முதல்வர் வேட்பாளரை மாற்றினால் நாங்கள் ஆதரவு தர தயார்.. எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கும் டிடிவி தினகரன்..
TTV Dinakaran: ஸ்ரீவில்லிப்புத்தூரில் சாமி தரிசனம் செய்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “ துரோகத்தை ஏற்றுக்கொண்டு நாங்கள் கூட்டணிக்கு செல்ல முடியாது. அதிமுக சார்பில் நாங்கள் ஏற்றுக்கொள்ளும் வேட்பாளரை அறிவித்தால், நாங்கள் ஆதரிக்க தயாராக உள்ளோம்” என தெரிவித்துள்ளார்,

கோப்பு புகைப்படம்
ஸ்ரீவில்லிப்புத்தூர், செப்டம்பர் 10, 2025: அதிமுகவில் நாங்கள் கூறும் முதல்வர் வேட்பாளரை நிறுத்தினால், முழு ஆதரவு தர தயாராக உள்ளோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவில் யார்மீதும் எந்த வருத்தமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அதிமுகவில் உட்கட்சி விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்க உத்தரவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அதேபோல், பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் தொடர்ந்து கருத்து தெரிவித்துவருகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க, செப்டம்பர் 8, 2025 அன்று செங்கோட்டையன் டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து வந்தார். இப்படி அதிமுகவில் சலசலப்புக்கு பஞ்சம் இல்லாத நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஏற்கனவே அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் விலகியுள்ளனர்.
மேலும் படிக்க: அமித்ஷாவுடன் சந்திப்பு.. நடந்ததை வெளிப்படையாக சொன்ன செங்கோட்டையன்!
மேலும், “எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்து விட்டார், அவரை ஏற்றுக்கொள்ள முடியாது” எனவும் டிடிவி தினகரன் தொடர்ந்து கூறிவருகிறார். இது போன்ற சூழலில், செப்டம்பர் 9, 2025 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சுவாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது,
பாஜகவில் யார் மீதும் வருத்தம் இல்லை – டிடிவி:
“குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் சி. பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றது தமிழர்களுக்கு பெருமை அளிக்கக்கூடிய விஷயம். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியதற்கான காரணங்களை நான் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். தனிப்பட்ட முறையில் எனக்கு நயினார் நாகேந்திரன் மீது எந்த வருத்தமும் இல்லை. அவர் எனக்கு எப்போதும் ஒரு நல்ல நண்பர். அவர் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்தித்து பேசலாம். பாஜகவில் எனக்கு தனிப்பட்ட முறையில் யார்மீதும் வருத்தம் இல்லை.
மேலும் படிக்க: ஒரே நாளில் 3 மாவட்டங்கள்.. செப்டம்பர் முதல் டிசம்பர் வரை.. தலைவர் விஜய் சூறாவளி சுற்றுப்பயணம்..
துரோகத்தின் மறு உருவம் எடப்பாடி பழனிசாமி:
துரோகத்தை ஏற்றுக்கொண்டு நாங்கள் கூட்டணிக்கு செல்ல முடியாது. அதிமுக சார்பில் நாங்கள் ஏற்றுக்கொள்ளும் வேட்பாளரை அறிவித்தால், நாங்கள் ஆதரிக்க தயாராக உள்ளோம். பழனிசாமி பதவியில் அமர வைத்தவருக்கும் துரோகம் செய்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பில் உதவி செய்தவருக்கும் துரோகம், ஆட்சி தொடர காரணமாக இருந்தவர்களுக்கும் துரோகம். இப்படி துரோகத்தின் மறு உருவமாக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
செங்கோட்டையனின் நல்ல முயற்சி வெற்றி பெற வேண்டும்:
அதேபோல் அமைதி பூங்காவாக உள்ள தென் தமிழகத்தை தேவையற்ற விஷயங்களை பேசி கலக்குகிறார். பசும்பொன் தேவர் பெயரில் பழனிசாமி செய்யும் சமூக விரோத அறிவிப்பை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எம். ஜி. ஆர்., ஜெயலலிதா காலத்தில் அதிமுக கோட்டையாக இருந்த தென் தமிழகம், தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் பாதாளத்திற்கு சென்று விட்டது. மக்களைப் பொறுத்தவரையில் பழனிசாமி தவறான பாதையில் செயல்படுகிறார். செங்கோட்டையனின் நல்ல முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பமாகும்.” எனக் குறிப்பிட்டார்.