MK Stalin: பயணம் நிறைவுறுகிறது! – தமிழ்நாடு திரும்பும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM Stalin Europe visit: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஐரோப்பா பயணத்தின் மூலம் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தில் இருந்து ரூ.15,516 கோடி முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்த்துள்ளார். இதனால் 17,613-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செப்டம்பர் 7: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு திரும்புவதை முன்னிட்டு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜெர்மனி நாட்டில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய எனது பயணம் லண்டன் மாநகரில் அவர்கள் வாழ்த்தி வழியனுப்புவதுடன் நிறைவுறுகிறது. அளவில்லா அன்பு பொலிந்த உள்ளங்களின் எண்ணில் அடங்க நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன். என்னை இத்தனை நாளும் தங்கள் சகோதரனாய் கவனித்துக் கொண்ட தமிழ் சொந்தங்களுக்கு என் அன்பை நன்றியாய் நவில்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வெளியிட்ட பதிவு
#Germany-யில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய #TNRising பயணம், இலண்டன் மாநகரில், அவர்கள் வாழ்த்தி வழியனுப்ப நிறைவுறுகிறது!
அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்.
இத்தனை நாளும் தங்கள் சகோதரனாய் என்னை கவனித்துக்கொண்ட… pic.twitter.com/wfiYJF05KE
— M.K.Stalin (@mkstalin) September 7, 2025
முதலீடுகளை ஈர்த்த முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “TNRising என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். முதற்கட்டமாக ஜெர்மனி சென்ற முதலமைச்சர் அங்கு முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் நிறுவன நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார். இதன் பின்னர் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரூ.7,020 கோடிக்கு கையெழுத்தாகியது.
Also Read: லண்டன் சென்ற முதல்வர் ஸ்டாலின்… தமிழர்கள் உற்சாக வரவேற்பு.. முதலீட்டாளர்களுக்கு மீட்டிங்!
இதன் மூலம் 15,320 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜென்மனியை தொடர்ந்து இங்கிலாந்து சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அங்கே லண்டனில் முதலீட்டாளர்கள் சந்திப்பை நடத்தினார். இதில் இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்துஜா குழுமம், மின்சார வாகனங்களுக்கான செல் பேட்டரி உற்பத்தி, பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்பு மற்றும் மின்சார சார்ஜிங் நிலையங்களுக்கான வணிகங்கள் ரூ. 7,500 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 1000க்கும் மேற்பட்டோருக்கு மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்பை விரிவுபடுத்துவதால் வேலைவாய்ப்புகள் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் மூன்றாவது தொழில் முதலீட்டை அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள அதன் தொழில்நுட்பம் மையத்தை மேலும் ரூ.176 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யவுள்ளது. இங்கிலாந்தில் 1,293 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ.720 கோடி செலவில் மதிப்பீட்டில் உற்பத்தி, ஜவுளி, தொழில்நுட்பம், வடிவமைப்பு கல்வி ஆகிய துறைகளில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே ஜெர்மனி இங்கிலாந்து பயணத்தால் தமிழகம் மொத்தமாக ரூபாய் 15,516 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது.
Also Read: ஜெர்மனி, லண்டனில் குவிந்த ரூ.15,516 கோடி முதலீடு.. 17,613 பேருக்கு வேலை.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
இதன் மூலம் 17,613 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, முதல்வரின் செயலாளர் உமா நாத், தொழில்துறை செயலாளர் அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண்மை இயக்குனர் தாரேஸ் அகமது ஆகியோர் உடனிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.