Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

MK Stalin: செங்கோட்டையன் பதவி பறிப்பு.. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பதில்!

ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழ்நாடு திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தின் விளைவாக ரூ. 15,516 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இதனால் 17,613 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MK Stalin: செங்கோட்டையன் பதவி பறிப்பு.. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பதில்!
செங்கோட்டையன் - மு.க.ஸ்டாலின்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 08 Sep 2025 11:45 AM IST

சென்னை, செப்டம்பர் 8: முதலீடுகளை ஈர்ப்பதற்கான வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உங்கள் வெளிநாட்டு பயணம் என்பது உங்களுடைய முதலீட்டுக்காக தான் நடத்தியது என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதலீடு செய்ய சென்றதை கொஞ்சம் திரித்து சொல்லியிருக்கிறார். என்னை பொறுத்தவரை சுயமரியாதை கொள்கைகளை முதலீடு செய்து கொண்டு வந்திருக்கிறேன். தந்தை பெரியாருடைய உணர்வுகளை, பெரியாரைப் பற்றி அந்த நாட்டில் முதலீடு செய்து வந்திருக்கிறேன்.  அதுதான் உண்மை அந்த அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்திருப்பார் என நினைக்கிறேன் என கூறினார்.

செங்கோட்டையன் பதவி பறிப்பு பற்றி கருத்து

தொடர்ந்து அவரிடம் அதிமுகவில் செங்கோட்டையனின் பதவி பறிப்பு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என கேட்கப்பட்டது.  அதற்கு ஆக்கபூர்வமான கருத்துக்களை பேசிக் கொண்டிருக்கிறோம்.  இப்படி அக்கப்போரான கேள்விகளை கேட்கிறீர்களே?, விட்டு விடுங்கள் என தெரிவித்தார். தொடர்ந்து ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தில் தமிழர்களை சந்தித்து உரையாடினீர்கள். அவர்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தமிழர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அளவு கடந்த ஆர்வமாக உள்ளனர்.  என்னிடம் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக போட்டி போட்டுக் கொண்டு கூறி இருக்கிறார்கள் அந்த நிலையை நாங்கள் நேரடியாகவே பார்த்தோம் என கூறினார்.

Also Read: KA Sengottaiyan: இபிஎஸ் உடன் மோதல்? – செங்கோட்டையன் எடுத்த முடிவு!

மௌன புரட்சி


இதனையடுத்து மத்திய அரசு சில திட்டங்களில் தமிழக அரசை புறக்கணித்து வருகிறது. இதற்கு திமுக அரசு மவுனம் சாதித்து  வருகிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின்,  “மௌனம் இல்லை. நாங்கள் மௌன புரட்சி செய்து கொண்டிருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை மத்திய அரசு எங்களை எவ்வளவு தான் புறக்கணித்தாலும் அதையும் மீறி அனைத்து துறைகளிலும் முதலிடத்திற்கு வந்து கொண்டிருக்கிறோம்.  அதுதான் முக்கியம்” என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தனது வெளிநாட்டு பயணத்தை மிகச் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்த தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா மற்றும் அவருக்குத் துணையாக இருந்த அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் ஒரு துடிப்பான அமைச்சர் என்பதை இந்த வெளிநாட்டு பயணத்தின் மூலம் டிஆர்பி ராஜா நிரூபித்து இருக்கிறார் என அவர் புகழாரம் சூட்டினார்.

Also Read: MK Stalin: பயணம் நிறைவுறுகிறது! – தமிழ்நாடு திரும்பும் முதலமைச்சர் ஸ்டாலின்!

மேலும் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மொத்தமாக ரூபாய் 15,516 கோடிக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது