் நேசிப்பின் வெளிப்பாடாகும்
மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகள் அனைத்தும் வெறும் தொடக்கம் மட்டுமே. தேர்தலுக்காக திராவிட முன்னேற்ற கழகம் அளிக்கும் வெற்று வாக்குறுதிகளோ வாயில் வடை சுடுவதோ கிடையாது. இது உங்களை உண்மையாக நேசிப்பதன் வெளிப்பாடு ஆகும். இப்படிதான் நான் உங்களை உண்மையாக நேசிக்கிறேன். அனைவரும் விசில் சின்னத்துக்கு வாக்களியுங்கள். இது ஒரு விசில் புரட்சி தேர்தலாக இருக்க வேண்டும். தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைய வேண்டும் என்று தெரிவித்தார்.
தேர்தலுக்காக வாக்குறுதிகளை வெளியிட்ட கட்சிகள்
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட தொடங்கின. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் அரசியல் கட்சிகள் தங்களுக்கான வாக்குறுதிகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகள் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தன. இந்த நிலையில், கன்னியாகுமரியில் தவெக தலைவர் விஜய் மீனவர்களுக்கான பல்வேறு வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க: எடப்பாடி தொகுதியில் யாருக்கு ஆதரவு கொடுப்பது?.. குழப்பத்தில் தவெக தொண்டர்கள்!!