அமித்ஷாவுடன் சந்திப்பு.. நடந்ததை வெளிப்படையாக சொன்ன செங்கோட்டையன்!
KA Sengottaiyan: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியுள்ளார். அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ள பிறகு இந்த சந்திப்பு நடைபெற்றது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பு, கட்சி விவகாரங்கள் அவர் பேசியதாகத் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர், செப்டம்பர் 9: மன அமைதிக்காக ஹரித்வார் செல்வதாக கூறியிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியதாக தெரிவித்துள்ளார். இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “நேற்றைய தினம் (செப்டம்பர் 8) நான் பயணம் மேற்கொள்ளும் முன் செய்தியாளர்கள் சந்திப்பில் ஹரித்துவார் செல்கிறேன் என கூறியிருந்தேன். நான் டெல்லி சென்ற உடனேயே உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்கான அனுமதி கிடைத்தது. அதன் மூலம் உள்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. இன்றைய அரசியல் சூழ்நிலை பற்றி கருத்துக்கள் அங்கு தெரிவிக்கப்பட்டது.
எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்தோடு, அதிமுக வலுப்பெற வேண்டும் என நினைத்து கருத்துக்களை அவரிடத்தில் எடுத்து சொன்னேன். இந்த கருத்துகள் அடிப்படையில் பல்வேறு விவாதங்கள் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்ல உரிமையுண்டு. அதேசமயம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த நேரத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அங்கு வருகை தந்தார்.
அவரிடத்தில் ஈரோட்டில் இருந்து புறப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றி அமைக்கப்பட்டதால் சென்னைக்கு அதிகாலையில் 3 மணிக்கு சென்று விடுகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து பேசினேன். அந்த நேரத்தை மாற்ற வேண்டும் என கேட்டு கொண்டேன். அவர் அதுதொடர்பான விவரங்களை குறிப்பிட்டு தருமாறும் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்” என செங்கோட்டையன் கூறினார்.




Also Read: AIADMK: கட்சியை உடைக்க பார்க்கின்றனர்.. செங்கோட்டையனுக்கு இபிஎஸ் பதிலடி!
நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்த நிலையில் அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கி இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆகியோரின் கட்சி பொறுப்புகளை பறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்தார்.
இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பான நடவடிக்கைகளை 10 நாட்களில் தொடங்க வேண்டும் என செங்கோட்டையன் கெடு விதித்துள்ள நிலையில் அவரின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் செங்கோட்டையன் டெல்லிக்கு பயணமானார். இதற்கிடையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் விலகியதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
Also Read: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு!
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செப்டம்பர் 11ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.